ஆவினிரை மகிழ்வுறக்கண் டளிகூர்ந்த வருளினராய் மேவியவை மேய்விடத்துப் பின்சென்று மேய்ந்தவைதாங் காவிரிமுன் றுறைத்தண்ணீர் கலந்துண்டு கரைஏறப் பூவிரிதண் புறவினிழ லினிதாகப் புறங்காத்தார். | 15 | (இ-ள்) ஆவின் நிரை......அருளினராய் -பசுக் கூட்டங்கள். முன் கூறியபடி மகிழ்ச்சி பொருந்தக் கண்ட கருணைமிகுந்த அருள் கொண்டவராகி; மேவி.......பின் சென்று - அவைகள் கூடி மேய்கின்ற இடங்களில் அவற்றின் பின்னே சென்று; அவைதாம்......கரை ஏற - அவைகள் தாம் காவிரியாற்றின் முன் துறையில் தண்ணீர் கலந்து உண்டு கரை ஏற; பூவிரி....புறங்காத்தார் - பூக்கள் விரிதற்கிடமாகிய குளிந்த புறவில் நிழல் உள்ள இடத்தில் இனிதாகத் தங்கவைத்துப் பாது காத்தனர். (வி-ரை) ஆவினிரை........அருளினராய் - பசுக்கள் துன்பநீங்கி யின்பமுறக் காண்பதே விரும்பி முன்கூறியபடி செயல் செய்தாராதலின் தாம் கருதியவாறே அவை மகிழக் கண்டபோது தாமும் மகிழ்ந்து அவற்றின்மேற் றண்ணளி செய்து கருணை பூத்தனர். மேய்விடத்துப் பின் சென்று - பசுக்கள் மேயும் இடத்தில் பின்செல்லுதல் அங்கங்கும் அவற்றுக்கு ஏதேனும் பயமும் கேடும் வாராது காத்துக் காவல் செய்தற் பொருட்டு. காவிரி முன்றுறைத் தண்ணீர் - காவிரியின் முன்துறையில் ஓடும் தெளிந்த தண்ணீர்; முன்றுறை என்றார் உள்ளே நடுவுட் சென்றால் ஆழமாய் இருத்தலுடன் நீர் வேகமாய் ஓடுதலின் அமைதிபெற அருந்த லாகாமையால் பசுக்கள் தம் இயல்பாகவே கரையோரம் நின்று முன்றுரையிலே நீர் அருந்துவது இயல்பாம். இங்குக் காவிரி என்றது காவிரியினின்றும் பலவாகப் பிரிந்து செல்லும் கிளையாறுகளுள் ஒன்றாகிய வீரசோழனாறு; சாந்தனூருக்கு அருகில் வடக்கில் ஓடுவது. தண்ணீர் கலந்துண்டு - பசுக்கள் புல் மேய்விடத்துப் பல பிரிவாகப் பிரிந்து மேய்வன, புல் அவ்வகை தமக்கு வேண்டுமளவு உணவு தேடிப் பெற்று உண்ணும் பொருட்டு; ஆனால் நீர்த்துறையில் நீருண்ண அனைத்தும் சேர்ந்து சென்று நீர் உண்ணுவது இயல்பு; நல்லநீர் ஒருசேர அனைத்துக்கும் ஓரிடத்திற் பெற உள்ளமையால்; "மானினங்கள் கானிடைநின் றொருவழிச்சென் றேறு துறை ஒளிநின்று" (791). கலந்து - கூடி என்றதாம். இவ்வாறு பசுக்கள் முதலியவை பிரிந்து மேய்வன - கூடி நீருண்பன - பின் நீழலமர்ந்து அசை விடுவன - மாலையில் கன்றுகளை நினைந்து மனையை நோக்கி மெல்ல நடப்பன என்ற இயல்புகள் எல்லாம் அவற்றின் வாழ்க்கைத் திறத்தினையும் அவசியங்களையும் உற்று நோக்கி இயற்கை தெரிந்த பெரும் புலவர்களே உள்ளவா றுரைக்கவல்லவர்; (புலா லுண்ணும் பிராணிகளின் வாழ்க்கை நிலைகள் வேறாதலும் கவனிக்க). புறவின் நிழலின் இனிதாகப் புறங்காத்தார் - புல் உண்டும் நீர் அருந்தியும் பசியும் நீர்வேட்கையும் தீர்ந்த பின்னர், நிழல் உள்ள இடங்களில் பசுக்கள் அனுமதி பெற இருந்து அதைவிட்ட இளைப்பாறும் இயற்கை குறித்தது. இவ்வியற்கைகள் எல்லாவற்றையும் பற்றி முன் சண்டீசர் - ஆனாயர் புராணங்களுள் உரைக்கப்பட்டன காண்க; நண்பகற் கால மாதலின் கதிரவன் வெப்பந் தாக்கா திருக்க நிழல் வேண்டப்படுவது. புறங்காத்தல் - பாதுகாத்தல்; ஒரு ஒரு சொன்னீர்மைத்து. மெய்த்தவர்தாம் - என்பதும் பாடம். |
|
|