பாடல் எண் :3542

ஈறிலாப் புகழி னோங்கு மேயர்கோ னார்த மெண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப் பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்கதனைவிண் ணப்பஞ் செய்து,
388

(இ-ள்) ஈறிலா...கேட்டு - எல்லையில்லாத புகழுடனே ஓங்கும் ஏயர்கோன் கலிக்காமருடைய இவ்வாறு எண்ணப்படுவதாகிய இப்பேற்றினைத் தமக்குரிமையாகப் பெற்ற நம்பிகள் இதனைக் கேட்டு; பிழை உடன்படுவாராகி - தாம் செய்தது பிழை என்று உடன்படுவாராய்; வேறு இனி...வேண்டுவார் - இனி இதற்கு வேறாகத் தீர்வுதன்னை வேண்டுவாராய்; விரிபூங் கொன்றை....விண்ணப்பஞ் செய்து - விரிந்த அழகிய கொன்றையினையும் கங்கையினையும் அணிந்து கொண்ட சடையினையுடைய சிவபெருமானிடம் அதனை விண்ணப்பஞ் செய்து,
(வி-ரை) ஈறு இலாப் புகழினோங்கும் - புகழ் - விள்ளும் உள்ளமுடைமையே புகழ் எனப்பட்டது.
ஓங்கும் - என்றது இப்புகழினால் அதுவே ஆறாக அந்நம்பிகளுக்கு நண்பருமாகும் பெருமையினை இனிப் பெற நிற்பது குறித்தது; "தூதுவிட்டவர்க்கே நண்பாம் வள்ளலார்" (3563) என்று ஆசிரியர் இதனை அவரது புகழின் சிறப்பாக எடுத்து முடித்து வடித்துக் காட்டியருளுதல் காண்க.
எண்ணப்பேறு - எண்ண வருவதாகிய பேறு; செற்றம் பற்றிய நிலையே பேறாகும் என்பதாம். பெரியோர்களது திருவுள்ளத்தினுள் எவ்வாறேயாயினும் எண்ணம் வரப் பெறுதலே ஒருவருக்குச் சிறந்த பாக்கியம் என்பதும், அதுவே அவனுக்குத் திருந்தும் வழி தருவதாகும் என்பதும் மூதறிஞர் துணிபு; "கூறிப் பணிகொள்ளாது ஒறுத்தா லொன்றும் போதுமே" (திருவா);
பேறிது பெற்றார் - நம்பிகள்; கலிக்காமனார் செற்றம் பற்றி எண்ணியதனைப் பேறெனக் கொண்ட பெருமை வாய்ந்தவராதலின் அவ்வாற்றாற் கூறினார்.
பிழை உடன் படுவாராகி - தாம் செய்தது பிழை என்பதனை உடன்பட்டு ஒப்புக்கொள்வாராகி; நம்பிகளது இப்பெருந்தன்மை உலகுக்கு வழிகாட்டி நிற்பதாம். இது கண்டு தக ஒழுகினால் மக்கள் நலம் பெறுவர் என்பது துணிபு.
இனி இதற்கு வேறு தீர்வு - என்க; தீர்வு - கழுவாய்; பிராயச்சித்தம் என்பது வடமொழி வழக்கு; இனி - தீங்கு நிகழ்ந்து விட்டமையான் மேற்செய்யக் கடவது என்பதாம். வேறு தீர்வு - சிவாபராத மாதலின் ஏனைய பழிகள் போலன்றித் தனித்திறம் படைத்த பெருங் கழுவாய் வேண்டப்படுவதென்றபடி. இதுற்கு - சிவாபராதத்துக்கு - கலிக்காமனாரது; செற்றத்துக்கு என்றலுமாம்.
வேண்டுவார் - வேண்டுவாராகி; முற்றெச்சம்.
விரிபூ....விண்ணப்பஞ் செய்து இறைவரால் ஆளாகக் கொள்ளப்பட்டாராதலின் தாம் வேண்டுவனவற்றை யெல்லாம் அவர்பால் விண்ணப்பித்தே பெறும் நியமம் குறித்தது; அன்றியும் சிவாபராதத்துக்கு அவனருளே யன்றி வேறு கழுவாய் நூல்களுள் வகுக்கப்படாமையின் சடையார்பால் விண்ணப்பித்தனர் என்றலுமாம்; சடையார் - பிழைத்தாரையும் பொறுத்தற்கிடமாகிய சடை என்றது குறிப்பு.
விண்ணப்பஞ் செய்து போற்ற - என வரும்பாட்டுடன் முடிக்க.