அந்தியிளம் பிறைக்கண்ணி யண்ணலார் கயிலையினில் முந்தைநிகழ் கோயிலுக்கு முதற்பெருநா யகமாகி இந்திரன்மா லயன்முதலா மிமையவர்க்கு நெறியருளும் நந்திதிரு வருள்பெற்ற நான்மறையோ கிகளொருவர், | 1 | (இ-ள்) அந்தி....கயிலையினில் - மாலையிற்றோன்றும் இளம் பிறையாகிய கண்ணிமாலையினைச் சூடிய சிவபெருமானது திருக்கயிலை மலையிலே முந்தை நிகழ்....நாயகமாகி - பழமையாக உள்ள திருக்கோயிலுக்கு முதற்பெருங் காவலராகிய முதன்மை பெற்று, இந்திரன்....நந்தி இந்திரன், விட்டுணு, பிரமன் முதலாகிய தேவர்களுக்கு நெறியினை அருளிச் செய்யும் பணி பூண்ட நந்தி பெருமானுடைய; திருவருள்....ஒருவர் - திருவரு ளுபதேசத்தினைப் பெற்ற நான்மறைச் சிவயோகிகளாகிய ஒரு பெரியவர். (வி-ரை) அந்தி....அண்ணலார் - "கூனற்பிறையாளன்" (திருவந்தாதி) என்ற வழிநூற்பொருளை விரித்தவாறு. பிறைக்கண்ணி - அருளுடைமைக் குறிப்பும், ஞான ஒளிவளரச் செய்யும் குறிப்பும் தருவது; இறைவர் திருமுடியாகிய உயர்ந்த இடத்திலிருத்தலால் கலங்கரை விளக்கம் போல நெடுந்தூரத் திருப்பவர்களையும் இடமும் இயல்பும் காட்டி அழைக்கும் தன்மை குறித்தபடியுமாம். 252 - 253 பார்க்க. பிறை - அண்ணலார் - கயிலை - கயிலை மிக உயர்ந்த மலை; அண்ணலார் அதன் மேல் உயர்ந்து நிற்பவர்; பிறை அவரது நீண்ட திருமுடியின் மேலது என்ற குறிப்புக்களும் காண்க. உலகுக்கு மிக உயர்ந்த ஞான ஒளிபரப்பி நெறி காட்ட வந்தவரது புராணமாதலின் இத் தன்மையாற் கூறியபடி. முந்தை நிகழ் கோயில் - நீண்ட காலத்துப் பழங்கோயில்; முதன்மை பெற்ற கோயில் என்றலுமாம். நிகழ்கோயில் - எக்காலத்தும் அழியாதிருக்கும் கோயில் என்று முக்காலத்துக்கும் பொதுவாகிய நிகழ்கால வினைத்தொகையாற் கூறினார்; நொடித்தான்மலை ஊழியிலும் அழியாதது என்ற பொருட்குறிப்பு. முதற்பெருநாயகம் - "கோயில் நாயகன்" (20); நாயகமாவது காவலாகிய அதிகாரம். நெறியருளும் - இஃது உட்செல்ல விடுக்கும் காலம் என்றும், இஃது அவ்வாறு செல்ல விடாத காலம் என்றும், இவ்வழி செல்க - இவ்வழி செல்லற்க என்றும் காலமும் இடமும் காட்டி விடுத்தும் தடுத்தும் வழிப்படுத்தும். நெறி - சிவநெறி, குரு நெறி, ஒளிநெறி, நன்னெறி என்றலுமாம்; இப்பொருளில் முனிவர் யோகியர்க்கே யன்றி இமையவர்க்கும் என்று எச்சவும்மை தொக்க தென்க. நந்தி - திருநந்தி தேவர்; நந்தி - சிவபெருமானது பெயர்; அவர்பால் முதல் உபதேசம் பெற்ற நந்திதேவருக்கு ஆயிற்று; முதற்பெருநாயகமாகி - நெறியருளும் - நந்தி - என்பன இறைவராகிய நந்தியினின்றும் பிரித்துணர வைக்கும் அடைமொழிகள். பிறிதினியையு நீக்கிய விசேடணம். நந்தி திருவருள் பெற்ற - நந்தி பெருமான்பால் நேரே உபதேசம் பெற்ற என்க. "நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின், நந்திக ணால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரம, ரென்றிவ ரென்னோ டெண்மரு மாமே", "இருந்தேனென் னந்தி யிணையடிக் கீழே" (திருமந்திரம் - பாயிரம்) என்பன முதலியவை பார்க்க. நான்மறை யோகிகள் - வேத சிவாகமங்களுள் பேசப்பட்ட சிவயோகங்கைவந்த பெரியார். பன்மை சிறப்பு; இவரது சிவயோக சாதனையால் வரும் இச்சரித நிகழ்ச்சிகள் பலவும் காண்க. "எண்ணிறைந்த வுணர்வுடையா ரீசரருளென வுணர்ந்தார்" (3586); "சிவயோகந் தலைநின்று, பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தார்" (3588) என்பன முதலியனவாய் வருவன காண்க; யோகிகளுள் ஒருவர் என்றுரைப்பாருமுண்டு; ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம்; இவரது முன்னைப் பெயர் சொல்லப்படவில்லை. ஈண்டைக்கு வேண்டப் படாமை குறிப்புப் போலும். அவையெல்லாம் கண்டு சரிதங் காண்பாருமுண்டு. இப்புராணம் அந்தி என்று அகரத்தில் தொடங்கிச் சாற்றுவாம் என மகர ஒற்றுடன் நிறைவாதல் பிரணவ வடிவான ஞானம் தரவந்தவரது சரிதம் என்ற குறிப்புத்தருவது. |
|
|