"இவனுயிர்பெற் றெழிலன்றி யாக்களிடர் நீங்கா"வென் றவனுடலிற் றம்முயிரை யடைவிக்க வருள்புரியுந் தவமுனிவர் தம்முடலுக் கரண்செய்து தாமுயன்ற பவனவழி யவனுடலிற் றம்முயிரைப் பாய்த்தினார். | 13 | (இ-ள்) இவன்....என்று - "இந்த இடையன் உயிர்பெற் றெழுந்தாலல்லது இப்பசுக்கள் துன்ப நீங்கமாட்டா" என்று உணர்ந்து; அவனுடலில்....தவமுனிவர் - அவனது உடலிலே தமது உயிரைச் சேர்விக்க அருள்புரிகின்ற அத்தவ முனிவர்; தம் உடம்புக்கு அரண்செய்து - தமது திருவுடம்பினைக் காவலாகிய ஓர் இடத்தில் சேமித்து; தாம்....பாய்த்தினார் - தாம் பயின்று கைவந்த பிராணவாயுவை அடக்கும் உபாயத்தின் மூலமாக அவனது உடலினுள் தமது உயிரினைப் புகுவித்தார். (வி-ரை) "இவன்....நீங்கா" என்று - பசுக்களின் துயர் நீங்குதல் வேண்டுமாயின் அதற்கு இதுவே உபாயம் என்று யோகியார் துணிந்த மனக்கருத்து. இடையனை உயிர்ப்பிப்பது அவனை இன்னும் சின்னாள் வாழவைக்க வேண்டும் என்ற கருத்தாலன்று; பசுக்களின் துன்பநீங்குதற்கு அதுவே வழி என்றதாம். எழில் அன்றி - இடர் நீங்கா - எதிர்மறையாற் கூறியது வேறு உபாயமில்லை என்ற துணிபை வற்புறுத்தி உறுதி கூறுதற்கு. அவனுடலில் தம்முயிரை அடைவிக்க - இடையன் உயிர்பெற் றெழுவதற்கு அவனுயிரையே மீள வரச்செய்வது ஓர் உபாயம். ஆனால் அவன்பொருட்டு யோகியார் அவனை உயிர்பெற் றெழச்செய்தல் வேண்டினாரலர்; ஆக்கள் இடர்நீங்கச் செய்தலே கருதினார்; அன்றியும் வினைமாள ஆயுள் தீர்ந்த அவனுயிரையே மீட்டும் வரச் செய்தலும் கூடாத காரியம்; வேண்டாத காரியமுமாம். ஆதலின் பசுக்களுக்காகச் சிலபோதுமட்டும் அவனை உயிர்பெற்றெழச் செய்து, பசுக்களைத் துயர்நீக்கி, மனைகளிற் போக்குதலே கருதிய யோகிகள் அதன்பொருட்டுத் தம் உயிரை அவன் உடலிற் அடைவிக்கவே எண்ணினார். பின் நிகழ்ச்சியிலும் அதனையே செய்தனர். இவ்வாற்றால் இறைவரருளும் இதனையே அவர் கருத்தில் எழச் செய்தது. அருள் புரியும் தவமுனிவர் - யோகியார்; அருள் புரியும் - பசுக்களின் துயருக்கிரங்கியே எண்ணிச் செயல் செய்தாராதலின் அருள் புரியும் என்றார்; தவம் - எண் சித்தி கைவந்த யோகமும் அருளுமுடைமை. "அளிகூர்ந்த அருளினராய்" (3578). தம் உடம்புக்கு அரண் செய்து - இடையனது உடலிற் தம் உயிரைப் புகுத்தி அவ்வுடலோடு ஆக்களைக் கொண்டு அந்தந்த மனைகளிற் செலுத்தி மீண்டும் வந்து தம் உடம்பிற்கு முன்போல மேற்செல்ல எண்ணினாராதலின் அதுவரை தமது உடம்பை அரண்தருகாப்பில் வைத்துக் காவல் செய்தார். அரணாவது