பாடல் எண் :3559

மற்றவர் வணங்கி வீழ, வாளினை மாற்றி யேயர்
கொற்றவ னாரு நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்;
அற்றைநா ணிகழ்ந்த விந்த வதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி பொழிந்தனர் புவனம் போற்ற.
405

(இ-ள்) மற்று....வீழ - இவ்வாறு நம்பிகள் வணங்கிவீழக் கண்டு; வாளினை....வீழ்ந்தார் - ஏயர் கோனாரும் வாளினை அகற்றி நம்பிகளது சத்திக்கும் கழலணிந்த திருவடிகளிற் பணிந்து வீழ்ந்தனர்; அற்றைநாள்....போற்ற - அன்று நிகழ்ந்த இந்த அதிசயத்தினைக் கண்டு தேவர்கள் இந்நிலவுலகத்தவர்கள் துதிக்கச் சிறந்த அழகிய கற்பக முதலிய மலர்களை மழைபோலப் பொழிந்தனர்.
(வி-ரை) மற்று - முன் கூறியவாறு. அவர் - நம்பிகள், வாளினை மாற்றி - நம்பிகள் பற்றிய வாளினை ஏயர்கோனார் பிடித்துக்கொண்ட பின், நம்பிகள் அதனை விட்டு நிலமிசை வீழ்ந்து வணங்கியதனால் அந்த வாள் ஏயர்கோனார் கையில் வந்தது; அதனை மாற்றினார் என்பது; மாற்றுதல் பிடித்த நிலையினின்றும் மாற்றுதல்; வேறாக எறிந்துவிடுதல்.
குரைகழல் - குரைத்தல் - ஒலித்தல்; கழல் - வீரக்கழல்; கழலையணிந்த திருவடிக்கு வந்தது - தாணியாகுபெயர்; ஏயர்கோனாரது பகைமையை நீக்கி வெற்றிகொண்ட குறியாகக் கழல் என்றார். கழல் - ஈண்டு வெற்றிக்குறி என்ற பொதுமையை உணர்த்திய குறிப்புமாம். நம்பிகள் அரசர் திருவுடையாராதலின் அணிந்த கழல் என்பதுமாம். ஏயர்கோனார் வணங்கி வீழ்ந்தபோது நம்பிகள் திருவடி பெயர்க்கக் கழல் ஒலித்த குறிப்புமாம்.
வீழ்ந்தார் - தன் வயமிழந்து வீழ்ந்தனர் என்பது; தமது முன்னை நினைவுகளையும், தாமே பிழைபட்டதனையும் நினைந்து மனமுருகிய நிலையினால் அவசமாயினர்; இரண்டிடத்தும் வீழ்ந்தார் என்றது அவர் வீழ்ந்த கருத்துப் பற்றியே இவரும் வீழ்ந்தார் என்ற குறிப்பும் தருவது காண்க.
புவனம் போற்ற வானோர் மலரின்மாரி பொழிந்தனர் என்க; புவனம் - நில வுலகத்துள்ளோர்; வானோர் சிவனருள் வெளிப்பாடு கண்டு பொழிந்தனர்; உலகரும் அது கண்டு போற்றினர் என்க. புவனம் - இடவாகு பெயர்.