சிலபகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் மலர்புகழ்த் திருவா ரூரின் மகிழ்ந்துடன் வந்த வேயர் குலமுதற் றலைவ னாருங் கூடவே குளிர்பூங் கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட் டுறைந்தனர் நிறைந்த வன்பால். | 407 | (இ-ள்) சிலபகல் கழிந்தபின்பு - சில நாட்கள் இவ்வாறு செல்ல; திருமுனைப்பாடி நாடர் - திருமுனைப்பாடி நாடராகிய நம்பிகள்; மலர்புகழ்....வந்த - விரிந்த புகழினையுடைய திருவாரூரிலே மகிழ்ச்சியுடன் தம்முடன் கூடத் தொடர்ந்து வந்த; ஏயர்....கூடவே - ஏயர் மரபில் வந்த தலைவராகிய கலிக்காமனாருடன் கூடவே; குளிர் பூங்கோயில்....அன்பால் - குளிர்ந்த பூங்கோயிலின்கண் நிலைபெற எழுந்தருளிய இறைவரை கும்பிட்டு நிறைந்த அன்பினாலே அங்குத் தங்கியருளினார். (வி-ரை) பகல் - நாள் என்ற பொருளில் வந்தது. திருமுனைப்பாடி நாடர் - ஆரூர் நம்பிகள்; நாடர் - உடன் வந்த - ஏயர் தலைவனாருங் கூடவே - ஆரூரில் - பூங்கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட்டு என்று கூட்டி முடிக்க. நிறைந்த அன்பால் - உறைந்தனர் - என்க. மகிழ்ந்துடன் வந்த - கலிக்காமனார் நம்பிகளோடும் கூடி மகிழ்ந்து திருவாரூருக்கு உடன் சென்று அவருடனே புற்றிடங்கொண்ட இறைவரைத்தொழுதிருந்தனர் என்பது. ஏயர்கோனாரது அபிமானத் தலமாகிய திருப்புன்கூருக்கு நம்பிகளும், நம்பிகளது திருத்தலமாகிய திருவாரூருக்கு ஏயர்கோனாரும் உடன் போந்தமை சிவன்பால் அன்பின் உரிமைத் திறத்தின் பண்பாலாகியது. ஆளுடைய பிள்ளையாரது திருத்தாயர் பிறந்த தவத் திருநனிபள்ளி மறையோர் முதலியோர் "சடையாரை யெங்கள் பதியினிற் கும்பிட்டருள அங்கே யெழுந்தருள வேண்டும்" என (2010) விண்ணப்பித்துக் கொடு போந்த வரலாறும், அது போல்வன பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. நிலமும் நாடும் மனையும் உடற்சுற்றமும் போன்ற பாச சம்பந்தமான பற்றுக்களானன்றிச் சிவசம்பந்த மொன்றே கருதி அளவளாவுதல் எந்தம் பெருமக்கள் பண்பாகும். குளிர் பூங்கோயில் - குளிர்ச்சியுடைய நீர்ப்பூவாகிய தாமரைபோன்றகோயில்; பூங்கோயில் என்ற பெயர்க் காரணக்குறிப்பு; "அனையதனுக் ககமலரா மறவனார் பூங்கோயில்" (135); இக்குளிர் பிறவிவெப்பத்தை மாற்றும் தன்மையுடையது என்பதும் குறிப்பு. ஈண்டுக் கலிக்காமனார் கொண்டிருந்த மூண்ட சினத்தினையும் மாற்றித் தண்ணிய நட்பு உளதாகச் செய்த குறிப்புமாம். நாடர் - தலைவனாருங் கூடவே நிலவினாரைக் கும்பிட்டுறைந்தனர் என்க. நிறைந்த அன்பால் உறைந்தனர் - என்பதாம். மனத்தினுள் முன்னர்ப் பகைமை யிருந்த இடத்தில் அதனைப் போக்கி அன்பு நிறைதலினால் என்க. |
|
|