பாடல் எண் :3571

தடநிலைமா ளிகைப்புலியூர் தன்னிலுறைத் திறைஞ்சிப்போய்
"அடல்விடையின் மேல்வருவா ரமுதுசெய வஞ்சாதே
விடமளித்த" தெனக்கருதி மேதினிக்கு வளநிறைத்தே
கடல்வயிறு நிறையாத காவிரியின் கரையணைந்தார்.
8

(இ-ள்) தடநிலை....போய் - பெரிய நிலைகளையுடைய மாளிகைகள் நிறைந்த பெரும்பற்றப்புலியூரில் தங்கியிருந்து வணங்கி மேற்சென்று; அடல்....எனக்கருதி - வலிமையுடைய இடபத்தின் மேல்வரும் இறைவர் அமுது செய்யும்படி சிறிதும் அஞ்சாமல் விடத்தினைக் கொடுத்தது என்று கருதி; மேதினிக்கு....நிறையாத - உலகுக்கு எல்லா வளங்களையும் நிறையக் கொடுத்துக், கடலின் வயிற்றினை நிறைக்காத; காவிரியின் கரையணைந்தார் - காவிரியாற்றின் கரையினை அணைந்தனர்.
(வி-ரை) தடநிலை மாளிகை - இவை இறைவரது திருமாளிகையும் அதனைச் சூழ்ந்த அம்பலம்சூழ் திருவீதியில் தில்லைவாழந்தணர்களின் மாளிகைகளும்.
அடல் விடையின்....எனக்கருதிக் கடல் வயிறு நிறையாத - ஏனை ஆறுகள் போலக் காவிரியாறு கடலிற்போய்ப் பாய்வதில்லை; அதன் நீர் முதலிய வளமெல்லாம் தொடக்கத்திலிருந்து நிலங்களை வளம்படுத்தற்கே பயன்படுகின்றன; எஞ்சிய நீர் மிகக்குறைவாதலின் காவிரிப் பூம்பட்டினத்தருகில் காவிரி சங்கமுகத்துறையிலே கடலினுள் சென்று பாய்வதற்குப் போதியதன்றாம். அதற்குக் காவிரி கருதியதாக ஒரு காரணங் கற்பித்து இவ்வாறு கூறினார். தற்குறிப் பேற்ற அணி. சிவாபராதம் செய்தாரோடு இணக்கம் கூடாது என்று கூறும் விதியினை வலியுறுத்தல் கருத்து. "காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா); "அவரைக் கண்டா லம்மநா மஞ்சுமாறே" (திருவா) என்றற் றொடக்கத்த திருவாக்குக்களின் கருத்துக் காண்க; இக்கருத்தையே எடுத்தாண்டு ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தினுள் (வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்தில்) வைகையாற்றுக்கு மற்றொரு வகையால்ஆக்கித் "தொடுத்த வறுமையும் பயனும்" என்ற பாட்டினுள் பாராட்டிப் போற்றி வைத்திருத்தல் காண்க.
இனி, இயற்பகை நாயனார் புராணத்தினுள் "வயல் வளந்தர வியல்பினிலளித்துப், பொன்னி நன்னதி மிக்க நீர்பாய்ந்து புணரி தன்னையும் புனிதமாக்குவதோர், நன்னெ டும்பெருந் தீர்த்தம்" (404) என்றது இக்கருத்துடன் மாறுபடுமோ? எனின், படாது; இது முன்னரே ஆண்டு விளக்கப்பட்டது காண்க. மிக்க நீர் என்றது வெள்ள காலத்திற் பெருகி மிகுந்த நீர் என்ற குறிப்புடைமையாலும், ஈண்டு "வயிறு நிறையாத" என்றமையால் நிறைவுபட வழங்காது சுருங்கிய அளவில் மட்டும் தருவது (starvation diet) என்ற குறிப்புடைமையானும் அமையுமென்க.
இனி, ஈண்டு இத்தன்மையாற் காவிரியைச் சிறப்பித்தது, விதிவிலக்குகளை உலகுக் குணர்த்தி வழிப்படுத்த வரும் சிவாகமமாகிய திருமந்திரம் வந்து வாய்ப்பதற்குப் பொருந்த உரைக்கும் தன்மை காட்டும் குறிப்புமாகும்.
என மலைத்து - கடல் வயிற்று - என்பனவும் பாடங்கள்.