பாடல் எண் :3582

இல்லாள னியல்புவே றானமைகண் டிரவெல்லாஞ்
சொல்லாடா திருந்தவர்பா லணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநா ளவர்க்கடுத்த பரிசுரைக்க
நல்லார்க ளவர்திறத்து நாடியே நயந்துரைப்பார்,
19

(இ-ள்) இல்லாளன் ....கண்டு - தனது கணவனது தன்மை வேறு பட்டு மாறியதனைத் தெரிந்து; இரவெல்லாம்......துயிலாதாள் - அன்று இரவு முழுமையும் யாவரிடத்தும் சொல்லுரையாமலிருந்து அவரிடம் அணையவியலாது துயிலும் பெறாமலிருந்த அப்பெண்; பல்லார்முன்.....உரைக்க - அடுத்த நாள் அவ்வூரிலுள்ளார் பலர் முன்னிலையில் அவரது தன்மையினைச் சொல்லவே; நல்லார்கள்.....உரைப்பார் - அதுகேட்ட நல்ல மக்கள் அவரது தன்மையினை அருகில் அணைந்து நாடியறிந்து அன்புடன் சொல்வார்களாகி,
(வி-ரை) இல்லாளன் - மனைக்கு - இல்லினுக்கு - உடையவன்; தலைவன்; கணவன். முன்,தொடர்ச்சியில்லை யாயினவன் - என்றதும் குறிப்பு.
இயல்பு வேறானமை - அதுவரை கொண்டிருந்த இல்வாழ்க்கைத் தொடர்பினை மறுத்து மாறுப்பட்டதன்மை.
இரவெல்லாம் சொல்லாடாதிருந்து - இது மனவருத்தத்தால் விளைந்த தன்மை; சொல்லாடுதல் - பேசுதல். இல்லாளன் - இல்லாள் என்பதன் ஆண்பால்.
அணையாது துயிலாதாள் - அவர் பக்கத்திற் சென்றிருக்கவு மாட்டாமையில் துயிலப் பெறாதவளாகி.
பிற்றை நாள் - அந்நாளின் பின்நாளிலே.
பல்லார் முன் பரிசு உரைப்ப - பல்லார் - அப்பதியிலுள்ள பெரியோர் பலர்; பல்லார் - பலர் என்பதன் விகாரம். பரிசு - தன்மை.
நல்லார்கள் - அவ்வாறுரைப்பக் கேட்ட பதியவர்களுள்ளே நல்லவர்களாயுள்ளோர்; அறிஞர்கள். நன்மையாவது - பிறரது துன்பங் கண்டு தரியாமையும் இரங்கிப் பணி செய்தலுமாம்.
திறத்து நாடியே - அவர்பாற் சென்று அவர் திறத்தினை நன்கு ஆராய்ந்து அறிந்து; நாடுதல் - பலவகையாலும் அறிவினால் ஊன்றி ஆராய்தல்; நாடியே - ஏகாரம் தேற்றம். நயந்து - அன்புகொண்டு; நாடியநிலை மேல் உரைக்கப்படும்.
உரைப்பார் - எனவுரைப்பார் - என்றுரைப்ப - என மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க.
இவர்க்கடுத்த - என்பதும் பாடம்.