எவ்வுலகு முய்யவெடுத் தருளியசே வடியாரைச் செவ்வியவன் புறவணங்கிச் சிந்தைகளி வரத்திளைத்து வவ்வியமெய் யுணர்வின்கண் வருமானந் தக்கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டங் காராமை யமர்ந்திருந்தார். | 7 | (இ-ள்) எவ்வுலகும்....வணங்கி - எல்லா உலகங்களும் உய்யும்படி தூக்கிய சேவடியினை உடைய கூத்தப்பெருமானைச் செம்மையாகிய அன்புபொருந்த வணங்கி; சிந்தை களிவரத்திளைத்து - மனத்தில் மகிழ்ச்சி வர அவ்வனுபவத்தில் அழுந்தித் தம் வசமற்று நின்று; வவ்விய....கூத்தை - உயிர்ப் போதத்தினை விழுங்கி அதன்மேல் விளங்கும் மெய்யுணர்வாகிய சிவபோத நிலையில் வெளிப்படும் சிவானந்த அருட் கூத்தினை; அவ்வியல்பிற் கும்பிட்டு - முழுதும் பதிஞானமாகிய தன்மையிலே நின்று அனுபவித்து வழிபட்டிருந்து; அங்கு....அமர்திருந்தார் - அத்திருப்பதியிலே ஆராமையினாலே விரும்பித் தங்கியிருந்தனர். (வி-ரை) எவ்வுலகும் உய்ய - விண்ணும் மண்ணும் பிறவுமாகிய உலகமெங்குமுள்ள எல்லா உயிர்களும் உய்திபெறும் பொருட்டு. உலகுய்ய எடுத்தருளிய சேவடியார் - இஃது ஐந்தொழிற் கூத்தினை உணர்த்தியது; எடுத்தருளி - தூக்கிய; பிறவிப் பெருங்குழியினின்றும் மேலே எடுத்த என்பதும் குறிப்பு. "ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை யாட்கொண்டதே" (அரசு - தேவா). செவ்விய....திளைத்து - ஐந்தொழிற் கூத்தின் இயல்பினை முழுதும் அத்திருவடிவத்தில் வைத்து எண்ணி எண்ணிக் கண்டு ஆனந்தத் தழுந்தி. அன்புற வணங்குதல் - சிந்தை களிவரத் திளைத்தல் - என்ற நிலை வேறு; இவை கருவி கரணங்களின் எல்லையளவு கண்டு ஆனந்தத் தழுந்துதல். மேல் அவ்வியல்பிற் கும்பிட்டு என்ற நிலை வேறு; அது தற்போதமிழந்த நிலையில் வெளிப்படுவதாய் ஞாதிரு ஞான ஞேயங் கடந்த சிவபோத அனுபவம்; அவ்வியல்பில் - அச்சிவபோத நிலையேயாகி; இது யோகியர்களால் காலமிடங் கடந்த சிவானுபூதிக நிலையில் அனுபவிக்கப்படும் சிவானந்த நிலை; "பின்னர்த் தேவிருக்கை யமர்ந்தருளிச் சிவயோகந்தலை நின்று, பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்ந்திருந்தார்" (3588) என்னும் நிலையில் மூவாயிரத் தாண்டு சிவபோதியி னிழலில் அமர்ந்திருக்கும் நிலையிதுவாகும். இதனை ஆனந்தக் கூத்தென்றும், முன்னையது ஐந்தொழிற் கூத்தென்றும் அற்புதக்கூத்து - சிவானந்தக் கூத்து முதலிய பகுதிகளுள்ளும், பிறாண்டும் கண்டு கொள்க. "நின்றயங்கி யாடலே நினைப்பதென்னியமமே" (தேவா) என்ற கருத்தும், காண்க. இவற்றினியல்புகளையும் அனுபவ நிலைகளையும் திருமந்திரத்தினுள் 9-ம் தந்திரத்தினுள்ளும் மெய்கண்ட ஞான நூல்களுள்ளும் கண்டுகொள்க. ஆராமை - ஆராமையினாலே; ஆராமையாவது மனநிறைவு பெறாமை. காஞ்சிபுர வழிபாட்டினை இரண்டு பாட்டுக்களாலும், பெரும்பற்றப் புலியூரினை இரண்டு பாட்டுக்களாலும் உரைத்தருளினர்; இதுபற்றி முன் திருமலைச் சிறப்பில் உரைத்தவை பார்க்க, எடுத்தாடிய - சிந்தைதெளிவர - அமைந்திருந்தார் - என்பனவும் பாடங்கள். |
|
|