பாடல் எண் :3568

நீடுதிருக் காளத்தி நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான வாலவனந் தொழுதேத்தித்
தேடுமிரு வர்க்கரியார் திருவேகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி வளநகரின் வைகினார்.
5

(இ-ள்) நீடு....வணங்கி - நீடும் திருக்காளத்தி மலையிலே நிலைபெற்று விளங்கும் தாணுலாகிய சிவபெருமானை வணங்கி; ஆடு....ஏத்தி - இறைவர் அருட்கூத்தியற்றும் திருமன்றங்களுள் ஒன்றாகிய திருவாலங்காடு என்ற பதியினைத் தொழுது துதித்து; தேடும்....பணிந்து - கீழும் மேலுமாகத் தேடிய அரிக்கும் அயனுக்கும் காணுதற்கரியராய் நிமிர்ந்தாராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருஏகாம் பரத்தினையும் பணிந்து; மாடுயர்....வைகினார் - உயர்ந்த பெரிய பொன்னாலாகிய மதில்களையுடைய திருக்காஞ்சிபுரம் என்னும் நீர்வளமுடைய அத்திருநகரில் தங்கினார்.
(வி-ரை) நீடு திருக்காளத்தி - நீடும் தென்கயிலை என்னும் சிறப்புக் குறித்தது.
தாணு - சிவன்; நிலைபேறுடையவர்; தூண்போலத் தாங்குபவர்; நிலவு தாணு - "மலையெழு கொழுந்து" என்றபடி மலைமிசை முளைத்தெழுந்த முதல்வர்.
ஆடு திருஅரங்கு - இறைவர் அருட்கூத்தாடும் ஐம்பெரு மன்றங்களுள் ஒன்றாகிய; திருவாலங்காடு - இரத்தின சபை; சிதம்பரம் - பொற்சபை; மதுரை - வெள்ளிச் சபை; திருநெல்வேலி - தாமிர சபை; குற்றாலம் - சித்திரசபை என்பன இவ்வைந்து சபைகள்.
ஆலவனம் - திருவாலங்காடு; காரைக்காலம்மையார் இறைவரது எடுத்த திருவடிக்கீழ் என்றுமிருக்கும் பெருமையுடைய பதி.
திரு ஏகாம்பரம் - காஞ்சிபுரத்தில் இறைவர் எழுந்தருளிய திருவாலயம்; ஆம்பரம் - மாமரம்; ஏக ஆம்பரம்; ஒரு (ஒப்பற்ற) - வேதவடிவான - மாமரம்; இதனடியில் அம்மை பூசிக்க இறைவர் எழுந்தருளி யுள்ளார்; "மர வமர்ந்தநம் மிருக்கை"(1130); ஏகாம்பரம் என்பது வேறு; ஏகம்பம் என்பது வேறு. மாடு - பக்கம் என்றலுமாம்.
காளத்தி - திருவாலங்காடு - திருவேகாம்பரம் இவற்றின் தலவிசேடங்களைப் பற்றி அவ்வவற்றின் பதிகங்களின் கீழ்ப்பார்க்க.