பாடல் எண் :3551

"மற்றவ னிங்கு வந்த தீர்ப்பதன் முன்னான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை
உற்றவிவ் வயிற்றி னோடுங் கிழிப்ப"னென் றுடைவா டன்னாற்
செற்றிட வுயிரி னோடுஞ் சூலையுந் தீர்ந்த தன்றே.
397

(இ-ள்) மற்றவன்....முன் - மற்றவன் இங்கே வந்து நோய் தீர்ப்பதற்கு முன்னே; நான்....சூலை தன்னை - நான் இறக்கும் வேதனை அளவு என்னைப் பற்றி நின்று நீங்காத இந்தப் பாதகமுடைய சூலை நோயினை; உற்ற....என்று - அது பொருந்தித் தங்குதற் கிடமாகிய வயிற்றினோடுங் கிழித்து அழித்து விடுவேன் என்று துணிந்து; உடைவாள்....செற்றிட - உடைவாளினாலே வயிற்றினைக் கிழித்திட; உயிரினோடும்....அன்றே - உயிரினுடனே சூலை நோயும் அப்போதே தீர்ந்தது.
(வி-ரை) மற்றவன் - அருள் ஒழுக்கத்திற்கு வேறானவன். அயலவன் என்பது குறிப்பு; மற்று அவன் என்றலுமாம்; மற்று - முன் (3550) கூறியபடி "ஏவினான்" ஆகிய என்பது.
தீர்ப்பதன் முன் - சூலை தன்னைக் கிழிப்பேன் என்று கூட்டுக, கிழித்தல் - ஈண்டுத் துணிவுபடுத்தி அழித்தல் என்னும் பொருளில் வந்தது. அவன் தீர்ப்பதன்முன் நானே அதனை அழித்தொழிப்பேன் என்றது அடியார்பால் விளங்கும் வீரம். "வீரமென்னால் விளம்புந் தகையதோ?" (144); "வானந் துளங்கிலென்....ஆட்பட்ட வுத்தமர்க்கே" (தேவா); இப்புராணத்தில் வரும் பல அடியார்களின், தம் உயிரையும் பொருட்படுத்தாத பற்பல வீரச் செயல்களை இங்கு நினைவு கூர்க.
பாதகச் சூலை - சிவாபராதம் செய்தானது தொடர்புக்கு உடன்பட வைத்தலால் பாதகச்சூலை என்றார்.
உற்ற இவ்வயிற்றி னோடும் கிழிப்பன் - சூலையைக் கிழித்து ஒழித்தலே கலிக்காமனார் இங்குக் கருதியதாயினும், அது வயிற்றை யிடமாகப் பற்றி நிற்றுறவாம்அது பற்றிநின்ற வயிற்றினையும் உடன் கிழித்தாலன்றி அதனை வேறு பிரித்துக் கண்டு கிழித்தல் இயலாதாதலானும் உற்றவிவ் வயிற்றினோடும் என்றார்.உற்ற - பிரிக்கலாற்றாது பொருந்திய. இவ்வெல்லா ஏதங்களும் பொருந்துதற் கிடம் தந்த என்பதும் குறிப்பு.
உடைவாள் தன்னாற்செற்றிட உடைவாள் வளவர் சேனாபதிக் குடியில் வந்து அத்தொழிலும் புரிவாராதலின் உடைவாளினை எப்போதும் உடையவராயினர்; அதனுடன் உடைவாள் கொண்டோச்சிப் பகைவரைக் கிழித்தலும் வல்லராயினர்; ஆதலின் பாதகச் சூலையாகிய பகையினை எளிதினிவ்வாறு கிழித்துத் தீர்க்கவும் வல்லராயினர் என்க. "ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்" (3159); செற்றிட - என்ற குறிப்புமது; செறுதல் - அழித்தல். பகையை வீட்டல் இங்கு வயிற்றைக் கிழித்தல் குறித்தது.
உயிரினோடும் சூலையும் தீர்ந்தது - மங்கல வழக்கு; உயிரினோடு சிறப்பு நோக்கி ஓடு உருபை உயிருடன் சார்த்தி ஓதினார்; சூலையும் - உம்மை இழிவு சிறப்பு; வெல்லவந்ததாயினும் அது செய்ய மாட்டாது தான் தீர்ந்தது என்று எளிமைபடக் கூறியவாறு.அன்றே - அப்பொழுதே.
நான் மாயப்பற்றி நின்று - நான் மாயும்படி இறக்கும் அத்தனை வேதனை செய்து பற்றி ஊன்றி நின்று; மாய - மாயும்படி; முற்குறிப்பு.