பாடல் எண் :3552

கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும்
பொருவருங் கணவ ரோடு போவது புரியுங் காலை

"மருவியிங் கணைந்தார் நம்பி" யென்றுமுன் வந்தார் கூற
"ஒருவரு மழுதல் செய்யா தொழிக"வென் றுரைத்துப் பின்னும்,
398

(இ-ள்) கருதரும்....தேவியாரும் - நினைத்தற்கும் அரிய பெருமையும் அன்புமுடைய கலிக்காமனாரது தேவியாரும்; பொலிவரும்....காலை - தமது ஒப்பற்ற கணவருடனே உயிர் துறந்து உடன் தாமும் போவதனை விரும்பி அதற்குரிய நிலையினை அமைக்கும் காலையில்; மருவி....கூற - நம்பிகள் இங்குப் பொருந்தி அணுக அணைவாராயினர் என்று முன் வந்தவர்கள் சொல்லக் கேட்டு; ஒருவரும் பின்னர் - ஒருவரும் அழுதலைச் செய்ய வேண்டாம் என்று உடனிருந்தார்க்கெல்லாம் சொல்லிப் பின்னரும்.
(வி-ரை) கருதரும் பெருமை நீர்மை கருதரும் - கருதலளவையானும் அறிதற்கரிய; பெருமை - அளவு காண்டற்கருமை; நீர்மை அன்பு; பேரன்பு. இங்குக் கற்பின்றிறம் குறித்தது, பெருமையினைக் கலிக்காமனார் தேவியார் என்னுமிருவர்பாலும் சார்த்துக.
தேவியாரும்.....புரியும் - கணவனிறந்தபோது அவருடனே தாமும் உயிர் துறத்தல் கற்பு நிலை வழக்கு என்ப; புகழனார் இவ்வுலகைவிட்டகன்றபோது மாதினியார்" சுற்றமுடன் மக்களையுந் துகளாக வேநீத்துப், பெற்றிமையா லுடனென்றும் பிரியாத வுலகெய்துங், கற்புநெறி வழுவாமற் கணவனாருடன் சென்றார்" (1293) என்றும், கலிப்பகையார் உயிர்நீத்த செய்தி கேட்டபோது "அவர்க்கே யுரியதுநா னாதலினால், இந்தவுயி ரவருயிரோ டிசைவிப்பன்" (1397) எனத் திலகவதியார் துணிந்தனர் என்றும் அரசுகள் புராணத்துள் வரும் வரலாறுகள் இங்கு நினைவு கூர்தற்பாலன; ஆண்டுக் காணும் கலிப்பகையாரும் இச்சரிதமுடைய கலிக்காமனாரும் வேளாள மரயினராதலுடன் அரசன் சேனைப் பற்றுமுடையாராதலும் காண்க. கணவரிறந்தபோது மனைவியர் அவருட னுயிர்நீத்தல் இம்மரபிற் கற்புநிலைக் குறியாகப் பெரு வழக்கிலிருந்தமை பலவாற்றானும் துணியப்படும். போவது - இங்கு உயிர் நீத்துப் பிரியா வுலகிற்குப் (கணவருடன்) போவது; புரிதல் - விரும்புதல் மட்டுமன்றி அந்நிலைக் காவனவற்றுள் அமைதல் என்ற குறிப்பு முடையது. "நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச், சொல்லிடை யிட்ட பாலை நிலையும்" (தொல்-பொருள்-புறத்திணை-24); "காதலர் இறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது, இன்னுயிர் ஈவர் ஈயாராயின், நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர்....பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து"(மணி); "எமக்கெம், பெருந்தோட்கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே" (புறம்-246) என்பன முதலியவை இவ்வழக்குண்மையைக் காட்டுவன.
காலை - அப்போது; இறைவர் கலிக்காமர்க்குக் கனாவில் அருளிச் செய்து மறைந்தாரென்பது கருதப்படுமாதலின் அதிகாலை நேரம் என்ற குறிப்பும் தருவது.
இங்கு அணைந்தார் என்று முன்வந்தார் கூற - அணைந்தார் - அணுக வருவாராயினர் - அனைகின்றார் என்க; இறந்தகாலக் குறிப்பு விரைவுபற்றி வந்தது; முன்வந்தார் - அறிவிப்பின்பொருட்டு முன்வந்த பரிசனங்கள். வந்தார் - வினையாலணையும் பெயர்.
ஒருவரும்.....ஒழிக என்றுரைத்து கலிக்காமர் உயிர் துறந்தமை கண்டு பரிசனங்கள், சுற்றத்தார், சேடியர் முதலியோர்கள் துக்கித்து அழுதனர் என்று குறிப்பால் உணர்த்திய கவிநயம் காண்க, உயிருடன் சூலையும் தீர்ந்தது (3551) என்று முன்பாட்டிற் கூறிய ஆசிரியர் அதன்பின் இந்நிகழ்ச்சிகளை விரிக்க வேண்டாமையின், கூறாதொழிந்தனர். ஆயின், தேவியாரது திண்ணிய அன்பின் செயல்கூறி, மேல் நிகழ்ச்சிகள் கூற வேண்டியிருத்தலின் ஒருவரும் அழுதல் செய்யாதொழிக என்ற ஆணைதந்த அளவின் அவற்றை உய்த்துணரவைத்த தன்மையும் காண்க. அழுதல் செய்யா தொழிக என்றமையால் அழுதவரை நோக்கிக் கூறிய நிலை புலப்படும்.
ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக - என்றமையால் தாம் அழுதல் செய்யாமையும் புலப்படும்; என்னை? தாம் கணவரைப் பிரிந்த நிலை எண்ணினாலன்றோ துக்கம் புரிந்தாராதலின் அழுது வறிதே அமர்ந்திலர் என்க, "விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் கால மினியில்லை, உடையா னடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ டுடன்போவதற்கே யொருப்படுமின்" (திருவா-யாத்.பத்.5) என்ற திருவாக்கிற்காணும் உறுதிப்பாட்டுடனின்றனர் இங்கு அம்மையார் என்க.
பின்னும் - மேலும் சொல்வாராகி; பின்னும் - என்ன என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.