பாடல் எண் :3540

"நம்பர்தா மடிமை யாற்றா ராகியே நண்ணி னாரேல்
உம்பரார் கோனு மாலு மயனுநே ருணர வொண்ணா
எம்பிரா னிசைந்தா லேவப் பெறுவதே! யிதனுக் குள்ளங்
கம்பியா தவனை யான்முன் காணுநா ளெந்நா?" ளென்று,
386

(இ-ள்) நம்பர்...நண்ணினாரேல் - இறைவர் தாம் அடியார் துன்பம் பொறாது எழுந்தருளி வந்தாராகில்; உம்பரார் கோனும்...ஏவப் பெறுவதே - தேவராசனாகிய இந்திரனும் விட்டுணுவும் பிரமனும் நேர் உணரவும் இயலாதவராகிய எமது பெருமான் அவ்வாறிசைந்து வந்தாலும் ஏவுதல் செய்யலாமோ?; இதனுக்கு...எந்நாள் என்று - இப்பாவச் செயலுக்கு மனநடுங்காதவனை என் முன்னே காணும் நாளும் எந்நாளோ? என்று சொல்லி;
(வி-ரை) அடிமை ஆற்றாராகிய - தாம் அடிமை நெறியினில்நின்று ஒழுகிக் காட்டுபவராகியே; ஆறு - நெறி என்றலுமாம். அடிமையற்றாராகியே - என்பது பாடமாயின் தாழ்வாகிய இச்சிறு வேலையைத் தானும் ஏவிச் செய்விப்பதற்குரிய அடிமைகள் ஒருவரும் தமக்கு இல்லாது தாமே போந்தாரானாலும் என்றுரைக்க. நம்பர் தமக்கு அடிமை செய்வாராக வேறு அடிமையற்றுப் போய்த்தாம் இவ்வாறு இகழ்வு செய்தேனும் இவ்வடியவனைப் பெறவேண்டு நிலையினில் வந்தாராயினும் என்றலுமாம்; ஆறு - வழி.
இசைந்தால் - பெரும் கருணையினால் இசைந்தாலும் என்க. சிறப்பும்மை தொக்கது.
ஏவப் பெறுவதே? - ஏகாரம் வினா; ஏவப் பெறுவது தக்கதன்று என எதிர்மறைப் பொருள் தந்தது. ஏவப்பெறுதல் - ஒரு சொல்.
இதனுக்கு....எந்தாள் - இப்பெரும் பிழையைச் செய்ய மன நடுங்காதவனைக் காணுவதும் ஒருநாளோ?
கோனும் மாலும் அயனும் - எண்ணும்மைகள். சிறப்பு முணர்த்தின.
உள்ளங் கம்பியாதவன் - ஏனை எவர்களுக்கும் மன நடுங்கும் இச்செயலைச் சிறிதும் நடுங்காது செய்தவன்.
முன் - கண்ணாற் காணும்படி; "தீயாரைக் காண்பதும் தீது" என்பாராதலின் அவ்வாறாகிய பெருந்தீங்கு என்பார் காணுநாள் - என்றார்.