ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய ஞானமுத னான்குமலர் நற்றிருமந் திரமாலை பான்மைமுறை யோராண்டுக் கொன்றாகப் பரம்பொருளாம் ஏனவெயி றணிந்தாரை "யொன்றவன்றா" னெனவெடுத்து, | 26 | (இ-ள்) ஊனுடம்பில்....உய்ய - ஊன் பொருந்திய இப்பிறப்பாகிய விடத் தொடக்கு நீங்கி உலகத்திலுள்ளார்கள் உய்யும் பொருட்டு; ஞானமுதல்....... மாலை - ஞான முதலாகிய நான்கு நெறிகளும் விரிந்து காணும் நல்ல திருமந்திர மாலையினை; பான்மைமுறை.....ஒன்றாக - பான்மை முறையினாலே ஓர் ஆண்டுக்கு ஒரு மந்திரமாக; பரம்பொருளாம்.....அணிந்தாரை - பரம்பொருளாகியவரும் பன்றியின் கொம்பினை அணிந்தவருமாகிய இறைவரை; ஒன்றவன்தான் என எடுத்து -"ஒன்றவன்றானே" என்று தொடங்கி; (வி-ரை) ஊன்......உய்ய - ஊனுடம்பிற் பிறவி - "ஊனடைந்த உடம்பின் பிறவி" (2). ஊன்...விடம் - தசை செறிந்த உடம்பெடுத்துப் பிறக்கும் பிறவியாகிய விடம். பிறவி விடம் - உருவகம். உலகத்தோர் - எல்லா உயிர்களும். நான்கும் - நான்கு பாதங்களும்; எண்ணலளவை யாகுபெயர்; முற்றும்மை. பிறவி விடம் - பிறவியாகிய விடம்; விடத்தைப் போலவே மரணத்தையின்றியமையாது உடன்கொண்டு வருதலின் பிறவியை விடம் என்று கூறினார். "தோற்ற முண்டேன் மரண முண்டு" (நம்பி - தேவா). முன்னர், "வெந்தொழில் வல் விடமுண்ண" (3573) என்று கொண்ட பாடத்தின் இயைபு இதனால் சிறந்து விளங்குதல் காண்க. இதற்கு இவ்வாறன்றி ஊனுடம்பி லிருந்துகொண்டே பிறவித் துன்பத்தை ஒழித்தல்கூடும் என்பதற்குச் சான்றுகள் திருமந்திரத்திற் பல கிடக்கின்றன; "அஞ்சனம் போன்றுடலையறு மந்தியில்......." (727) என்று ரைப்பாருமுண்டு; அது பொருந்துமாறு ஆராயத்தக்கது. இங்குக் குறித்தது பிறவியறுதல் திருமந்திர மாலையின் பயன் என்ற பொருள்; "அஞ்சனம் போன்றுடல்" என்ற பாட்டு இப்பிறவியில் சரீரசித்தி யுபாயம். (3-ம் தந்திரம்). பான்மை முறை - பான்மையாவது இறைவர் வகுத்த நியதி; நியதியின் வழியே அமைந்து; ஓர் ஆண்டுக்கொன்றாக வெளிப்படுத்திய நிலை பான்மை எனப்பட்டது. சிவயோகம் கைவந்தமையாற் காலத்தை வென்ற முற்றறிவுடையோர்க்கு யோக நிட்டையில் ஓர் ஆண்டு ஒரு கணமாய்க் கழியும். உலகியலிலும் இதனை ஒருவாறு காணலாம். "அவ்வூழியொரு கணமாம்" (3422). ஓராண்டுக் கொன்றாக -ஆண்டொன்றுக்கு ஒரு திருமந்திரமாக; இவ்வாறு ஓராண்டுக் கொன்றாக மூவாயிரம் ஆண்டுகளில் மூவாயிரம் திருமந்திரம் அருளினார் என்பது மேல்வரும் பாட்டானு முணர்க. ஆயின் இவ்வாறு ஆண்டுக் கொன்றாக 3000 திருமந்திரம் அருளினார் என்பதற்கு அகச்சான்றில்லை என்றும், அந்நாளில் ஆண்டு என்பது வேறு பொருளில் வழங்கி வந்ததோ என்பது தெரியவில்லை என்றும் ஈண்டு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு; திருவாவடுதுறையில் பலகாலம் போதியின்கீழ் இருந்து ஆகம உண்மைகளைத் தமிழில் இறைவராணையால் அருளினார் என்ற சரிதப் பகுதிகள் எல்லாம் திருமந்திரங்களால் பெறப்படுகின்றன. "இருந்தேனிக்காயத்தில் எண்ணிலி கோடி; இருந்தேனிராப்பக லற்ற விடத்தே" (80); "ஞானத் தலைவிதன் னந்தி நகர்புக்கு, வூனமி லொன்பதுகோடி யுகந்தன்னுள், ஞானப் பாலாட்டி நாதனை