பாடல் எண் :3543

நாடொறும் பணிந்து போற்ற நாதரு மதனை நோக்கி
நீடியதொண்டர் தம்மு ளிருவரு மேவு நீர்மை
கூடுதல் புரிவா ரேயர் குரிசிலார் தம்பான் மேனி
வாடுறு சூலை தன்னை யருளினார்
வருந்து மாற்றால்.
389

(இ-ள்) நாடொறும் பணிந்து போற்ற - நாள்தோறும் வணங்கித் துதிக்க; நாதரும்...புரிவார் - இறைவரும் அதனைத் திருவுளங் கொண்டு அன்பினால் நீடிய தொண்டர்களிருவரும் தம்முள் நண்பு பூண்டு பொருந்தும் நீர்மையினைக் கூடுமாறு அருள் செய்வாராய்; ஏயர் குரிசிலார்.....வருந்துமாற்றால் - ஏயர் கோனார்பால் அவர் திருமேனி வாடும்படி வருந்தச் செய்யும் வழியினாலே சூலைநோயினை அருளிச் செய்தனர்.
(வி-ரை) நாடொறும் பணிந்து போற்ற - முன் கூறியவாறு விண்ணப்பித்துத் துதிக்க; ஆன்மார்த்த பூசையில் ஆளுடையார்பால் வேண்டுவனவற்றை விண்ணப்பிக்கலாமென்றும், ஒன்றும்வேண்டாது பூசித்துப்பூசையின் பலனையும் அவர் பாலே அர்ப்பணம் செய்தல் வேண்டுமென்றும் இவ்வாறு இரண்டு மரபுகளுண்டு. இவை காமியம், நிட்காமியம் எனப்படுவன. சிவபூசையில் இலயாங்கம் போகாங்கம் என்றவற்றுள், இலயாங்க பூசை என்ற பகுதியின் இறுதியில், "வேண்டுவனவற்றை விண்ணப்பிக்க" என்று சிவாகமங்கள் விதிக்கின்றன. அம்முறை பற்றி நாள்தோறும் நம்பிகள் தம் ஆளுடையாராகிய ஆரூர்ப்பெருமானிடம் விண்ணப்பித்துப் போற்றினர் என்க. திலகவதியம்மையார் தமது தம்பியாராகிய மருணீக்கியார் பொருட்டுச் "சுடரொளியைத் தொழுதென்னை, ஆண்டருளி நீராகி லடியேன்பின் வந்தவனை, ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்று மெடுத்தருள, வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பஞ் செய்தனர்" (1311) என்ற வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது.
நாடொறும் - இவ்வாறு ஒரு நாளன்றிப் பல நாளும் இடை விடாது என்க.
நாதரும் - அதனை நோக்கி - நோக்கி - திரு உள்ளத்திற் கொண்டு ஆளும் கருணை கூர்ந்து; நோக்குதல் - அதனுள் ஊன்றிக் கருதுதல்.
நீடிய - அன்பினால் நீடிய; பழமையால் நீடிய என்றலுமாம்; அன்பினால் நீடுதலாவது இறைவர்பால் வைத்த அன்பின் பெருக்கமொன்றே காரணமாகப் பெருகுதல்; ஈண்டு, உயர் குடியிற் பிறந்து விளங்கும் கலிக்காமனார் நம்பிகள்பாற் செற்றங் கொண்டு பிணங்கியதும், நம்பிகள் அதனை உடன்பட்டதும் ஆளுடைய இறைவர்பால் வைத்த அழுந்திய அன்பொன்றே காரணமாய் நிகழ்ந்தமை குறிக்க; தொண்டின் றிறத்தில் நீடிய காலத்தால் மிகப் பழையதாகிய; இருவர் பாலும் நீடிய தொண்டு, நம்பிகள்பால் வழிவழி யடிமை செய்யும் வேதியர் என்றதும், "ஆளாயினி யல்லே னெனலாமே" என்றதும், கயிலையிலும் பணி செய்தமையும், காண்க; கலிக்காமனார்பால் "எந்தை தந்தை தந்தையெங் கூட்டமெல்லாம், தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழும், இம்பரின் மிக்க வாழ்க்கை யென்னை" (3546) என்ற அவரது திருவாக்குக் காண்க.
