பாடல் எண் :3585

இந்தநிலை மையிலிருந்தா ரெழுந்திருந்தாங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடற் பொறைகாணார் முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெய லாராய்ந்து தெளிகின்றார்,
22

(இ-ள்) இந்த நிலைமையிலிருந்தார் - முன்கூறிய இவ்வாறாகிய நிலைமையில் சாத்தனூர்ப் பொதுமடத்தில் இருந்த திருமூலர்; எழுந்திருந்து....காணார் - அந்நிலையினின்றும் எழுந்து இருந்து அவ்விடத்துப் பசுக்கூட்டங்கள் ஊரை நோக்கி வந்த வழியினையே பற்றிச் சென்று பார்க்கத் தாம் வைத்த காவலின்கண் செறித்த தமது முன்னைய உடற்பொதியினைக் காணாராகி; முழுது உணர்ந்த.....தெளிகின்றார் - முற்றுணர்வு கூடிய மெய்ஞ்ஞானம் பொருந்திய தமது சிந்தையினில் இச்செயல் நிகழ்ந்த நிலையினை ஆராய்ந்து தெளிவாராகி,
(வி-ரை) இந்த நிலைமையிலிருந்தார் - பசுக்களின் துயரை நீக்க எண்ணிப் பரகாயப் பிரவேசம் செய்து இடையனுடம்புடன் பசுக்களை ஊரில் மனை தோறும் செலுத்த, இடையன் மனைவி மெய் தீண்ட வர, அவளை மறுத்துத் தாம் பொதுமடத்திலிருக்க; ஊரவர்வந்து நாட, என்றிவ்வளவும் தொடர்பு கொள்ள நேர்ந்த நிலைமை; இத்துணையும் இந்த நிலைமை என்ற இரு சொற்களாற் சுட்டிப் பெற வைத்தார்.
எழுந்திருந்து - எழுந்து; ஆனிரைகள் வந்தவழியே சென்று - தாம் அங்குப் போகத் தொடங்கிய மேய்விடமும் உடலைக் காப்பில் வைத்த இடமும் தெரிந்து செல்வதற்கு ஆனிரைகள் வந்த வழியே சென்றால் அறியும் அடையாளம் பெறலாமாதலின் அவ்வழியினையே பற்றிச் சென்றார்.
வைத்த.....பொறை - தாம் அடையாளம் பெற வைத்துச் சேமம் செலுத்தி நீங்கிய தமது முன்னை உடல்; உடற்பொறை - உடலாகிய சுமை; வீடுபேறு கருதியயோகியர்க்கு உடம்பும் சுமையாகத் தோன்றும் ஆதலின் பொறை என்றார். "மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை" (குறள்).
வைத்த-உய்த்த-தாம்விட்டு நீங்கிய செயல் ஒன்றும்,இடையுடனுற்கண் நின்று அதற்குக் காப்புச் செய்த செயல் ஒன்றும் குறிக்க வைத்த -உய்த்த என்றார்.
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச் சிந்தை - முற்றும் உணர்தலாகிய மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்ற சிந்தை. இஃது எண் சித்திவகையினாலும், நந்திபெருமான் திருவருள் ஞானோபதேசத்தினாலும் வருவது. மேலும் இதனையே"எண்ணிறைந்த உணர்வுடையார்" (3686) என்பது காண்க.
வந்த செயல் - உடற்பொறை மறைந்துவிட நேர்ந்த செயலினை.
தெளிகின்றார் - தெளிகின்றாராகி; முற்றெச்சம். தெளிகின்றார் - உணர்ந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.