பாய்த்தியபின் றிருமூல ராயெழலும் பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கிமோந் தணைந்துகனைப் பொடுநயந்து வாய்த்தெழுந்த களிப்பினால் வாலெடுத்துத் துள்ளிப்பின் நீத்ததுய ரினவாகி நிரந்துபோய் மேய்ந்தனவால் | 14 | (இ-ள்) பாய்த்தியபின்.....எழலும் - முன்கூறிய அவ்வாறு பாய்த்தியபின்னர்த் திருமூலராகி மேல் எழும்புதலும்; பசுக்களெலாம்....பின் - பசுக்கள் எல்லாம் அவனைக் கண்ட மகிழ்ச்சியுடனே நாத்தழும்பேற அவனுடலினை நக்கியும் மோந்தும் பக்கத்தில் அணைந்தும் கனைப்போடும் விரும்பியும் ஆக இவ்வாறு கொண்டு எழுந்த பெருமகிழ்ச்சியினால் வால்களை மேலே எடுத்துத் தூக்கித் துள்ளிப் பின்னர்; நீத்த.....மேய்ந்தனவால் - துன்ப நீங்கியவையாய் வரிசைபெறச் சென்று மேய்ந்தன. (வி-ரை) திருமூலரா யெழலும் - அவ்வுடம்பு வீடிக்கிடந்த முன்னை நிலையில் மூலன் என்றும், உயிர்பெற்றெழுந்த இந்நிலையில் திருமூலர் என்றும், உடம்பு ஒன்றே உள்இருந்த உயிரின் வேறுபாடு நோக்கி உயர்வு தாழ்வுடைய இருவேறு பெயர் பெற்றது. உயிரின் அளவே பெருமை என்னும் உண்மையினைத் தேற்றியவாறு. மனவசீகரக் கலைஞானம் கற்ற புலவன் மாணாக்கனது புலன்களைத் தன் வசமாக்கி, அவன் தன்னை மறக்கச் செய்து. வேறு கருத்தினைப் புகட்ட, அதன் வழியே நின்று தன்னை மறந்த நிலையில் அவனது சொற்செயல்கள் நிகழ்தல் இங்குக் காணத்தக்கது. (Mesmerism - Hypnotism) பசுக்களெலாம்......மேய்ந்தனவால் - முன்னர்த் (3575) துயரத்தின் மெய்ப் பாடுகளைக் கூறினார்; இங்கு அது நீங்கிய மகிழ்ச்சியின் மெய்ப்பாடுகளையும் செயல்களையும் கூறுகின்றார்; நக்குதல், மோத்தல், கனைப்பொடு நயத்தல்; வாலெடுத்துத் துள்ளுதல், நிரைந்து போய் மேய்தல் இவை களிப்பினாலாவன. சண்டீச நாயனார் புராணம் பார்க்க. துயர் நீத்தனவாகி - என்க. விரைவுபற்றிப் பெயரெச்சவினை முன் வைக்கப் பட்டது. "வென்ற வைம்புலன்" (401) நிரந்து போய் -வரிசையாகச் சென்று, திருமூலராய் எழலும் - (வினைமாள) விடமுண்ணுதலால் வீடி நஞ்சுத்தன்மை; பெற்ற அவ்வுடம்பே பின்னும் யோகியார் இருத்தற்குத் தகுதிபெற்ற கருவியாக ஆகுமோ? எனின், ஆகும்; முன்னை வினைப்படி வந்த சாவுக்குக் காரணமாகியநோய் அவ்வுயிருடன் ஒழிந்தது; அது, பின்னை அங்குப் புகுந்த வேறு உயிரினைத் தொடர்தற்கு இயைபில்லை என்க. அலகை கோட்பட்டார் செயலும் தன்மையும் எல்லாம் அலகையி னுடையவே யாதல் காண்பதுபோலக் கொள்க. இவ்வுடலினின்றே யோகியார் பல்லாயிரம் ஆண்டு யோகிருந்து திருமந்திரம் அருளவேண்டுமென்பது இறைவரது திருவுள்ளமாதலின், அவ்வருளே அவ்வுடம்பை அதற்கேற்றவாறு ஆக்கியதென்றலும் ஆம். இடையனே அன்று வீடியொழியாம லிருந்தாலும் இவ்வுடம்பு அவனுயிர்க்கு மேலும் சில ஆண்டுகளே கருவியாகும். ஆனால் யோகியார் உயிருக்குப் பல்லாண்டுகள் கருவியாய் அழியாதிருந்தமையின் அஃது அவ்வுயிரின் தன்மையும் அருளின் தன்மையுமாதலும் கருதுக. |
|
|