பாடல் எண் :3586

தண்ணிலவார் சடையார்தாந் தந்தவா கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினாற் றமிழ்வகுப்பக்
கண்ணியவத் திருவருளா
லவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையா "ரீசரரு" ளெனவுணர்ந்தார்,
23

தண்ணிலவார்.........கரப்பிக்க குளிர்ச்சி பொருந்திய சந்திரன் நிறைந்த சடையினையுடைய மகா சதாசிவமூர்த்தி அருளினாலே தந்த சிவாகமங்களின் பொருளை நிலவுலகத்திலே திருமூலரது திருவாக்கின்மூலம் தமிழிலே வகுப்பதற்காகக் கருதிய அந்தத் திருவளால் அந்த உடலினை மறைப்பித்தாராதலின்; எண்ணிறைந்த.....உணர்ந்தார் - எங்கும் நிறைந்த முற்றுணரவுடையவராகிய திருமூலர் அச்செயலினைச் சிந்தையில் தெளிந்து அஃது ஈசரருளாலாயிற்று என உணர்ந்தனர்.
(வி-ரை) சடையார் தாம் தந்த ஆகமப்பொருளை - சிவபெருமான் தமது ஈசானமுகத்திற் சத்தியோசாத முதலிய ஐந்து திருமுகங்களாலும் அருளியவை காமிக முதலிய இருபத்தெட்டு ஆகமங்கள். அவற்றின் பொருளாவன சரியையாதி நாற்பாத நிலைகளும் முப்பொரு ணிச்சயமும் சாதனமும் பயனும் முதலியவை.
சத்தியோசாத முகத்தினின்று காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்ற ஐந்து ஆகமங்களும், வாமதேவத்தினின்றும், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், என்ற ஐந்தும், அகோரத்தின், விசயம், நிச்சுவாசம்,சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம் என்ற ஐந்தும், தற்புருடத்தின் இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம் என்பவை ஐந்தும், ஈசானத்தில் புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்சுவரம்,கிரணம், வாதுளம் என்ற எட்டும் ஆக இவ்வாறு இருபத்தெட் டாகமங்களும் சிவபெருமான் அருளியவை.
இந்த ஐந்து முகங்களும் மகா சதாசிவ மூர்த்தியின் ஈசான முகத்தில் உள்ளவை. "அஞ்சா முகத்தி லரும்பொருள் கேட்டதே" (திருமந்); "ஈசனாஸ் ஸர்வவித்தியாநாம்" என்பது வேதம்; "மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந், துற்ற வைம்முகங்க ளாற்பணித் தருளியும்" "மகேந்திர மதனிற் சொன்னவகமம்" என்பன திருவாசகம். இவை கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் என்னும் சிவகோத்திர இருடியர் பொருட்டு முறையே அருளப்பட்டன. "அண்ணலருளா லருளும் சிவாகமம்" (திருமந்).
மண்ணின் மிசைத் திருமூலர் வாக்கினாற் றமிழ் வகுப்பக் கண்ணிய அத்திருவருள் - இருடியர் மாமுனிவர்கள் முதலிய மேதையோர்க் கன்றி இந்நிலவுலகிலேமானுட மக்கள் அவ்வவர் பக்குவத்துக் கேற்ப அறிந்துய்யும் பொருட்டுத் திருமூலரது திருவாக்கின் மூலம் தமிழில் வகுத்தருளக் கருதி இறைவர் திருவுளங் கொண்டாரென்பது.
மண்ணின் மிசை - என்றதனால் இறைவர் அருளிய அவை பக்குவமுடைய மேதையோர்க்கு அருளப்பட்டன என்பது குறிக்கப்பட்டது. "அஞ்சன மேனி யரிவையோர் பாகத்தன், அஞ்சொ டிருபத்து மூன்றுள் வாகமம், அஞ்சலி கூப்பியறுபத் தறுவரும், அஞ்சா முகத்தி லரும்பொருள் கேட்டதே" (திருமந்) "அருபத்தறுவர் பிரணவ ராதி, அறிவுறக்கேட் டாராகமம்" (சைவ சமயநெறி) என்றும், "வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளி, துள்ளு வார்புனல் வேணியா ரருள்செயத் தொழுது, தெள்ளு வாய்மையினாகமத் திறனெலாந் தெரிய, உள்ளவாறுகேட் டருளினா லுலகையா ளுடையாள்" (1127) என்றதனால் அம்மையார்க்கு இறைவர் ஆகமங்களை உபதேசித்தமையும் தெளியப்படும். இவ்வாறாகலின் நிலவுலகத்தோர்க்காக அப்பொருளைத் திருமூலர் வாக்கினால் தமிழில் வரக்கருதி யருளினார் இறைவர் என்க. திருமந்திரம் ஆகமப்பொருளையே கொண்டதென்று குறிப்பிக்க இருபத்தெட்டுத் திருவிருத்தங்களால் ஆசிரியர் இப்புராணத்தை ஆக்கியருளிய குறிப்பும் காண்க.
தமிழ் வகுப்பக் கண்ணி - தமிழில் வகுத்தலையே இறைவர் கருதியருளினர்; எனவே இறைவர்வகுத்த அவை தமிழினன்றி வேறு(வட) மொழியில் வெளிட்டருளப்பட்டனவென்பது கருதப்படும்; "வேதந் தமிழால் விரித்தார்" (2787) என்ற விடத்துரைத்தவை பார்க்க. கண்ணுதல் - கருதுதல். "கண்இருள்" (போதம் - பாயிரம்).
கரப்பிக்க ஈசர் அருள் என உணர்ந்தார் - இறைவர் அருளால் மறைத்த செயலை உள்ள அவ்வாறே உணர்ச்சியிற் றெளிந்தனர்; இஃதெவ்வாறோ? எனின் எங்கு நிறைவுடைய மெய்ஞ்ஞான முடையார்க்கு ஆகும் என்பார் "எண்ணிறைந்த உணர்வுடையா" ராதலின் என்று காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஓதினார்.
தண்ணிலவார் ... கரப்பிக்க உணர்ந்தார் - கரப்பித்த செயல்முன்னும் உணர்ந்த செயல் பின்னும் நிகழ்ந்தனவாதலின் இப்பாட்டில் அவ்வாறே வைப்பு முறையாயிற்று. எங்கும் நிறைந்த அறிவுடையார்க்கு இது கூடும். (27; 1713)
ஈசரருள் - உடலைக் கரப்பித்ததனோடு, ஆகமப்பொருளைத் தமிழில் வகுத்தலும் திருவருட் கருத்து என்பதனை உணர்ந்தனர் என்பதாம். உடற்பொறை காணா மைக்குக்காரணத்தினையே தெளிய எண்ணினாரேனும், இறைவர், அதனை உணர்த்தியதோடும் அதற்குத் தாம் கருதியளியமையும் உடன் புலப்படுத்தினார்; அதனாலன்றேதிருமூலர் உடனே திரு ஆவடு துறையணைந்து, யோகிருந்து, ஆகமப்பொருளாகிய திருமந்திரங்க ளருள்வதனை மேற்கொண்டனர் என்க. "என்னை நன்றாக விறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" (திருமந் - திருமூலர் வரலாறு).