பான்மையர்ச் சனைக ளெல்லாம் பண்பினில் வழாமை யேய்ந்த நான்மறை தொடர்ந்த வாய்மை நம்பியா ரூரர் கொண்"டிங் கியான்மிக வருந்து கின்றே னேயர்கோ னார்தா முற்ற ஊனவெஞ் சூலை நீக்கி யுடனிருப் பதனுக்" கென்றார். | 401 | (இ-ள்) பாண்மை....வழாமை - விதிப்படிக்குரிய அருச்சனைகளையெல்லாம் விதித்த தன்மையில் தவறாதபடி செய்ய; ஏய்ந்த....நம்பியாரூரர் - பொருந்திய நான்கு வேதங்களையும் தொடர்ந்து கொண்ட வாய்மையினையுடைய நம்பியாரூரர்; கொண்டு - அவற்றை ஏற்றுக்கொண்டு; இங்கு....என்றார் - இப்பொழுது ஏயர்கோன் கலிக்காமனாருடைய மிக்க துன்பஞ் செய்யும் வெவ்விய சூலையினை நீக்கி அவருடனே மகிழ்ந்தினிதிருத்தல் நேராததற்கு நான் மிகவும் வருந்துகின்றேன் என்று சொல்லியருளினார். (வி-ரை) வழாமை - கொண்டு என்று கூட்டுக. பான்மை அர்ச்சனைகள் எல்லாம் சிவனடியார்களையும் சிவாசாரியர்களையும் உபசரிக்கும் முறை இங்கு அர்ச்சனை எனப்பட்டது; பான்மை - ஆகமவிதிப்பகுப்பு; சிறப்பு மிக்க எனினுமாம். அர்ச்சனை - தூப தீப பாத்தியம் அர்க்கியம் முதலியவை. 16 வகை உபசாரங்கள். பண்பினில் வழாமை - பண்பாவது செய்யும் முறை; அர்ச்சனைகள் என்பது உபசாரப் பகுதிகளையும், பண்பு - என்பது அவை செய்யும் முறைகளையும் குறித்தன. ஏந்த என்று பாடங் கொண்டு முன்கூறிய அர்ச்சனைப் பகுதிகளாகிய பாத்திய அர்க்கியம் சாந்தம் புட்பம் தூப தீபம் முதலியவற்றை ஏந்த என்பது இராமநாதச் செட்டியார் குறிப்பு; ."கதுமெனக் கணவ னாரைக் கண்ணுதற் கன்பரோடும்; விதிமுறை தீப மேந்தி" (851) என்றதும்; "நங்கை பரவை யார் திருமாளிகையி னண்ண நன்னுதலார், பொங்கு விளக்கு நிறைகுடமும் பூமா லைகளும் புகையகிலும், எங்கு மடவா ரெடுத்தேந்த" (3817-கழறிற்-புரா.70); "இனிய பஞ்ச வாசமுட னடைக்கா யிலையு மேந்தினார்" (3817-கழறிற்-புரா.77) என்பனவும் காண்க. நான்மறை தொடர்ந்த வாய்மை - வேதவுண்மைகளையே விளக்கும் திருவாக்குக்களாகிய தேவாரங்களை அருளும்; தொடர்தல் - கருத்துக்களை எடுத்து விரித்தல்; நான்மறை தொடர்ந்த வாய்மை - சிவாகமங்கள் என்ற குறிப்புமுடையது. கொண்டு - ஏற்றுக்கொண்டு; அங்கீகரித்து. ஊனவெஞ்சூலை - ஊனம் - கொடுந்துயர் என்ற பொருளில் வந்தது; வெம்மை - கொடுமை; இந்த இரண்டு அடைமொழிகளும், ஊனம் - வயிற்றினைக் கிழித்தலாலாகிய உடற் சேதத்தினையும், வெம்மை - உயிர் நீக்கிய கொடுமையினையும் செய்யும் நிலை என்ற சரித நிகழ்ச்சியின் உண்மை நம்பிகளது மெய்வாக்கினைப் பற்றி விளக்கி நிற்றல் காண்க; வாய்மை - என்றதும் இக்குறிப்பு; வருந்துகின்றேன் - நிகழ்ந்தவை பற்றிய குறிப்பும் தருவது காண்க. இங்கு - இப்போது; இடம் காலமும் குறித்தது. ஊன வெஞ் சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு - மிக வருந்துகின்றேன் - சூலையினை நீக்கி அவருடன் கூடி மகிழ்ந்திருக்கும் நிலையை விரும்பினேனாதலின் அது இன்னும் நேராமை பற்றி வருந்துகின்றேன் என்பதாம்; அவர் சூலைவாய்ப்பட்டுக் கிடக்கின்றமையால் நன்னிலையின்றி உடனிருத்தல் கூடப் பெறாமை வருத்தத்தின் காரணம் என்றபடி. சூலை நீக்கமும் உடனிருக்கும் இன்பமும் விரும்பியபடியாம்; அவரைக் காணாது செல்லும் கணந்தோறும் வருத்தம் பயப்பதாம் என்க. |
|
|