பாடல் எண் :3566

மன்னுதிருக் கேதாரம் வழிபட்டு மாமுனிவர்
பன்னுபுகழ்ப் பசுபதிநே பாளத்தைப் பணிந்தேத்தித்
துன்னுசடைச் சங்கரனா ரேற்றதூ நீர்க்கங்கை
அன்னமலி யகன்றுறைநீ ரருங்கரையின் மருங்கணைந்தார்
3

(இ-ள்) மன்னு....வழிபட்டு - (கயிலையினின்றும் வழிக்கொண்ட யோகியார்) நிலைபெற்ற திருக்கேதாரத்தினை வணங்கி; மாமுனிவர்....ஏத்தி - பெருமுனிவர்கள் எடுத்துச் சொல்கின்ற புகழினையுடைய பசுபதி நேபாளத்தினைப் பணிந்து துதித்து; துன்னு....அணைந்தார் - நெருங்கிய சடையிலே சிவபெருமானார் சிரத்தில் ஏற்று வைத்தருளிய தூய நீரினையுடைய கங்கையாற்றினது, அன்னங்கள் நிறைந்த அகன்ற துறையின் நீர்மிக்க அரிய கரையின் பக்கத்தே வந்தணைந்தார்.
(வி -ரை) திருக்கேதாரம் - இமயமலைச் சாரலில் உள்ளதொரு பதி; இது தேவாரப் பாடல்பெற்ற வடநாட்டுப் பதிகளுள் ஒன்றாக வைத்தெண்ணப்படும். இதனை, ஆளுடைய பிள்ளையாரும் நம்பிகளும் திருக்காளத்தியி லிருந்தபடியே பாடியருளினர். தலவிசேடங்களுக்குப் பதிகங்கள் பார்க்க.
மாமுனிவர்....நேபாளம் - நேபாளம் - இமயமலைச் சாரலில் வடகீழ்ப்புறம் உள்ள ஒருதனி அரசாங்கத்துட்பட்ட நாடு; பண்டு தொட்டு வரும் சுயேச்சையான முடிமன்னர் மரபினால் ஆளப்படுவது; இந்நாடும் இவ்வரசர்களும் சைவ மரபில் மிகப் பற்றுடையவர்; சிவ வழிபாட்டினும் திருநீறும் அக்கமணியுமாகிய சிவசின்னங்களினும் மிகச் சிறந்த பத்தி வாய்ந்த ஒழுக்கமுடையவர்; இச்சிறப்புக் கருதி இது பசுபதி நேபாளம் எனப்படும். உருத்திராக்கம் விளையும் நாடு மாமுனிவர் - பெருமுனிவர்களது பழைய ஆசிரமங்கள் பல இன்றும் விளங்குதல் குறிப்பு. மிகப் பெரிய சிவலிங்கத் திருவுருவங்கள் வழிபடப்படும் இடங்கள் உள்ளன. சிவராத்திரி சிறப்பாகத் கொண்டாடப் பெறுவது.
சடை ஏற்ற - என்க; சங்கரனார் - சுகஞ் செய்கின்றவர். பகீரதனுக்காகக் கங்கையைச் சடையில் ஏற்று அவனது முன்னோர்களுக்குச் சுகம் செய்த குறிப்புப் பெற இப்பெயராற் கூறினார். சடையில் ஏற்றல் - ஆயிரமா முகத்தினோடு பரந்து வந்ததை முழுதும் சடையில் ஏற்றலும், அடங்கச் செய்து பனிபோலாகச் சிறிதாக்கி உலகில் விடுத்தலும் குறித்தது.
தூநீர் - சகரர்களைப் புனிதமாக்கிக் கதியளித்த குறிப்புப் பெறத் தூநீர் என்றார்; இன்றும் அத்தன்மையுடன் விளங்குதல் கண்கூடு.
அகன்துறை - நீர் அருங்கரை - துறை அகலமுடையது; நீர் ஆழமுடைத்தாய்க் கரையருகிலேயே விளங்குவது என்பதாம். அன்னமலி - நீர்ச்செழிப்புக் குறித்தது. கபில முனிவர் சாபத்தாலே நீறாகிய சகரர்கள் என்னும் தனது முன்னோர் நற்கதியடையும் பொருட்டுப் பகீரதன் முன் பிரமதேவனையும், பின் சிவபெருமானையும் நோக்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் தவஞ்செய்யக், கங்கைப் பெருக்கு வரவே, அது உலகை அழிக்காது சிவபெருமான் சடையில் ஏற்று அளவுபெற உலகில் விடுத்து அவர்களைப் புனிதர்களாக்கிக் கதியளித்தனர் என்ற வரலாறு மாபுராணங்களுட் கேட்கப்படும்.