பாடல் எண் :3572

காவிரிநீர்ப் பெருந்தீர்த்தங் கலந்தாடிக் கடந்தேறி
ஆவினருங் கன்றுறையு மாவடுதண் டுறையணைந்து
சேவில்வரும் பசுபதியார் செழுங்கோயில் வலம்வந்து
மேவுபெருங் காதலினாற் பணிந்தங்கு விருப்புறுவார்,
9

(இ-ள்) காவிரி....கடந்தேறி - காவிரி நீராகிய பெருமையுடைய தீர்த்தத்தில் கலந்து நீராடி அதனைக் கடந்து அதன் தென்கரையில் ஏறிச் சென்று; ஆவின்....அணைந்து - பசுவின் கன்றாக உமை அம்மையார் அணைந்து தவஞ் செய்யும் திருவாவடுதுறையினை அணைந்து; சேவில்....வலம்வந்து - இடபத்தில் எழுந்தருளும் பசுபதியாராகிய இறைவனாருடைய செழுங் கோயிலினை வலம்வந்து வழிபட்டு; மேவு....விருப்புறுவார் - பொருந்திய பெருங் காதலினாலே வணங்கி அங்கு விருப்ப முடையவராகி,
(வி-ரை) காவிரி நீர்ப் பெருந் தீர்த்தம் - பெருந் தீர்த்தமாகிய காவிரி நீர் என்க; தீர்த்தம் - தூய்மை செய்யும் தன்மையுடையது; நீர் என்ற அளவில் மட்டும் அதையும் ஏனைய ஆற்று நீர்கள் போல் அல்லாது, தீர்த்தமாம் (தூய்மை செய்வது) தன்மையும் உடையது காவிரியின் நீர் என்பதாம்; நீர்த் தீர்த்தம் கலந்தாடி என்றது நீர் என்ற தன்மையால் உடலும், தீர்த்தம் என்றதன்மையால் உயிரும் தூய்மை பெற்றன என்பார் இரண்டும் சேர்த்துக் கூறியதோடு கலந்து என்ற குறிப்பும் கூறினார்; கலந்து - "கங்கை யாடிலென் காவிரியாடிலென்....எங்கு மீச னெனாதவர்க் கில்லையே" (தேவா - தனிக் குறுந்) என்றபடி இறைவரது தன்மை விரவும் நினைவுடன் என்ற பொருள் தருவது. முன்னர்க் "கங்கைநீ டுறையாடி" (3567) என்ற ஆசிரியர் இங்குக் "காவிரிநீர்ப் பெருந்தீர்த்தங் கலந்தாடி" என்றதும் கருதுக.
கடந்து ஏறி - காவிரியைக் கடந்து தென்கரையில் ஏறி; யோகியார் காவிரிக்கு வடக்கே திருத்தில்லையினின்றும் தெற்கு நோக்கி வருகின்றாராதலின் காவிரியைக் கடந்து ஏற வேண்டுவதாயிற்று.
ஆவின் அருங்கன்று உறையும் ஆவடு தண்துறை - உமையம்மையார் ஒரு காரணத்தால் பசுவின் வடிவுடன் போந்து இங்குத் தவஞ்செய்து அப்பசு வடிவம் நீங்கப்பெற்று வழிபட்டுறைகின்றார் என்பது தலவரலாறுகளுள் ஒன்று; ஆவின் அருங்கன்று - பசுக் கன்று வடிவு பெற்ற அம்மையார்; இது காரணமாக இறைவர் பசுபதியார் எனப் பெற்றார் என்ற வரலாறும், மேல் "சேவில் வரும் பசுபதியார் செழுங்கோயில்" என்பதும் காண்க; ஆவின் அருங்கன்று - பின்னே போந்த வடிவமாதலானும், மலம் பற்றிய உயிர்களாகிய ஏனைப் பசுக்கள் போலாது சிவத்தினின்றும் போந்த, சிவசத்தியாதலானும் என்னாது ஆவின் கன்று என்றார். அருங்கன்று என அருமைபடக் கூறியது மிக்கருத்து. ஆ அடுதுறை - பசுத்துவம் நீங்கப் பெற்ற இடம், ஆ - பசு; கோகழி - என்பதும் இப்பொருட்டு, கோ - பசு.
சேவில் வரும் பசுபதியார் சே - இடபம்; பசுபதி - உயிர்களுக்கெல்லாம் பதியாவார். இரட்டுற மொழிதலால் இங்குப் பசுவாக வந்து வழிபட்ட அம்மையாருக்குப் பதியாவார் என்றுரைக்கவும் நின்றது.
மேவு பெருங் காதலினால்....விருப்புறுவார் - மேவுதல் பின்னரும் வந்து பொருந்தித் தங்கும் என்ற சரித நிகழ்ச்சியின் முற்குறிப்பு; பெருங் காதல் - முதலில் இறைவரைப் பணிந்தபோது உள்ள மனநிலை; விருப்புறுவார் - பின்னர் வந்து உறையும் மனநிலையின் முற்குறிப்பு. உறுவார் - என்ற எதிர்கால வினையெச்சக் குறிப்புமது. இதனை மேற்பாட்டில் ஆசிரியர் விரித்தருளுதல் காண்க.
காவிரியின்நீர்த் தீர்த்தம் - காவிரிநீர்த் தீர்த்தங்கள் - என்பனவும் பாடங்கள்.