மற்றவர்தா மணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார் கொற்றவனார் திருக்கயிலை மலைநின்றுங் குறுமுனிபால் உற்றதொரு கேண்மையினா லுடன்சிலநா ளுறைவதற்கு நற்றமிழின் பொதியமலை நண்ணுதற்கு வழிக்கொண்டார். | 2 | (இ-ள்) மற்றவர்தாம்....பெற்றுடையார் - அவர் தாம் மற்றும் அணிமா முதலாகிய அரிய எண்வகைச் சித்திகளையும் கைவரப் பெற்றுடையவர்; கொற்றவனார்....கேண்மையினால் - இறைவரது திருக்கயிலைமலையினின்றும் குறு முனி எனப்படும் அகத்திய முனிவரிடத்துப் பொருந்தியதொரு கேண்மையாகிய தொடர்பினாலே; உடன்....வழிக்கொண்டார் - அவரோடு உடனாகச் சில நாள் தங்கியிருத்தலைக் கருதி அதன்பொருட்டு அவரிருப்பிடமாகிய நற்றமிழ்ப் பொருத்தமுடைய இனிய பொதிய மலையினைச் சேர்வதற்காக வழிக்கொண்டு செல்வாராயினர். (வி-ரை) அணிமாதி வருஞ் சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எண்வகைச் சித்திகள். இவை அட்டமாசித்திகள் எனப்படும்; .அணிமா - அணுவினுஞ் சிறிய உருவம் கொள்ளுதல்; மகிமா - எங்கும் நிறைந்து நிற்கும் பெருமை கொள்ளுதல்; லகிமா - மேருப்போல மிகப் பெரிதாயிருந்தும் எடுக்கும்போது இலகுவாயிருத்தல்; கரிமா - அணுப்போலிருந்தும் எடுக்குங்கால் மேருப் போலக் கனப்பது; பிராத்தி - எங்கும் செல்லும் ஆற்றலுடைமை; பிராகாமியம் - பரகாயத்தில் நண்ணுதல், ஆகாயத்தில் சஞ்சரித்தல், நினைந்த போகங்கள் எல்லாம் தானிருந்த இடத்தே வரப்பெறுதல், தன் உடல் ஒளியினாலே இருந்தபடியே மண்ணிலும் விண்ணிலும் உள்ள பொருள்களெல்லாமும் கால மூன்றும் அறிதல்; ஈசத்துவம் - ஈசனென முத்தொழிலும் செய்து தேவரும் பணிகேட்ப நிற்றல்; வசித்துவம் - எவ்வுயிரையும் தன் வசமாக்குதல்; இவற்றினியல்பைத் திருவிளையாடற் புராணம் அட்டமாசித்தி யுபதேசித்த படலம் முதலியவற்றுளும் இவரது திருமந்திரத்துள்ளும் காண்க. வருஞ்சித்தி - சிவயோகியர்கள் இவற்றை விரும்பார்; ஆயினும் அவர்களை இவை நிழல்போலப் பிரியாது அடைந்து அவர்களது பெருமைகளை உலகர்க்கு உணர்த்தி நிற்கும்; இவை அவர்களுக்கு விளையாட்டுப் போல உள்ளன. வரும் - தேடிவந்தடையும்; இங்கு நந்தி திருவருள் பெற்ற நான்மறை யோகியராகிய இவர் இச்சிறிய சித்திகள் பெற்றுடையார் எனக் கூறவந்த நிலை என்னையோ? எனின், பின்னர் இச் சரித நிகழ்ச்சியிலே பசுக்களின் துன்ப நீங்க இடையனுடலில் பரகாயப் பிரவேசமும் (3576), தம்முடல் மறைந்தமை கண்டபோது அது தம்மை ஆகமப் பொருளைத் தமிழ் வகுப்பச் செய்தற்கு இறைவர் செய்த அருட்செயல் என்று இருந்தபடியே முழுதுணர்ந்த சிந்தையினில் நாடி உணர்தலும் (3585), பிறவும் நிகழ்வனவாதலின் அவற்றின் இயல்புணர்த்தற்கென்க. கொற்றவனார் - இறைவருடைய; சிவபெருமானுடைய; குறுமுனிபால்....கேண்மை - குறுமுனி - அகத்தியர்; கேண்மை - சிவயோகியராகிய நட்பு; தாழ்ந்த தென்றிசையை நேர்நிறுத்தத் தனிப்பெருமுனிவராகிய நிலையில் அகத்தியரைப் பொதியமலைக்கு அனுப்பிய வரலாறு கந்தபுராணத்துட் காண்க. (திருக்கல்யாணப் படலம் - 50 -59) உடன் சிலநாள் உறைவதற்கு - இறைவரது திருக்கயிலையில் உறைந்த யோகியார் அகத்தியரோடு உடன் சிலநாள் உறைவதனை விரும்பிக் கயிலையை நீங்கி வழிக் கொண்டார்; சிவனோடிருத்தலினும் பேரின்பம் சிவனை அணைந்தோருடன் இருத்தலாம் என்ற உண்மை நோக்கி என்க. ஆயின் இவ்வாறு யோகியர் கொண்ட கருத்தினை உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருமந்திரம் வெளிப்படுத்தும் பெருங் கருணை காரணமாக, நிறைவேற அருள் புரியாது தடுத்துத் திருவாவடுதுறையினில் இவரைப் பல்லாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் இருத்தியருளினர் இறைவர் என்பது மேல்காணப்படும். எத்தகைய பெரியோராயினும் திருவருள் கூட்டிய வழியேயன்றித் தாம்தாம் எண்ணியபடி காரியங்கைகூடப் பெறார் என்க. "வேண்டி நீயா தருள் செய்தா யானு மதுவே வேண்டினல்லால்" என்ற மணிவாசகங் காண்க. நற்றமிழின் பொதியமலை - தமிழ் முனிவன் இருத்தலின் இவ்வாறு கூறினார். நற்றமிழ் - "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத்தமிழ்" (970); "தமிழ்ச் சொல் வடசொல் லெனுமவ் விரண்டு, முணர்த்து மவனை யுணரலு மாமே" (திருமந்); "தமிழ்ச்சொலும் வடசொலுந் தாணிழற் சேர" (தேவா); தமிழின் நன்மையாவது இறைவரை எளிதின் உணர உணர்த்தி ஆட்படவைக்கும் தன்மை. பொதியமலை - இது பாண்டி நாட்டில் தெற்கில் உள்ளதோர் மலை; அகத்திய முனிவரிருப்பிடமாக விளக்கமா யறியப்படும்; "சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப், பரமாசாரியன்" என்று முன்னோர் உளங்குளிரப் போற்றுவர்; இது "பொதியில்" எனவும் வழங்கும் (சிலப்). தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பொதுவிட மாயிருத்தலின் இப்பெயர்பெற்ற தென்பர் மகாமகோபாத்தியாயர் உ.வே - சாமிநாதய்யர். வழிக்கொள்ளுதல் - வழியிலே பொருந்தச் செல்லுதல். |
|
|