தம்முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் - ஒருவருள் ஒருவர் நட்புரிமையிற் பொருந்தும் தன்மையினை விளைவித்தல்; இருவரும் - இங்கு நம்பிகள் மட்டில், பிழையுடன்பட்டுக் கலிக்காமனார்பால் நட்புக் கொண்டனர்; கலிக்காமனார் நம்பிகள்பால் வெறுப்பும் சீற்றமும் கொண்டனர்; இவ்வாறு இருவருள் ஒருவர் மட்டிலன்றி இருவரும் என உம்மை முற்றும்மை, மேவும் - அன்புடன் கலந்திருக்கும். நீர்மை - தன்மையைத் திருவுளங்கொண்டு; கூடுதல் - ஒன்று சேர்தலை; புரிவார் - செய்ய விரும்புவாராகி;
ஏயர் குரிசிலார்....வருந்துமாற்றால் - பிழை யுடன் பட்ட நம்பிகள்பால் அதனை மாற்றும் நிலை புரியாது கலிக்காமனார்பால் இறைவர் சூலை தந்து வருத்திய நிலை என்னையோ? எனின்,"ஆட்பா லவர்க் கருளும் வண்ணமு மாதி மாண்புங், கேட் பான்புகி லளவில்லை கிளக்க வேண்டா" (தேவா) என்பது திருஅருள் ஆணை; ஆதலின் அதுபற்றி நாம் ஆராய்தற்குரிய ரல்லோம். இனி, இதுவேயுமன்றி, இறைவர் தாமே சிவமும் சத்தியுமாயிருந்து எல்லாவுயிர்களுக்கும் போகங்களைக் கூட்டுவித்து நுகரச் செய்தருளிகின்றார்; போகங்கள் நுகர்தற்குரிய உடலையும் கரணங்களையும் போக பண்டங்களையும் தமது சத்தி கொண்டு தாமே கொடுத்தருளிப் போக நுகர்ச்சிக் கண்ணே துணையும் செய்கின்றார்;"போகியா யிருந்து யிர்க்குப் போகத்தைப் புரித லோரார்" (சித்தி.1-70) என்று உடன் பாட்டிலும். "வில்லாடன் மார னிருப்பவும் யோகம் விளைத்த வந்நாட், புல்லா திருந்தன வெல்லா வயிருந்தம் போகத்தையே" என இறைவர் செயலன்றியில்லை என்று எதிர் மறையிலும் இவ்வுண்மைகள் பேசப்படுதல் காண்க; அகப்பொருளிலும், இயற்கைப் புணர்ச்சி என்ற பகுதியில்‘அன்ன மென்னடை யரிவையைத் தந்த, மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்துரைத்தது’ என்னும் கருத்துடைய "தெய்வத்தை மகிழ்ந்தது" என்ற துறையினை விளக்கும் "கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டு தந்த, விளைவை யல்லால்விய வேனய வேன்றெய்வ மிக்கனவே" (6) என்ற திருக்கோவையாரும் காண்க; ஈண்டு நம்பிகள்பாற் பிரிவு புலவி - தூது முதலியவற்றால் வரும் துன்பம் உலகியல் நோக்கிற்கு அவ்வாறு காணப்படினும், உண்மை நிலையில் இடையறாத சிவயோக நெறி நின்ற அப்பரமாசாரியர்பால் அவை சாராத தன்மையும் நாம் மனங்கொள்ளத்தக்கதாம். கலிக்காமனார் அவைபற்றிச் செற்றங்கொண்ட நிலை அவற்றை உலகியல் வழக்கினளவில் வைத்துக் கண்டதனா லாகியதேயன்றி மற்றில்லை; "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே"(தேவா) என்றபடி இவ்வுண்மைகளைக் கலிக்காமனாருக்கு இறைவர் காட்டியருளுதலே இச்சரித நிகழ்ச்சியாம் என்க. ஆயின் இவ்வாறு காட்டி அறிவிக்கும் உபதேசம் ஈண்டுக் கலிக்காமருக்குச் சூலை வர, அவர் வாள் கொண்டு வயிற்றைக் கிழிக்க, அதுகண்டு நம்பிகள் தாமும் முடிவேனென்று அவ்வாளைப் பற்ற, அருளினால் கலிக்காமனார் உய்ந்து எழுந்து நம்பிகள் செயலைமாற்றி நட்பாயின நிலைமைகளின் விளைவால் உளதாயிற்று; வேறு அறிவிப்பு மொழிகளாலன்று என்பதும் கண்டுகொள்க, போகங் கூட்டுவிக்கும் எல்லாவுயிர்களுக்கும் இவ்வாறு நிகழ்தலில்லையே எனவும், கலிக்காமனாரை வருந்தச் செய்யாது வேறு வழியால் இறைவர் அறிவித்திருக்கலாமே எனவும் மேலும் மேலும் வினவுதல் திருவருள் செல்லும் வழிகள் மனிதர் அறிவுக்குள் அகப்படாமையினை அறியாதார் செயலே யாமென்றொழிக. (3557-3559 பார்க்க); கலிக்காமனார் விதிவழியே இறைவர்பால் வைத்த அன்பு காரணமாகவே செற்றங்கொண்டாரேனும் இறைவரது திருவருள் உயிர்களிடத்து நிகழும் வழிகள் பலவே றாதலும், நம்பிகளது சிவயோக நிலையும், அவர் உலகினைத் தெருட்டி ஆட்கொள்வதற்கு இறைவரது பணியினால் வந்த நிலையும் மேல் இறைவரால் காட்டியருளப் பெறும் தன்மையில் விளங்கினார் என்பதும் ஈண்டு மனங் கொளற்பாலன; இறைவர் செய்யும் நிக்கிரகங்கள் அருளின் பாலவேயாம் என்ற சிவாகம ஞானநூல் முடிவாகிய உண்மையும் இங்குக் கருதப்படுதல் வேண்டும்; இங்கு "அருளினார்" என்ற குறிப்புமது. அன்றியும், இறைவரது திருவருட் செயல்கள் மக்களின் பசுபோதங் கொண்டு ஆராயத்தக்கன என்று புகுதலும் பிழையாகு மென்க.
வாடு - முதலினைத் தொழிற் பெயர்; தன் - சாரியை; அருளினார் - கருணை பாலித்தார். மறக்கருணை.
வருத்துமாற்றால் அருளினார் என்க; ஆறு - இங்கு அறிவுறுத்தும் வழி என்ற பொருளில் வந்தது; வருந்தும் - வருந்தச் செய்யும் என்று பிறவினைப் பொருள் கொள்க. "மருத்துவன் சில வியாதி - அறுத்துக் கீறித் தீர்த்திடும்; சில நோய் - கட்டி - பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன்" (சித்தி-2-33)என்ற உண்மை இங்குக் காணற்பாலது.