பாடல் எண் :3545

சிந்தையால் வாக்கா லன்பர் திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளு மேயர் காவலர் தம்பா லீசர்
"வந்துனை வருத்துஞ் சூலை வன்றொண்டன் றீர்க்கி லன்றி
முந்துற வொழியா" தென்று மொழிந்தருள் செய்யக்கேட்டு,
341

(இ-ள்) சிந்தையால்....செய்ய - அன்புடைய அந்த வேயர் பெருமானார் மனத்தாலும் வாக்கினாலும் இறைவரது சீர்செய்யும் திருவடிகளைப் போற்ற; எந்தமை.....ஈசர் - எமது தலைவராகிய ஏயர்கோனார் பக்கம் இறைவர் எழுந்தருளி; வந்து உன்னை.....அருள் செய்ய - வந்து உன்னை வருத்துகின்ற சூலை நோய் வன்றொண்டன் தீர்த்தாலன்றி வேறு வழியால் முன்னால் நீங்காது என்று மொழிந்து அருளிச் செய்ய; கேட்டு - அதனைக் கேட்டு,
(வி-ரை) சிந்தையால்....போற்றி செய்ய - நோயினால் உள்ளுடைந்து உடல் வீழ்ந்து விட்டபடியால் மனத்தாலும் வாக்கினாலும் என்று மன மொழிகளிரண்டுமே கூறினார்; அன்பர் - கலிக்காமனார்.
திருந்து அடி - உயிர்கள் திருந்துதற் கேதுவாகிய அருள் புரியும் திரு அடி; திருத்தும் என்பது.
எந்தமை ஆளும் - எமது தலைவர்; ஆளுதல் - பத்தி வைராக்கிய நெறியினை உலகுக்குக் காட்டி வழிப்படுத்துதல்; நாயனார் என்ற தன்மையின் பொருள்.
வந்து உனை வருத்தும் - நம் அருளினாலே உன்பால் வந்து என்பது குறிப்பு. வந்து - உன் உடல்பற்றின நிலை முதலிய உலகியற் காரணங்களாலன்றி மற்றொரு வகையான் அருளப்பட்டு வந்து என்ற குறிப்புந் தந்து நின்றது. ஈசர் வந்து என்று கூட்டி உரைத்தனர் முன் உரைகாரர்கள்.
தீர்க்கிலன்றி - ஒழியாது - எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு; முந்துற - முன்னே; முற்பட - விரைவாக; இங்கு இறைவர் அருளிய இவ்வெருளில் மெய்ம்மொழி பின்னர் நிகழ்ச்சியில் வன்றொண்டர் தீர்க்காமலே தீர்ந்தமையாற் பிழைபடுமோ? எனின், படாது; என்னை? நோய் தீர்தல் உடலினுள் உயிர் இருக்கும் நிலையினன்றி உயிர் தீர்ந்து போந்த நிலையினன்று; உயிர் போமாயின் அது நோய்த்தீர்வெனப் படாது; இதுபற்றியே மேல் "உயிரி னோடுஞ் சூலையும் தீர்ந்ததன்றே" (3551) என்பாராயினர்; ஈண்டு முந்துற என்றது வன்றொண்டன் தீர்க்கிலன்றி உயிர் போவதன் முன் தீர்வு பொருந்த என்ற குறிப்பும் தந்து நிற்றல் காண்க. வன்றொண்டன் வரவினால் உயிர் போக உடன் தீர்தலன்றி இச்சூலை நோய் முன்னர் ஒழியாது என்னும் குறிப்பும் காண்க.
மொழிந்தருள் செய்ய - சூலை தந்தருளியதே யன்றி மெரிந்தும் அருளிச் செய்தனர். எச்சவும்மை தொக்கது; இம் மொழியும் சூலை போலவே மிக்க வேதனைக்கிடமாதலும், அதனாலே நாயனார் வாள் கொண்டு குடர்கிழித்து உயிர் நீத்தலும் பின்னிகழ்ச்சிகளாதல் காண்க.