பாடல் எண் :3556

மாதர்த மேவ லாலே மனைத்தொழின் மாக்கண் "மற்றிங்
கேதமொன் றில்லை; யுள்ளே பள்ளிகொள் கின்றா" ரென்னத்
"தீதணை வில்லை யேனு மென்மனந் தெருளா தின்னம்
ஆதலா லவரைக் காண வேண்டு"மென் றருளிச் செய்தார்.
402

(இ-ள்) மாதர் தம் ஏவலாலே - அம்மையாரின் ஏவுதலின்படி; மனைத்தொழில்....என்ன - மனையிற்றொழில் செய்யும் பரிசனங்கள் "இங்குவேறு கெடுதி ஒன்றுமில்லை; அவர் (கலிக்காமனார்) உள்ளே பள்ளிகொள்கின்றார்" என்று நம்பிகளிடம் கூற; தீது அணைவில்லையேனும்....அருளிச் செய்தார் - (நம்பிகள் அது கேட்டு) தீமையின் சார்வு இல்லையாயினும் எனது மனம் இன்னும் தெளிவு பெறவில்லை; ஆதலினாலே அவரை நான் காணவேண்டும் என்று அருளிச் செய்தார்.
(வி-ரை) மாதர் - கலிக்காமனாரது தேவியார்; மூன் (3552-3553) கூறியவையும் இங்குக் கூறியவையும் அந்தத் திருமனையின் நிகழ்ச்சிகள் யாவும் அம்மையாரே உளங்கொண்டு ஆணையிட்டு நடாத்தி வந்த முறையினை நன்கு விளக்கும். மனையின் நிகழும் நடைமுறைகளுக்கெல்லாம் தலைவியாரே பொறுப்புள்ள தலைவியாவார் என்ற பெண்மை நலம் பற்றிய நீதி விளங்குதல் காண்க; சிறுத்தொண்ட நாயனார் புராணத்தினுள் உத்தராபதியார் எழுந்தருளியபோது மனைக்கடனுடையாராய், "மனையறத்தின் வேறாகி விளங்கும் திருவெண்காட்டு நங்கை" யம்மையின் செயல் நிகழ்ச்சிகள் ஈண்டு நினைவு கூர்தற்பாலன.
ஏவலாலே மனைத்தொழில் மாக்கள் என்ன - தலைவியர் ஏவியவாறே அமைந்து பணி செய்யக் கடமைப் பட்டவர்கள் பரிசனங்கள் என்பது; தொழில் - மாக்கள் என்றது மிக்குறிப்பு மனைத்தொழில் - நான்காம் வேற்றுமைத் தொகை.
மற்றும் ஏதம் ஒன்று இல்லை - மற்றும் ஏதம் - நீங்கள் கூறிய வெஞ்சூலையினைத் தவிர வேறு கெடுதி; துன்பம்; ஒன்று - ஒன்றும் என முற்றும்மை தொக்கது, உயிர் நீங்கியதனால் இனி வரக்கடவதாகிய ஏதம் ஒன்றுமில்லை என்ற குறிப்புடனும் நின்றது; உள்ளே - மனையினுள்ளே.
தீது அணைவு இல்லையேனும் இன்னம் என்மனம் தெருளாது நீங்கள் கூறுவது உண்மையேயாயினும் என்றபடி. அணைவு - அணைந்தது.
இன்னம் - நீங்கள் தீதணைவில்லை என்று உறுதி கூறக் கேட்டபின்னும்; மனம் தெருளாது - என் உள்ளம் தெருட்சி - அமைதி -அடையவில்லை. கலக்கம் நீங்கவில்லை.
தெருளாது - தெருட்சியாவது மனநிலை அறிவுற்றுத் தெளிவு பெறுதல். இது போன்றே அப்பூதியார் புராணத்தினுள் "இப்போ திங்கவ னுதவான்" என்று அப்பூதியார் கூறக்கேட்ட ஆளுடைய அரசுகள் "இவ்வுரை பொறாதென்னுள்ளம்; என்செய்தா னிதற்கொன் றுண்டால்" (1815) என்று அருளிய நிலை இங்கு நினைவு கூர்தற்பாலது. சிவனருள் நிறைவினுள் அடங்கித் திளைத்து நிற்கும் எந்தம் பெருமக்களின் உள்ளத்தினுள் நிறைந்து இறைவர் தாமே காட்டி நடத்துவிப்பாராதலின் அவர்களறிவு உண்மை நிலைகளைத் தெள்ளிதி னறிதல் எளிதென்க.
ஆதலால் காணவேண்டும் - அவர் தீதணைவின்றி யிருப்பினும் என் மனந்தெருளாமையினால் அவர் பொருட்டன்றி என் பொருட்டே - அது தெருட்சி பெறும் பொருட்டுக் - காணவேண்டும் என்பது.
அருளிச் செய்தார் - காண்பது கருதி மொழிந்த அளவே மேல் இறைவர் அருளிப் பாட்டுக்கு வழியாக நிகழ்வது என்றது குறிப்பு.