"பற்றறுத்த வுபதேசப் பரமர்பதம் பெற்றோர்போல் முற்றுமுணர்ந் தனராகு; முன்னைநிலை மையிலுங்கள் சுற்றவியல் பினுக்கெய்தா" ரென்றுரைப்பத், துயரெய்தி மற்றவளு மையலுற மருங்குள்ளார் கொண்டகன்றார், | 21 | (இ-ள்)பற்றறுத்த....உணர்ந்தனராகும் - இருவகைப் பற்றுக்களையும் அறுத்த ஞானோபதேசத்தினாலே இறைவரது திருவடிகளைப்பெற்ற சீவன் முத்தர்களைப்போல ஒருங்கே எல்லாவற்றையும் உணர்ந்த ஞானியாகுவர்; முன்னை.....என்றுரைப்ப - முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத்தின் தொடர்பாகிய இயல்பினுட்படமாட்டார். என்று சொல்ல; துயர் எய்தி.....மையலுற - துன்பப்பட்டு அவளும் மயங்க; மருங்குள்ளார் கொண்டகன்றார் - பக்கத்திலிருந்தவர்கள் அவளை அழைத்துக் கொண்டு நீங்கினார்கள். (வி-ரை) பற்றறுத்த உபதேசம் ....பெற்றார்போல் - பற்றறுதற்குக் காரணமான உபதேசத்தினாலே; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்; உபதேசம் - சற்குருவின் ஞானோபதேசத்தினால்; "நந்திதிரு வருள்பெற்ற" என்ற உண்மை இவர்களுக்கு ஏற்றவாறு விளங்கா நின்றது; உபதேசத்தானன்றிப் பற்றறுதல் இயலாது என்றதும் குறிப்பு. பரமர்பதம் பெற்றார் - இப்பிறப்பிலே சிவனடியில் இரண்டற்ற அறிவு பொருந்தி உலகை மறந்த சீவன்முத்தர். பற்றறுத்த - பரமர் வன்று கூட்டியுரைத்தலுமாம். "பற்றற்றான்" (குறள்) முற்றும் உணர்ந்தவராகும் - முழுஞானமும் பெற்றவர்; எல்லாமறியும் மெய்ஞ்ஞானம். முன்னை நிலை - முன் ஆமேய்ப்பானாயிருந்த அந்நிலைமை. கற்ற இயல்பு - உலகத் தொடர்பு. பரம்பரமே - என்பது பாடம். |
|
|