பாடல் எண் :3549

அண்ணலா ரருளிச் செய்து நீங்கவா ரூரர் தாமும்
விண்ணவர் தம்பிரானா ரேவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங் காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க வருதிறஞ் செப்பி விட்டார்.
395

(இ-ள்) அண்ணலார்....நீங்க - இறைவர் முன் கூறியபடி மொழிந்தருளிச் செய்து மறைந்தருள; ஆரூரர்....செல்வார் - நம்பியாரூரரும் தேவதேவராகிய இறைவரது அருளாணையினாலும் விரைந்து செல்வாராகி; கண்ணிய...காதலால் - ஏயர்கோனாரது நட்பினைக் கருதிய மனத்தினுள்ளே எழுந்த பெரு விருப்பத்தினாலும்; கலிக்காமர்க்கு.... செப்பிவிட்டார் - அக்கலிக்காமனாருக்கு வந்த வலிய சூலையினைத் தீர்க்கும் பொருட்டுத் தாம் வருகின்ற நிலையினைச் சொல்லி வரத் தூதுவரையனுப்பினார்.
(வி-ரை) அண்ணலார் -"செய்யும் பெருமையை அறிந்தார் யாரோ?; என்று ஏயர்கோனாருங் கூறியபடி அறிதற்கரிய பெருமையினையுடையவர்.
ஏவலால் - காதலால் - இறைவரது ஏவலும் தமது காதலும் ஆகிய இரண்டு காரணங்களாலும் நம்பிகள் கலிக்காமர்பால் விரைந்து செல்லுதலும், செப்பிவிடுதலும் ஆகிய இரு செயல்களையும் உடன் நிகழ்த்தினார்; எண்ணும்மைகள் தொக்கன.
செல்வார் - செல்வாராகி; முற்றெச்சம்;செல்வார் - செப்பிவிட்டார் என்று கூட்டுக,
கண்ணிய கருதிய;கண்ணுதல் குறிக்கொண்ட நோக்கம் வைத்து உணர்தல்; கருதுதல்; "கண்ணிருள்" என்றவிடத்து (போதம் - சிறப்புப்பாயிரம்) கருதியுணரப்படும் என்றுரைத்தமை காண்க. ஈண்டுக் கருதியுணர நின்ற பொருளாவது கலிக்காமனார் தம்பாற் கொண்ட செற்றத்தினுள்ளே நின்ற சிவன்பாலுறைப்புடைய அன்பின்றிறம். ஏயர் கோனாரது நட்பைக் கருதுகின்ற; ஏயர்கோனாரது சூலையைத் தீர்க்கக் கருதுகின்ற; சிவபிரான் கட்டளையைக் கருதுகின்ற என்று பலவும் உரைக்க நின்றது.
திண்ணிய சூலை - திண்மையாவது இறைவரது திருவருட்கருவியாய்க் குறித்த பயனை விளைத்துவிடும் வலிமை; ஈண்டுப் பயனாவது அன்பு காரணமாக பகைப் பட்டாரை நட்புக்கூட்டுதல்; திண்ணிய - பெருநோய் செய்து பிறிதெவ்வாற்றானும் தீராத என்ற குறிப்பும் தருவது.
வருதிறம் - தாமே வரும் செயல்; திறம் - ஈண்டு வலிய செயல் என்ற குறிப்புமுடையது.
செப்பி விடுதலாவது - அறிவிக்கும்படி தூதரை ஏவுதல்.