நாதர்தம் மருளா னண்ணுஞ் சூலையு மவர்பாற் கேட்ட கேதமும் வருத்த மீண்டம் வன்றொண்டர் வரவுங் கேட்டுத் "தூதனா யெம்பி ரானை யேவினான் சூலை தீர்க்கும் ஏதமிங் கெய்த வெய்தி லியான்செய்வ தென்னா?" மென்பார், | 396 | (இ-ள்) நாதர்தம்....வருத்த - இறைவரது திருவருளினாலே வந்து பொருந்திய சூலையும், அதன்மேல் அவ்விறைவர் மொழிந்தருளக் கேட்ட துன்ப மொழியும் தம்மை மிகவும் வேதனை செய்ய; மீண்டும்...,கேட்டு - அதன் மேலும் வன்றொண்டரது வரவினையும் கேட்டு; தூதனாய்....என்பார் - தூதனாக எமது பெருமானை ஏவினானாகிய நம்பி இங்கு வந்து எனது சூலைநோயினைத் தீர்க்கும்படியான பெருங்கேடும் பொருந்த வருமேயாகில் யான்செய்வதென்னாமோ என்பாராகி, (வி-ரை) சூலையும் - கேதமும் - வருத்த என்க. கேதம் துன்ப மொழி; சூலை வருத்தியதன் மேலாக இறைவர்பாற் கேட்டமொழி வேறாக அதிகத் துன்பம் செய்தமையால் வேறு பிரித்தோதினார். அவர் - இறைவர்; கேட்டகேதம் - முன் (3545) கூறியது. மீண்டும் - அவற்றின் மேலும்; வரவும் - முன்னவற்றின் மேல் இதுவும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. ஏவினான் சூலை தீர்க்கும் ஏதம் - சூலை தீர்தலை விரும்பி இறைவரை வேண்டினாரேனும் (3544-3545), இறைவரைத் தூதாக ஏவினானால் அது தீரும் நிலையைக் கெடுதியாகவே கொண்டனர்; ஏதம் -கேடு; ஏவினான் - ஆரூரர்; வினையாலணையும் பெயர். ஏதம் இங்கு எய்த எய்தில் எய்தில் பொருந்தினால்; எய்த - எய்தும்படி; எய்தில்-வன்றொண்டன் எய்தினால் என்றலுமாம்; வன்றொண்டன் வரில் இறைவர் அருளியபடி சூலை தீரும்; அது தீர அவனால் தீர்க்கப்படும் ஏதம் எய்தும் என்பதாம். இங்கு - இவ்விடத்தில்; நான் உயிருடன் உள் இப்போது என்றலுமாம்; மேற்பாட்டுப் பார்க்க. செய்வதென்னாம் - என்னாகுமோ; எது விளையுமோ? நான் செய்வது என்னை என ஆலோசித்தார் என்பாருமுன்டு. என்பார் என்று - செற்றிட - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. யான் செய்வதென்னோ என்று - என்பதும் பாடம். |
|
|