பாடல் எண் :3544

ஏதமில் பெருமைச் செய்கை யேயர்தம் பெருமான் பக்கல்
ஆதியா ரருளுஞ் சூலை யனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய மிகவதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள் பற்றியே போற்று கின்றார்,
340

(இ-\ள்) ஏதமில்.....பக்கல் - குற்றமில்லாத பெருமை கொண்ட செய்கையினையுடைய ஏயர் பெருமானிடம்; ஆதியார்..... செய்ய - இறைவர் அருளியசூலையானது அனலிற் காய்ச்சிய வேல் குடைவது போல மேன்மேலும் வேதனையைச் செய்ய; மிக அதற்கு....போற்றுகின்றார். அதற்கு மிகவும் உள்ளுடைந்து வருந்தி விழுந்து பூதநாயகராகிய சிவபெருமானுடைய பொன்னடிகளைப் பற்றிக் கொண்டு துதிப்பாராகி,
(வி-ரை) ஏதமில் பெருமை செய்கை - இறைவர்பாலே தமது உயிரினும் சிறந்த அன்பு பூண்டு அதன்வழியே ஒழுகிய தொண்டின் உறைப்புடையாராதல் குறிப்பு. சரித நிகழ்ச்சியின் பல பகுதிகளிலும் வைத்து இத்தன்மை விளங்கக் கண்டு கொள்க, பக்கல் - பக்கம்; மொழியிறுதிப் போலி;
அருளும் சூலை - அருளுருவாகி வந்ததென்பது குறிப்பு. முன்பாட்டில் அருளினார் (3543) என்றதும், ஆண்டுரைத்த குறிப்புக்களும் காண்க; ஆளுடைய அரசுகள் பக்கல் இறைவன் சூலை நோய் அருளிய வரலாறுகள் ஈண்டு நினைவு கூர்தற்பாலன; "மலையாள் மணவாளன் மலர்க்கழல் வந்தடையு, மிவ்வாழ்வு மிவ்வாழ்வு பெறத்தரு சூலையினுக் கெதிர்செய் குறை யென்கொல்?" (1338) என்று அரசுகள் சூலையினைப் போற்றிய தன்மையும் கருதுக. அருளும் - "சூலை வேதனை தன்னைக் கண்டரு நெற்றிய ரருள" (1314)
அனல் செய் வேல் குடைவ தென்ன - அனல் செய் - அனலிற் காய்ச்சுதலைச் செய்யப்பட்ட; செய் என்பது காய்ச்சுதலைச் செய்யப்பட்ட என்ற பொருளில் வந்தது; காய்ச்சுதல் இடநோக்கி அவாய் நிலையான் வந்தது; செய் - செயப்பாட்டுவினை; அனல் - ஏழனுருபு தொக்கது; அனல்செய் - அனலின் தன்மை செய்யப்பட்ட என்றலுமாம்;
அனல் செய் வேல் குடைவது - உள்ளே கூரிய உளைதில் செய்து வேதனை விளைத்தற்குவமை; கூரிய வேல் ஒன்றே போதிய தாயினும் விரைவும் சுடுவேதனையும் கூடி வேதனை மிகுதற்கும் அனல் செய்தலும் சேர்த்துக் கூறினார். அது போலச் சூலை நோயொன்றுமே தன்னியல்பில் உட்குடைந்து வேதனை செய்யப் போதியதாயினும், ஆதியார் அவ்வாற்றால் அருளுதலினால் அது விரைவும் மிகுதிப்பாடும் பெற்றதென்ற பொருளிலும் வைத்துக் கண்டுகொள்க; இக்கருத்தினை "இன்னம் புண்செய் நோவின் வேலெறிந்தாற் போலும் புகல்வதொன்றென்றார்" (சிறுத்.புரா-50-3709) என்று மேல் வேறோருவமையில் விளக்குதல் காண்க, இவ்வரிய உவமை நயத்தினையே "எண்ணிலா வருந்தவத்தோ னியம்பியசொன் மருமத்தி னெறிவேல் பாய்ந்த, புண்ணிலாம் பெரும்புழையிற் கனனுழைந்தாலெனச் செவியிற் புகுத லோடும்" என்று கம்பன் எடுத்தாண்டு மேலும் விளக்க முயலுதல் காண்க. என்ன - உவமவாசகம்,
உடைந்து - உடைதல் - உள்ளே உடல் வலி சிதறி நைதல்.
பூதநாயகர் - பூதம் - உயிர்கள்; "பூத பரம்பரை பொலிய"(1899); உயிர்களைக் காக்கும் தலைவர்; இடநோக்கிக் காக்கும் கடமைப்பாடு பற்றிக் கூறினார்.
பூதம் - சிவ - பூதங்கள் என்றலுமாம். பற்றி - சரணாகக் கொண்டு;
போற்றுகின்றார் - இதனை மேற்பாட்டில் விரிக்கின்றார்; முற்றெச்சம்; போற்றுகின்றாராகிப் போற்ற என்க. போற்றுதல் - ஈண்டு வழிபடுதல் துதித்தல் என்ற பொருளில் வந்தது.
ஏவும் சூலை - என்பதும் பாடம்.