"பித்துற்ற மயலன்று; பிறிதொருசார் புளதன்று; சித்தவிகற் பங்களைந்து தெளிந்தசிவ யோகத்தில் னவத்தகருத் தினராகி வரம்பில்பெரு மையிலிருந்தார்; இத்தகைமை யளப்பரிதால் யாராலு" மெனவுரைப்பார், | 20 | (இ-ள்) பித்துற்ற....உளதன்று - இது பித்துப் பொருந்திய மயக்கமன்று; பிறிதாகியதொரு சார்பு உள்ளது மன்று; சித்தவிகற்பம்....இருந்தார் - சித்தத்தின் விகற்பங்களை யெல்லாம் களைந்து தெளிந்த நிலையினில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினை உடையவராகி அளவற்ற பெருமையில் இருந்தனர்; இத்தகைமை....உரைப்பார் - இத்தன்மை எவராலும் அளவிடற்கரியது என்று துணிந்து எடுத்துச் சொல்வார்களாகி, (வி-ரை) பித்துற்ற.....உளதன்று - அங்குக் காணப்பட்டது அறிவைப்பற்றிய மாறுதலாதலின் அதற்கு அகமும் புறமுமாகிய இருவகைக் காரணங்கள் உள்ளன; ஒன்று அகத்தே உடம்பினுள்ளே பற்றும் அதிகப் பித்தம் முதலிய நோய்; மற்றொன்று புறத்தே நின்று வந்து பற்றும் பேய் முதலிய வற்றின் பீடை; நாடிக் கண்ட அந்நல்லார்கள் இது பித்தம் அதிகரித்துப் பொருந்திய உள்நோய் காரணத்தாலுமன்று; பிறிதொரு சார்பு எனப்படும் பேய் முதலிய பீடைகள் பற்றுதலானுமன்று; என்பார்; (1) பித்துற்ற மயலன்று; (2) பிறிதொருத சார்பு உளது மன்று என்று கண்டனர்; பித்து.....மயல் - பைத்திய மென்பர். பிறிதொரு சார்பு - வெளியிலிருந்து வந்து சார்புகொள்ளும் பேய் முதலிய பீடையினால் வரும் அறிவு மாறாட்டம். சித்த விகற்பம் களைந்து தெளிந்த - சித்தவிகற்பமாவது வஞ்சப் புலன்களின் வழியே மனஞ் செலுத்துதலால் வரும் மயக்கம்; "மாறி நின்றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைந்து" "சித்த விகாரக் கலக்கம்" (திருவா). விகற்பமாவது ஒன்றை மற்றொன்றாகக் கருதுவது. "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும் மருள்" (குறள்); களைதல் - மயக்கஞ் சாராது காத்தல்; தெளிதல் - மெய்யுணர்தல். சிவயோகத்தில் வைத்த கருத்தினர் - சிவனொடு அறிவினால் இரண்டறக் கலந்து அழுந்திய மனத்தினர். வைத்தல் - ஊன்றுதல் - அழுந்துதல் - ஒன்றுதல். வரம்பில் பெருமையிலிருந்தார் - யோகியாரின் நிலைமைகண்ட மனைவி "ஈனம் இவர்க்கடுத்தது"என்று கொண்டாள்; அவள் சொன்னதையும் அவரது மனமாறுபட்ட செய்கைகளையுமே புறத்தோற்றத்தாற் கண்டவர்களும் அவ்வாறே கொண்டார்கள்; அஃதாவது அவரது முன்னை நிலையினின்றும் வேறுபட்ட நோய் - பித்து முதலிய தாழ்வாகிய மாறுபாடு எனவே எண்ணினார்கள். சார்பு நாடியே நயந்த நல்லோர்கள் அது தாழ்ந்த நிலையன்று; உலகச் சார்பான கீழ் நிலையன்று; சிவச்சார்பாகிய அளவற்ற பெரிய நிலை என்று கண்டார்கள் என்க. வரம்பில் - அளவில்லாத. இத்தகைமை.....யாராலும் என - இவ்வாறு இடையனது நிலை ஒப்பற்ற பெரிய தன்மை யடைந்ததனை யாவராலும் அளக்கலாகாது என்று; இது பரகாயப் பிரவேசத்தால் புகுந்த உயிரின் மேம்பாடு என்பதனை உணரலாகாமையின் அவர் கூறியது. |
|
|