பாடல் எண் :3560

இருவரு மெழுந்து புல்லி யிடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று, வன்றொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே "யந்த ணாள"னென் றெடுத்துப் பாடி,
406

(இ-ள்) இருவரும் எழுந்து புல்லி இருவர்களும் (வீழ்ந்து வணங்கிய நிலையினின்றும்) எழுந்து தழுவிக்கொண்டு; இடைவிடா....பொங்க - இடையறாத நண்பினுடனே ஒப்பற்ற மகிழ்ச்சி மேன்மேலும் பொங்க; திருப்புன்கூர்....நின்று - திருப்புன்கூரிற் சென்று அங்கு விளங்க வீற்றிருந்தருளிய இறைவரது திருவடிகளிற் பொருந்த வணங்கித் துதித்து நின்று; வன்றொண்டர்....பாடி - வன்றொண்டராகிய நம்பிகள் தமது பெருமானாரது திருவருளினை நினைந்து "அந்தணாளன்" என்று தொடங்கிப் பாடியருளி,
(வி-ரை) இருவரும் எழுந்து புல்லி - எழுந்து - "வன்றொண்டர் வணங்கி வீழ்ந்தார்" (3558); "ஏயர் கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்" (3559) என்றபடி இருவரும் வீழ்ந்த நிலையிற் கிடந்தார்களாதலின் அந்நிலையினின்றும் எழுந்து; புல்லுதல் - தழுவிக்கொள்ளுதல்; இஃது அன்புடையார் தலைப்பெய்யும் கூட்டத்தின் நிகழும் மெய்ப்பாட்டுவகை.
இடைவிடா நண்பு - முன்போலன்றி, இடையறாத தொடர்புடைய நட்பு.
திருப்புன்கூர் - திருப்பெருமங்கலத்தின் மிக அணிமையில் வடகிழக்கில் 2 நாழிகையளவில் உள்ள பதி; இங்குக் கலிக்காமனார் அதிகமாயின திருப்பணி யனேகமுஞ் செய்தும், 12+12=24=வேலி நிலங்கள் விட்டும் தமது அபிமானத் தலமாகக் கொண்டு வழிபட்டு
வந்தனர்; ஆதலின், இங்குத், திருவருள் வெளிப்பாடு கண்டவுடன் அந்நன்றியின் பொருட்டு அங்கச் சென்று இறைவரை வணங்கினர்.
மருவினர் போற்றி நின்று - மருவினர் போற்றி - மருவினராகிப் போற்றி, மருவிப்போற்றி; மருவினர் - முற்றெச்சம்; மருவுதல் - அடிசேரப் பொருந்தும் வணக்கம் செய்தல்.
இருவரும் போற்றி நின்று - வன்றொண்டர் - பாடி - இருவரும் போற்றுதல் செய்தனர்; அவருள் வன்றொண்டர் ஒருவரே பதிகம் பாடினர்; இருவர்பாலும் சரித நிகழ்ச்சிகளும் பிணைந்து நிகழ அந்நிலையினில் இரண்டு திறத்தினையும்வேறு பிரித்துக் காட்டும் கவிநயம் கண்டுகொள்க; இவ்வாறே மேல்வரும் பாட்டிலும் காண்க.
"அந்தணாளன்" என்று அந்தணாளன் என்பது பதிகத் தொடக்கம்; இதனுள் ஏயர்கோனாரது அடிமைத் திறத்தினைச் சிறப்பித்தும், (பதிகம் 2-3-பாட்டுக்கள்) சூலைதந் தாட்கொண்ட வரலாற்றின் அருளிப் பாட்டைப் போற்றியும் அருளிச் செய்துள்ளமை காண்க. பதிகப் பாட்டுக் குறிப்புப் பார்க்க.
பாடிச் சிலபகல் கழிந்த பின்பு என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. போற்றி நின்று, வன்றொண்டர் பாடி, அதன்பின் சிலபகல் கழிந்தபின் என்க.