அந்நிலைமைத் தானத்தை யகலாத தொருகருத்து முன்னியெழுங் குறிப்பினான் மூளுமா தரவெய்தப் பின்னுமகன் றேகுவார் பேணவருங் கோக்குலங்கள் பொன்னிநதிக் கரைப்புறவிற் புலம்புவன வெதிர்கண்டார். | 10 | (இ-ள்) அந்நிலைமை....ஆதரவெய்த - அந்த நிலைமையிலுள்ள அப்பதியினை விட்டு நீங்காததோர் கருத்துத் திருவுள்ளத்தில் நினைய எழுகின்ற குறிப்பினாலே பெருகிய அன்பு பொருந்தக் கண்டும்; பின்னும் அகன்று ஏகுவார் - அதன் பின்னும் அதனைவிட்டு நீங்கிச் செல்வாராகிய யோகியார்; பேணவரும்....எதிர்கண்டார் - மேய்ப்பதற்காக அங்கு ஓட்டப்பட்டு வரும் பசுக் கூட்டங்கள் காவிரி நதியின் கரையிற் புறவினிடத்தே புலம்புவனவற்றை எதிரில் கண்டனர். (வி-ரை) அந்நிலை....ஆதரவு எய்த - இது யோகியர் திருக்கோயிலில் வழிபடும்போது திருவருளினால் அவர் மனத்துள் எழுந்த கருத்தும், அதனால் அங்குத் தங்குதற்கு உற்ற பெரிய ஆசையும் குறித்தது. அகலாதது ஒரு கருத்து - வழியில் ஏனைய பதிகளைக் கண்டு நீங்கியதுபோல அந்தத் தலத்தையும் விட்டு நீங்காத நிலைமையில் அங்கு உறையும்படி எழுந்த எண்ணம். இக்கருத்து எழுந்த காரணம் அவரையறியாமலே உள்வந்து நினைவில் எழுந்தது. இதன் காரணத்தைப் பின்னரே ஆராய்ந்து தெளிகின்றார் (3585); அந்நிலைமைத் தானத்தை - அந்த நிலைமையில் கருத்து எழுந்த அவ்விடத்தை; அந்நிலையாமை - கன்று உறையும் அந்தநிலை என்றலுமாம். அகலாத - முன் தானங்களினின்றும் நீங்கி வந்து தென்றிசையில் சென்றதுபோல் நீங்காத; மூளும் - மேன்மேல் எழுகின்ற; ஆதரவு - காதல்; ஆசை; இது பிற்சரித விளைவுக் குறிப்பினால் நிகழ்ந்தது. பின்னும் - அத் தானத்தை அகலாத ஆதரவு மூண்ட பின்னரும்; அதனாற் றடைபடாது என்க. அகன்று ஏகுவார் - கண்டார் - என்க; முன்போல மேலே தெற்கு நோக்கிச் செல்வாராகிய யோகியார். பேண வரும் - மேய்ப்பதற்காகச் சேர்த்துக்கொண்டு வரப்பட்டு அந்த நதிக் கரைப் புறவில் கூடிய; கரைப் புறவு - காவிரித் தென்கரைப் புறவிடங்களில். இவ்விடம் புறவு எனப்பட்டது. மருதப் புறவாகிய நதிக்கரைச் சார்வில் பசுக்கள் மேய்ந்து தங்கக்கூடிய புல் செடி முதலியவை நிறைந்த குறுங்காடுகள்; முல்லைச் சார்புடையவை; மேய்ச்சற் புறம்போக்கு என்பது நவீன வழக்கு. கோக்குலங்கள் புலம்புவன - புலம்புவனவாகிய நிலையில் இருந்த கோக்குலங்களை; புலம்புதல் - கதறுதல்; அம்மா என அலறி அழைத்தல். கண்ணீர் சோர்தல், முகங் கவிழ்தல் முதலிய மெயப்பாடுகளைக் கொள்ளுதல். "வெம்பிடு மலருஞ் சோறு மெய்ந்நடுக் குற்று வீழும்" (108); "ஆத் தரியா தாகி முன்னெருப் புயிர்த்து விம்மி முகத்தினிற் கண்ணீர் வார" (112) என்ற நிலைகள் காண்க. குலங்கள் - கூட்டம் குறித்தது; எதிர் - தம்முன்; தம் எதிரே. |
|
|