பாடல் எண் :3588

ஆவடுகண் டுறையணைந்தங் கரும்பொருளை யுறவணங்கி
மேவுவார் புறக்குடபான் மிக்குயர்ந்த வரசின்கீழ்த்
தேவிருக்கை யமர்ந்தருளிச் சிவயோகந் தலைநின்று
பூவலரு மிதயத்துப் பொருளோடும் புணர்த்திருந்தார்.
25

(இ-ள்) ஆவடுதண்டுறை....மேவுவார் - திருவாவடுதுறையினைச் சேர்ந்து அங்குச் சிவபெருமானைப் பொருந்துமாற்றால் வணங்கி அங்குத் தங்குவாராகி; புறக்குடபால்.....அமர்ந்தருளி - திருக்கோயிற் சுற்றின் புறத்திலே மேற்குப் பக்கத்திலே மிகவும் உயர்ந்த அரசமரத்தின் கீழே தேவாசனத்தில் அமர்ந்து எழுந்தருளியிருந்து; சிவயோகம்....புணர்ந்திருந்தார் - சிவராசயோகத்தின் மிக்கிருந்து இதய கமலத்தில் அரும்பொருளாகிய இறைவருடன் இரண்டறக் கூடி ஒன்றியிருந்தனர்.
(வி-ரை) அரும்பொருளை உறவணங்கி - அரும்பொருள் - சிவபெருமான், பெறுதற்கரிய பொருள்களெல்லாவற்றுள்ளும் அரியவர் அவரேயாகலான்; உற - விதிப்படி பொருந்த.
மேவுவார் - புணர்ந்திருந்தார் - என்று கூட்டுக. மேவுவாராகி; முற்றெச்சம்.
புறக்குடபால் மிக்குயர்ந்த அரசின்கீழ் - இவ்வரச மரம் அக்காலத்தில் திருக்கோயில் புறச்சுற்றில் மேற்குப் பக்கத்தில் இருந்தது; இப்போது திருமூலர் சந்நிதி உள்ள இடத்தின் மேற்கில் இருந்ததென்றும் தெரிகிறது. திருமூலர் சந்நிதி இப்போது கோயிலுக்குள் வாயில் இருக்கத்தக்கதாக அமைவுபடுத்திச் சேர்க்கப்பட்டிருக்கிறது; இவ்வமைப்பை நீக்கிப்பார்க்கின் அச்சந்நிதி புறக்குடபால் அமைதல் காணப்படும்.
மிக்குயர்ந்த அரசு - செறிந்து மிகவும் உயர்ந்து வளர்ந்த அரசமரம். இஃது இப்போது அங்கில்லை. இப்போது கோயில் அபிமுகத்தில் கிழக்குக் கோபுரத்தருகில் உட்புறம் உள்ளது. இது படர் அரசு என்ற ஒருவகையுட் சேர்ந்தது.
பல பல ஆண்டுகள் சென்றால் இவ்வரசு சில நூறாண்டுகள் நின்று பின் கீழே, சாய்ந்து வேரூன்றும்; அப்போது பழையமரமும் வேரும் அற்றுவிடும். இவ்வாறாக இவ்வரசு மேற்கிலிருந்து கோயிலினை வலமாக வந்து இப்போது கிழக்கு வாயிலினுக்கு இருபுறமும் உள்ளதும் அவற்றுள் கீழைவாயிலுக்கு வடக்கிருக்கும் பகுதி கீழ்வீழ்ந்து பலம் அற்றுவருவதும், தெற்கிலிருக்கும் பகுதி வலுப்பட்டு வளர்வதும் காணலாம்.
தேவிருக்கை - தேவாசனம் என்பது ஒருவகை ஆசனம்; யோகாசனம் என்பர்; தெய்வத்தன்மை வாய்ந்த இருப்பு என்றலுமாம். இப்போது அங்குத் தாபிக்கப்பட்டிருக்கும் திருமூலர் திருவுருவம் காண்க.
சிவயோகம் தலைநின்று - தம் அறிவினைச் சிவத்தினிடத்திலே ஒன்றுபடப் பதியவைத்தல் சிவயோகம் எனப்படும். "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா). தலைநிற்றல் - சிறத்தல்.
பூவலரும் இதயம் - பூ - கமலம்; இதயகமலம். "மலர்மிசை ஏகினான்" (குறள்); பொருள் - மெய்ப்பொருள்.
இதயத்து - இதயத்திலே முன் அரும்பொருள் என்று கூறிய பொருளடங்கிய சிவனுடன் சேர்ந்திருந்தனர்; புணர்தல் - இரண்டறக் கூடுதல்.