பாடல் எண் :3558

கோளுறு மனத்த ராகிக் குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானா ரருளினா லவரு முய்ந்து
"கேளிரே யாகிக் கெட்டே"
னெனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்.
404

(இ-ள்)கோளுறும்... பற்ற - தற்கொலைத் துணிவு கொண்ட மனத்தினை உடையவராகி அதன்பொருட்டுக் குத்திக்கொள்வதற்குரிய அவ் வுடை வாளினைத் தம் கையாற் பற்றிட; ஆளுடை.....உய்ந்து - ஆளுடைய தமது இறைவனாரது திருவருளாலே அக்கலிக்காமனாரும் மீள உயிர் பெற்று; கேளீரே ...பிடித்துக்கொள்ள - நட்புடையவரேயாகிக் கெட்டேன்!என்று விரைவுடனே எழுந்து நம்பிகள் கையிற் பற்றிய வாளினைப் பிடித்துக் கொள்ளவே; வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்- வன்றொன்டராகிய நம்பிகள் வணங்கி வீழ்ந்தனர்.
(வி-ரை) கோள் - தற்கொலை துணிந்த கொள்கை; உறுதல் அதனாற் கொள்ளப்பட்ட நிலை.
குற்று உடை வாள் - குற்று - குத்துதல்; "நெற்குறுபாட் டொலிபரக்கும்" (1049); குற்று - குறுகிய - சிறிய - என்ற குறிப்பு முடையது; இது கலிக்காமனார் வயிற்றிடைக் குத்திக்கொண்டு அவர்பாலிருந்த உடைவாள் (3551). உடையிற் செருகும் வாள் உடைவாள். குற்று குற்றிக்கொண்ட என்றலுமாம்.
பற்றுதல் - விரைவிற் பறித்துப் பிடித்தல்,
ஆளுடை....உய்ந்து ஆளுடை - இருவரையும் ஆட்கொண்ட, ஆளாக வுடைய; அவரும்-ஆவி பொன்றிக் கிடந்த அவரும் (கலிக்காமனாரும்); உம்மை சிறப்பு; ஆய்ந்து - உய்தல் ஈண்டு மீள உயிர் பெறுதல் குறித்தது.
கேளிரேயாகி - முன்னிருந்த பகைமையும் செற்றமும் ஒழிந்து நண்பரேயாகி; இந்த மாறுதல் முன் கூறிய எல்லா நிகழ்ச்சிகளின் மூலமாக இறைவரருளால் கலிக்காமனாரது உயிர் (சூக்கும சரீரத்துள்) நுண்ணுடலினுள் தங்கிய நிலையில் உளதாயினவாறு அவ்வச் செயல்களின் றொடர்ச்சிகளுள் வைத்து உய்த்துணர்ந்து கொள்க. அருளினால் - என்பது இத்துணையும் ஒன்று சேர்த்துக் கூறியபடியாம்; கேளிர் - நண்பர்; பெரும்பான்மை நட்புமிகுதி யுடைமைபற்றி உறவினர்க்கும் வரும்.
"கெட்டேன்" என விரைந்தெழுந்து - கெட்டேன் என்ற சொல் வாக்கினின்று எழுதலும், உடல், கிடந்த நிலையினின்று எழுதலும் ஒருங்கே விரைவின் உடனிகழ்ந்தன என்க; "தொழுதெழுவாள்" (குறள்) என்புழிப் போல.
கையில் வாளினைப் பிடித்துக்கொள்ள - நம்பிகள் கையிற் பற்றிய உடைவாளினை அவர் குறிக்கொண்ட செயல் செய்யாதவாறு தம் கையால் இறுகப் பிடித்துக்கொள்ள; "அரசனும் பெரியோர் செய்கை, யிருந்தவா றிறுவென் கெட்டே னென்றெதிர் கடிதிற் சென்று, பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனர் வாளுங் கையும்" (596) என்ற எறிபத்த நாயனார் புராணவரலாறும், "தங்கணிடந்தப்ப வுதவுங் கையை, ஏறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக்கொண்டு" (829) என்ற திருக்கண்ணப்பதேவர் புராண வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன.
வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார் - தாம் வேண்டியவாறு பிழைநீங்கும் நண்பு பெற்றமையாலும், இறைவரருள் வெளிப்பட்ட இடமாதலாலும் நிலமுற வீழ்ந்து வணங்கினர்; பகை நீங்கிய எறிபத்த நாயனாரும் புகழ்ச்சோழ நாயனாரும்(முன் குறித்த அந்நிகழ்ச்சியிற்) றிருவருள் வெளிப்பாட்டின்பின் ஒருவரை யொருவர் அடிவீழ்ந்து வணங்கிய நிலை (599) யும் காண்க. மேற்பாட்டுப் பார்க்க.