முன்னியவப் பொருண்மாலைத் தமிழ்மூவா யிரஞ்சாத்தி மன்னியமூ வாயிரத்தாண் டிப்புவிமேன் மகிழ்ந்திருந்து சென்னிமதி யணிந்தார்தந் திருவருளாற் றிருக்கயிலை தன்னிலணைந் தொருகாலும் பிரியாமைத் தாளடைந்தார். | 27 | (இ-ள்)முன்னிய....சாத்தி - நினைந்த அப்பொருளினையுடைய திருமந்திர மாலையாகிய தமிழ் மூவாயிரம் மந்திரங்களையும் சாத்தியருளி, மன்னிய.....இருந்து - அதன்பொருட்டுப் பெற்ற மூவாயிரம் ஆண்டுகள் இவ்வுலகத்தின்கண் மகிழ்ந்து வீற்றிருந்து; சென்னிமதி......தாளடைந்தார் - திருமுடியில் ஞான சந்திரனைச் சூடிய சிவபெருமானது திருவருளினாலே அவர்தம் திருக்கயிலையினை அடைந்து என்றும் பிரியாதபடி சிவனது சீபாதநிழலிற் சேர்ந்தார். (வி-ரை) முன்னிய - இறைவர் விரும்பியருளிய; "தமிழ் வகுப்புக் கண்ணிய அத்திருவருளால்" (3586) என்றது காண்க. அப்பொருள் - சடையார் தாம் தந்த ஆகமப் பொருள். மாலை - சாத்தி - மலர்மாலை போல்வதால் மாலை என்றும் சாத்தி என்றும் கூறினார். மேல் “மலர்ந்த மொழி" (3591) என்பது காண்க. தமிழ் மூவாயிரம் சாத்தி - மூவாயிரத்தாண்டு - மகிழ்ந்திருந்து ஓர் "ஆண்டுக் கொன்றாக" (3589) என்று முன்கூறியதனைத் தொடர்ந்து பொருள் கொள்க; முன் கூறியது தொடக்கம்; இங்குக் கூறியது முடிபு; மன்னுதல் - சிவயோகத்தால் நிலைபெற்றிருத்தல். இப்புவிமேல் மகிழ்ந்திருந்து - தாம் முன் இருந்த திருக்கயிலையில் இருத்தலுமின்றி, மேற்குறித்துப் போந்த பொதிகையிற் சேர்தலுமின்றி, இடைவழியில் இங்குத் தங்க நேரிடினும், திருவருள் கைவந்த வழியே இருந்தாராதலின் மகிழ்ந்து என்றார். திருவருளால் - திருக்கயிலை தன்னில் அணைந்து - தாம் குறித்துப் போந்தபடி பொதிகையில் செல்லாது என்க. அதற்குக் காரணம் திருவருள் ஆணை தந்து செலுத்திய தென்றார். ஒருகாலும் பிரியாமை தாள் அடைந்தார் - முன்னர்ப் பிரிந்து போந்தமை போல இனி எக்காலமும் பிரியாதபடி என்க. தாள் அடைதல் - சிவசாயுச்சியத்துட் கலந்திருத்தல்; முன் இருந்தநிலை சிவயோக நிலை என்க. |
|
|