"மற்றவன் றீர்க்கிற் றீரா தொழிந்தெனை வருத்த னன்றால்; பெற்றமே லுயத்தீர்! செய்யும் பெருமையை யறிந்தா ரியாரே? உற்றவன் றொண்டற் கேயா முறுதியே செய்தீ" ரென்னக் கற்றைவார் சடையார் தாமு மவர்முன்பு கரந்தா ரன்றே. | 343 | (இ-ள்) மற்றவன்.....நன்றால் மற்று அந்த வன்றொண்டன் தீர்ப்பதினும் அந்நோய் தீராமல் என்னை வருத்தலே நன்றாகும்; பெற்றமேல்....யாரே - இடபக் கொடியினை உயர்த்த பெருமானே! தேவரீர் செய்யும் அருளிப்பாடுகளின் பெருமையினை யாவரே அறிந்தவர்?; உற்ற.... செய்தீர் என்ன - புதிதாகப் பொருந்திய வன்றொண்டனுக்கே ஆகின்ற உறுதியினையே செய்தீர் என்று கூறி வருந்த; கற்றை....அன்றே - கற்றையாக நீண்ட சடையினையுடைய பெருமானாரும் அவர் முன்பு நின்றும் அப்பொழுதே மறைந்தருளினர். (வி-ரை) மற்றவன் - அருணெறி வழியடிமைத் திறத்தின் வேறாகிய அவன் - அபலவன் - என்பது குறிப்பு. தீர்க்கில் - தீர்ப்பதினும். தீர்க்கில் தீராதொழிதல் நன்றால் - தீர்ப்பதனை விடத் தீராமலே எனது உயிர் ஒழிதல் நலமேயாம்; நன்றால் - உறுதிப் பொருள் தந்தது. நன்மையாவது பத்தி நெறியிற் பிழை படாதிருத்தல். மற்று அவன் தீர்த்தல் உடல் ஆசையினால் பிழைக்குடன் பட்டுச் சிவாபராதத்துக் குடன்பட்ட பாவம் சாரச் செய்யும்; ஆதலால் தீராதொழிதல் நன்று என்றார். பெற்றம்......யாரே - செய்யும் பெருமை - பெருமையாவது சிறியதைப் பெரிதாக்கியும், பத்திவைராக்கியச் சார்பாகிய பெருமையினைச் சிறிதாக்கியும் அருளிச் செய்தல்; பெருமை - அதன் (உட்கிடை) உள்ளுறையினைக் குறித்தது; யாரே - ஒருவருமிலர் என, வினா இன்மை குறித்த எதிர்மறை; உமது அருட்பெருமையின் உள்ளீடு எவராலும் அறிதற்கரிது என்றபடி; பெருமை - இகழ்ச்சிக் குறிப்புடனும் நின்றது, பெருமை யில்லாதவருக்கும் பெருமையுண்டாக்குவர் என்பதும் குறிப்பு. உற்ற....செய்தீர் - ஏகாரங்களிரண்டும் பிரிநிலை; உற்ற வம்பென ஆண்டு கொண்டதனால் உற்ற; ஆம் உறுதி - (மேன்மை) ஆக்கம் தரும் நன்மை. ஆம் - உமக்குப் பொருந்திய என்றலுமாம். கரந்தார் - கரத்தல் மறைதல். அன்றே - அப்பொழுதே; கலிக்காமர் நேரே முன்பு முறையிட்டதற்கு மறுமொழி ஒன்றும் தராது என்க. மேல்விளைவு நிகழ்தற் பொருட்டுத் திரோதன சத்தியால் மறைவு செய்தபடியாம்; நம்பிகள் சங்கிலியார் திறத்து இடையாடின போது. இறைவர் செய்தவை ஈண்டுக் கருதத் தக்கன. தீர்க்க - அறிவார் - என்பனவும் பாடங்கள். |
|
|