பாடல் எண் :3581

அங்கவளு மக்களுட னருஞ்சுற்ற மில்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி "யென்செய்தீர்?"எனத்தளர
"இங்குனக்கென் னுடனணைவொன் றில்லை" யென வெதிர்மறுத்துப்
பொங்குதவத் தோராங்கோர் பொதுமடத்தி னுட்புகுந்தார்.
18

(இ-ள்) அங்கவளும்......மயங்கி - அங்கு அதற்கு அவளும் மக்களோடு அரிய சுற்றத்தாரையும் இல்லாதவளாதலின் தங்கிப் பயந்து மயங்கி; என் செய்தீர் எனத் தளர - என்ன செய்தீர் என்று மனந்தளர்ந்து வருந்த; இங்குனக்கு.......எதிர் மறுத்து - இங்கு உனக்கு என்னுடன் தொடர்பொன்றுமில்லை என்று மறுத்து; பொங்கு......புகுந்தார் - மேன்மேலும் வளரும் பெருந் தவத்தினையுடைய திருமூலர் அவ்விடத்து ஒரு பொது மடத்தினுள்ளே போய்ப் புகுந்தனர்.
(வி-ரை) அங்கவளும்.........இல்லாதாள் - தனக்குத் துணையாக உள்ள சுற்றத்தவர்கள் இல்லாமையால் தானே தனிமையிற் றளவர்வாளாயினாள் என்பது. தங்கி - அங்கே செயலற்று நின்று.
என்செய்தீர் என - துயரத்தில் வரும் இரக்கக் குறிப்பு.
தங்குதல் - வெருவுறல் - மயங்குதல் - தளர்தல் - இவை சடுதியில் நேர்ந்த பெருந்துன்பத்தினால் நேர்ந்த மெய்ப்பாடுகள்; திருமருகலில் "மறுமாற்ற மற்றொருவர்கொடுப்பா ரின்றி" (2372) ஏங்கித் தளர்ந்த வணிகப் பெண்ணின் நிலை ஈண்டுக் கருதத்தக்கது.
இங்கு......என - இது திருமூலராகிய யோகியார் அந்த இடையன் மனைவிக்குச் சொல்லியது. இஃது அப்போது இடையனது உடலின் உள்ளிருந்த உயிரின் நிலை பற்றிக் கூறியது.
பொங்கு தவத்தோர் - இதன் முன் கயிலையில் செய்த பெருந்தவமேயன்றி இனி இங்குத் திருவாவடுதுறையிற் போதியடியில் யோகிருந்து பலகாலம் உலகுக்கருளச் செய்ய நின்ற அரும் பெருந்தவமும் குறிக்கப் பொங்கு என்றார்.
பொதுமடம் - ஊர்ப் பொதுவில் உள்ள மடங்களுள் ஒன்று; யாவரும் தங்கும் உரிமையுள்ள இடம்.