நற்பதியங் கமர்யோக முனிவர்களை நயந்துபோய்க் கற்புரிசைத் திருவதிகை கலந்திறைஞ்சிக் கறைக்கண்டர் அற்புதக்கூத் தாடுகின்ற வம்பலஞ்சூழ் திருவீதிப் பொற்பதியாம் பெரும்பற்றப் புலியூரில் வந்தணைந்தார். | 6 | (இ-ள்) நற்பதி....போய் - நல்ல பதியாகிய அந்தக் காஞ்சியிலே விரும்பித் தங்கியுள்ள சிவயோகியர்களாகிய முனிவர்களை விரும்பி அன்புடன் கலந்திருந்து சென்று; கற்புரிசை....இறைஞ்சி - கல்மதில் சூழ்ந்த திருவதிகை வீரட்டானத்தில் கூடி வணங்கி; கறைக்கண்டர் ....அணைந்தார் - திருநீலகண்டத்தினை உடைய இறைவர் அற்புதமாகிய அருட் பெருந் திருக்கூத்தினை ஆடுதற்கிடமாகும் திருவம்பலத்தினைச் சூழ்ந்த திருவீதியினை உடைய பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரில் வந்து அணைந்தனர். (வி-ரை) நற்பதி - உயிர்களுக்குச் சிவபூசனையை விளங்கச்செய்து காட்டி உய்விக்கும் கருணைச் செயலினையும், எல்லா அறங்களையும் அம்மையார் செய்தற்கிடமாகிய பதி. அமர்யோக முனிவர்கள் - சிவயோகத்தில் உறைப்புக்கொண்ட சிந்தையினை யுடைய முனிவர்கள். இவர்களைப் பற்றி முன்னர்ச் "சத்தி தற்பர சித்த யோகிகளுஞ் சாத கத்தனித் தலைவரு முதலா, நித்த மெய்திய வாயுண்மெய்த் தவர்கணீடு வாழ்திருப் பாடியு மனேகம்" (1159) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. அமர்தல் - விரும்புதல்; வீற்றிருத்தல். யோக முனிவர்களை நயந்து - நயத்தலாவது விரும்பி உடனமர்தல்; இவரும் சிவயோகிய ராதலானும், கேண்மையினாற் குறுமுனிபாற் செல்கின்றா ராதலானும் இங்குத் தன் ஒப்புடைய, அவரொப்புடைய, யோகமுனிவர்களை நயந்திருந்தனர் என்பதாம். இவ்வியோகிய ரியல்பு பற்றிக் "காமனை முனிந்து நெடுஞ்சடை முடித்துக் கவின்றகல் லாடைமேற் புனைந்தி, யாமெலாம் வழுத்துந் துறவியென் றிருந்து மொருத்திதனிளமுலைச் சுவடு, தோமுறக் கொண்டா ரெனச்சிறை யிடல்போற் சுடர் மனக் குகையுளே கம்பத், தோமொழிப் பொருளை யடக்கியா னந்த முறுநர்வா ழிடம்பல வுளவால்" என்ற காஞ்சிப் புராணக் (திருநகர்ப் படலம் - 109) கருத்தும் காண்க. கற்புரிசைத் திருவதிகை - மும்மதிலெய்த வீரம் நிகழ்ந்தமை குறிக்கப் புரிசை பற்றிக் கூறினார். பொன் வெள்ளி செம்பு மதில்களையுடைய புரங்களை இருந்தவாறே எரித்த எளிமையும் வலிமையும் குறிக்கக் கற்புரிசை என்று இலேசுபடக் கூறினார்; கலந்து - கூடி; கூடுதல் அதன்வழிச் செல்லுதல். அற்புதக் கூத்து - அற்புதம் - காணுந்தோறும் புதிது புதிதாயிருத்தல்; ஆடுகின்ற அம்பலம் - ஆடுதற்கிடமாகிய மன்றம். ஆடுதற்கு இறைவர் என்ற எழுவாய் அவாய் நிலையான் வந்தது. திருவீதி பொற் பதி - "மாதவங்கள் நல்குந் திருவீதி நான்கும் தொழுது" (2063) - "பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி புரண்டு வலங்கொண்டு" (1444) என்றவை காண்க; இத்திருவீதிச் சிறப்பினை யுணர்த்துதற்கு அம்பலஞ் சூழ்திருவீதிப் பொற்பதி எனப் பதியின் சிறப்பினைத் திருவீதியொடு படுத்துக் கூறினார். பொற்பதி - அங்கங்கும் பொன்னாலாகிய பணிகள் பல செய்யப்பட்டு விளங்கும் பதி; விண்ணவரும் இரணியவர்மன் முதலியோரும் அணிந்த பொன்னம்பலமும், "திருப்பே ரம்பலஞ் செய்ய, தூய பொன்னணி சோழன்" என்றபடி திருப்பணி செய்த பேரம்பலமும், தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக்கிய திருஎல்லையும் முதலியனவும் கருதத்தக்கன. பொற்றில்லைக் கூத்து என்ற திருமந்திரப் பகுதி காண்க. இரண்ய மயகோசமாம் திருத்தில்லை என்பாருமுண்டு. பெரும் பற்றப்புலியூர் - ஏனைப் பற்றுக்களை எல்லாம் ஒழித்த துறவிகளுக்கும் பெரும்பற்றை விளைப்பது. "துறந்தோ ருள்ளப் பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானை" (தேவா). |
|
|