பாடல் எண் :3562

அங்கினி தமர்ந்து நம்பி யருளினால் மீண்டும் போந்து
பொங்கிய திருவின் மிக்க தம்பதி புகுந்து பொற்பிற்
றங்குநா ளேயர் கோனர் தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதஞ் சேர்ந்தனர் சிறப்பி னோடும்.
408

(இ-ள்) அங்கு.....போந்து - அத்திருவாரூரில்இனிதாக விரும்பி எழுந்தருளி யிருந்து நம்பிகள் பால் அருள்விடை பெற்று மீண்டும் தமது திருநகரத்திதினிற் சென்று சேர்ந்து; பொற்பில் தங்குநாள் அழகியதாக எழுந்தருளி யிருந்த காலத்தில்; ஏயர்கோனார்.....செய்தே - ஏயர்கோனார் தமக்கேற்றனவாகிய திருப்பணிகளைச் செய்தே; செங்கண்....சிறப்பினோடும் -சிவந்த கண்ணையும் பெருமையினையுடைய விடையினையுடைய இறைவரது திருவடிகளைச் சிறப்பினோடும் சேர்ந்தனர்.
(வி-ரை) அங்கு - முன்பாட்டிற் கூறிய அத்திருவாரூரில்; முன்னறிசுட்டு.
அருளினால் - அருள் விடை கொடுப்பப்பெற்று.
பொங்கிய திருவின்மிக்க - முன்னரே பீடுதங்கிய தெய்வத் திருப் பெருமன் கலமாயிருந்த அந்நகர் இப்பொழுது இறைவர் செய்த அருளிப்பாட்டினாலும் நம்பிகளின் நட்புச் சேர்ந்த சிறப்பினாலும் அப்பெரிய திரு மேலும் பொங்கிற்று என்பதாம்.
பொற்பில் தங்குதல் - தமது சிவச்சார்பாகிய இயல்பினால்வாழ்தல்.
தமக்கு ஏற்ற தொண்டு - இறைவன்பாலும் அடியார்பாலும் பணி செய்தல்; "அடிபணி வாரடிச் சார்ந்து, பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்" (3160); "சடைமுடி யார்திருப் புன்கூர்க் கதிகமாயின திருப்பணி யனேகமுஞ் செய்து, நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று, துதியினாற்பரவித் தொழுது" (3161) என்றவை காண்க.
செய்தே - ஏகாரம் தேற்றம்; தொண்டே செய்து என்று ஏதாரம் பிரித்துக் கூட்டுக.
செங்கண் மால்விடை - சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய விடை என்றலுமாம்.
சிறப்பினோடும் சேர்ந்தனர் என்க; சிறப்பாவது சிவசிந்தனை மறவாத அன்பு.