யர்ச்சித்து, யானு யிருந்தேனற் போதியின் கீழே" (82); என்பன முதலியவை காண்க. ஈண்டு ஒன்பதுகோடி என்பது வகைப்பட்ட எல்லை; (கோடி எல்லை என்றும், யுகம் நீண்டகால எல்லை என்றும் பொருள் தருவனபோலும்.) ஆண்டுக்கொன்றாக 3000 திருமந்திரம் அருளினார் என்பது இச்சான்றுகளுடன் முரணாமை யறிக. இங்கு இச்சிறு செய்திக்கு அகச்சான்று வேண்டுவதும் பிறவும் ஈண்டுத்தகாத ஆராய்ச்சி முறையாமென்று விடுக்க. காலங் கடந்த ஞானோதய அருட்செயல்கள் நமது குறுகிய சில வாழ்நாளே யளவையாகக் கொண்ட ஆராய்ச்சி யெல்லையுட் படுவன வல்லவென்பது அறிஞர் துணிபு. ஞான முதல் நான்கும் - ஞானம், யோகம், கிரியை, சரியை என்றிவ்வாறு ஞானத்தை முதலாக வைத்துக் கூறுதல் சிருட்டிக் கிரமம்; "சங்கரனை யடையும் நன்மார்க்கம் நாலவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென நவிற்றுவதுஞ்செய்வர்" (சித்தி-8), "நலஞ் சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாமலர்ந்த மொழி" (3591) என்று மேற்கூறுதலும் காண்க. ஞானகுருவே இந்நான்குக்கும் குருவாவார் என்பவாதலின் இங்கு ஞானமுணர்த்தும் குருவாகி உபதேசிக்க வந்த நிலையின் அதனை முன்னர் வைத்து ஏனையவற்றைப் படிமுறையிற் பின் வைத்துக் கூறிய தகுதியுங் காண்க. நற் றிருமந்திரமாலை - "மந்திரமாலை" என்பது திருமூலர் இதற்கு இட்ட பெயர்; "மந்திரமாலை" (பாயிரம் 86); நன்மை - வீடு பேற்றின் மிக்கதொரு’ நன்மையில்லை யாதலின், வீடு காதலித்துக் "கதிப்பாற் செல்ல வேறு நெறி" என்று அறிய ஆவல்கொள்ளும் மாணவர்க்கு அதனை அறிவுறுத்த வந்த ஆகமமாதல் குறித்தது. ஒன்றவன்றான் என எடுத்து - "ஒன்றவன்றானே" என்பது திருமந்திர மாலையின் முதற்பாட்டின் தொடக்கம்; "ஐந்து கரத்தனை" என்பது நூலுக்குப் புறம்பே செய்யப்படும் காப்பு எனப்படும் விநாயக வணக்கம்; "போற்றிசைத்துழு என்ற அடுத்த பாட்டும் நூலுக்குப் புறம்பே சொல்லிய நூனுதலிய பொருளாம். பரம்பொருளாம் ஏன எயிறு அணிந்தாரைச் - சாத்தி என்று மேல்வரும் பாட்டுடன் கூட்டுக; எனவே இத் திருமந்திரமாலை முழுதும் சிவபெருமானைப் போற்றியதென்பதாம். என்னை? உலகுய்யச் சிவாகமப் பொருளாகிய பதி பசுபாச நிச்சயத்தினையும், உயிர்கள் சிவனை யடையும் நெறிகளையுமஅவ்வாறடையும் அதனால் வரும் சிவானந்தமாகிய பயனையும், கூறுதலானும், உபதேசம் என்பது தொடங்கி இறுதியில் ஒன்பதாந் தந்திரத்துள் தோத்திரம் சர்வவியாபி என்ற பகுதியுடன் "பேரும் பராபரன் பிஞ்ஞக னெம்மிறை, யூறுஞ் சகலனுலப்பிலிதானே" "வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே" என்று முடித்தலானும், இது சிவனுக்குச் சாத்தும் திருமந்திரமாலை யாமாறுணர்க. "கூற்றுதைத்தானையான் கூறுகின் றேனே" என்பது நூனுதலிய பொருளாக நூன்முகத்துக் கூறுதலும் காண்க. ஏனவெயி றணிந்தார் - சிவன். சங்கார காரணன் என்ற குறிப்பு; "கூற்றுதைத்தான்" என்றது நூன்முகம். பரம்பொருள் - எல்லாப் பொருளுக்கும் அப்பாற்பட்டவன்; இது, நூலிறுதியில் "பெரும் பராபரன்" என்ற கருத்தாதலும் கண்டுகொள்க. பண்புத் தொகையாகக் கொண்டு மேலாகிய பொருள் என்றலுமாம். எடுத்துச் - சாத்தி என வரும்பாட்டுடன் முடிக்க. |
|
|