நரி, கழுகு, நாய் முதலிய பிராணிகளாலும் மக்களாலும் ஊறு செய்யப்படாது காக்கும் காவல். தாம் முயன்ற பவனவழி - தாம் முன் பல காலம் முயன்று கைவரப் பெற்ற பிராணாயாம நிலையின் வழி; பிராகரமியம் என்ற சித்தியினாலே வரும் இந்நிகழ்ச்சி குறிக்கத் தொடக்கத்தில் "அணிமாதி வருஞ்சித்தி பெற்றுடையார்" (3565) என்றதும் காண்க. பவனம் - வாயு; வாயுமூலமாக உயிரைச் செலுத்துதல்; "காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்த" (1715) என்றதும், ஆண்டுரைத் தவையும் பார்க்க. பவனவழி - தம் - உயிரை - அவனுடலிற் - பாய்த்தினார் - இஃது ஒரு உடம்பினுள் உயிர் புகும் தன்மை; "மால்கொடுத் தாவி வைத்தார்" (தேவா); இது பரகாயப் பிரவேசம் எனப்படும்; கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்பது; "ஆன்மாக்கள் மாறிப் பிறந்துவரும்" என்ற சிவஞான போதம் இரண்டாஞ் சூத்திரம் மூன்றாம் அதிகரணத்தினுள் இதனையே உதாரணமாக எடுத்துக்காட்டுதல் காண்க. உலகில் ஆன்மாக்கள் பிறந்த வருதல் எல்லாம் இத் தன்மையே என்பது ஞானநூற்றுணிபு. தூலஉடல் விட்ட ஆன்மா "முன்னுடம்பு இறக்குங்கால் அடுத்த வினை காட்டும் கதிநிமித்தம் பற்றி உயிர் அவாவுமாறு மனஞ் செலுத்துதலான் அக்கதிக்கட் சேறற் கேதுவாய் எஞ்சிநின்ற புண்ணிய பாவ சேடத்தாற் சூக்குமதேக மாத்திரையாய்ச் சென்று அம்மனந் தள்ளிய கதிக்கு அமைந்த அக் கருவின்கட்படும்" என்ற உரை காண்க. இதனைப் பஞ்சாக்கினி வித்தை என்று வேதங்களுட் பேசப்படும். "அரவுதன் றோலுரிவு மக்கனவும் வேறு பரகாயம் போய்வருமப் பண்பும் -பரவிற் குடாகாய வாகாயக் கூத்தாட்டா மென்ப தடாதுள்ளம் போமாறது" (போதம் - 2 - 3 - வெண்பா.) ஆண்டுரைத்தவையும் காண்க. இங்கு இடையனது வினைமாள ஆயுள் கழிந்து இறந்த உயிர் தனது கன்மநிலைக் கேற்றவாறு சென்று விட்டது; அவன் உடம்பு ஐம்பூதச் சேர்க்கை நீங்கிப் பிரிவுபடக் கிடந்தது. அதனை யாதொரு கன்மத் தொடர்பும் சம்பந்தமுமின்றிச் சிறிது நேரமட்டில் பசுக்களின் துயர் நீங்குதற்குக் கருவியாக்க யோகியார் எண்ணினார். வேறு சென்மத்திற்கும் இதற்கும் இதுவே இங்குள்ள வேறுபாடு. உடலில் உயிரைப் பாய்த்தினார் - மேலிருந்து கீழ்ப்பாயும் இயல்புடைய நீரை ஒரு குடத்தினின்றும் வேறுமோர் குடத்திற்குப் பாய்ச்சுதல் போலக் கீழே நிலத்திடைக் கிடந்த இடைய னுடலில் மேலிருந்த தம் உயிரைச் செலுத்தினார். இடத்தால் மேல் கீழ் என்றது மட்டுமன்றித் தன்மையாலும் அவ்வாறே கொள்ளத்தக்கது. |
|
|