"அரிவைகா ரணத்தி னாலே யாளுடைப் பரமர் தம்மை இரவினிற் றூது போக வேவியங் கிருந்தான் றன்னை வரவெதிர் காண்பே னாகில் வருவதென் னாங்கொ?" லென்று விரவிய செற்றம் பற்றி விள்ளுமுள் ளத்த ராகி, | 387 | (இ-ள்) "அரிவை...என்னாங் கொல்" என்று - பெண்ணின் பொருட்டு ஆளுடைய பரமசிவனை இரவிலே தூது செல்லும்படி ஏவி அங்கே இருந்தவனை என் எதிர்வரக் காண்பேனாகில் என்ன விளைந்துவிடுமோ? என்று; விரவிய....உள்ளத்தராகி - மூண்ட சினத்தினாலே வெடிப்பது போன்று விம்மும் உள்ளத்தினை யுடையாராகி; (வி-ரை) அரிவை காரணத்தினாலே - இகழ்ச்சிக் குறிப்புப்படக் கூறியது. முன்னும் (3539) கூறியது காண்க. அரிவை - பெண்ணின் ஊடல் தீர்க்கும் என்க. ஏவி அங்கு இருந்தான் - ஏவி அதன் பின்னும் உயிர் தாங்கியிருந்தான் என்றதும் குறிப்பு; ஏவியபின், வீதியில் அவர் நடக்கவும் தான் இருந்த விடத்தே சுகமாய் இருக்கவும் உள்ளவன் என்பதம் குறிப்பு.அங்கு - பரவையார் மாளிகையில் என்றலுமாம். இரவினில் - உலகியல் ஏவலாளரும் தொழில் செய்யாத இரவினில் ஏவி. வரவெதிர்....என்னாங்கொல் - எதிர் வரக் காண்பேனாகில் என்க; எதிர்வர - தாம் அவரைக் காணச் செல்வதில்லை யாயினும் அவரே வரக்கண்டால் என்க. இருந்தான் - இருந்தவன் - வினைப்பெயர்; அவரது பெயராற் கூறாது இவ்வாறு கூறியது செற்றம்பற்றி; அங்கு இருந்தானை இங்கு வர என்க; விதிவசத்தாற் காண நேரின் என்க; எதிர் - என் கண்ணெதிர்; வருவது - விளைவது; கொல் ஐயப்பொருள் தரும் இடைச் சொல். என்னாங்கொல் - வினா என்ன கொலைப்பழி விளையுமோ; என்ற நயங்குறித்தது. சிவாபராதத்தினைக் கண்டபோது அது செய்தாரைக் கொல்லுதலும், அது கூடாதபோது தாம் இறந்து படுதலும், அல்லது அவ்விடம் விட்ட கலுதலும் செய்க என்பது விதியாதலின் இவற்றுள் எது செய்ய நேருமோ என்பார் என்னாம் கொல் என்றார். கொல் - (ஏவல்) கொல்லுதலே துணியத்தக்கது என்ற குறிப்புப்பட நிற்றல் காண்க; யாரைக் கொல்வது என்ற செயப்படுபொருள் வெளிப்படாமையின் தம்மையே கொல்க என்ற உட்குறிப்பும் கொண்டது. பிற சரித விளைவில், நம்பிகளே எதிர் வரவும், அதனைக் காண்பதற்கு முன் கலிக்காமனார் தம்மையே கொலைசெய்து கொள்வதும் ஆகிய நிகழ்ச்சிகளின் முற் குறிப்பும் காண்க, தூய அன்பின் விளைந்தெழுபவை மெய்த்திருவாக்குக்களாகப் பின்னர்ப் பலிப்பது நியதி. விரவிய செற்றம் - பொருந்தத் தக்க; தகாத சினமே விலக்கத் தக்கது; இஃது அவ்வாறன்றி அன்பின் பெருக்காற் பொருந்த வருவது என்பதாம்; விரவுதல் - பொருந்துதல்; செற்றம் - செறுத்தலினை உட்கொண்டு பின்னர் விளைவிக்கும் நிலைக்குறிப்பு. விள்ளும் உள்ளம் - விள்ளுதல் - பிளந்து வேறுபடுதல்; உள்ளே மூண்டெழுதல்; உள்ளத்தராகி ஓங்கும் - என வரும்பாட்டுடன் முடிக்க. விள்ளுதல் - சொல்லுதல் என்று கொண்டு, மனமானது உள்ளே நின்று கூற என்றலுமாம். உள்ளம் என்ற குறிப்புமது. |
|
|