காணும் கண்ணாற் காண்பதுமெய்த்தொண்டேயானகருத்துடையார் பேணுஞ் செல்வத் திருவாரூர்ப் பெருமா னடிக டிருவடிக்கே பூணு மன்பி னாற்பரவிப் போற்று நிலைமை புரிந்தமரர் சேணு மறிய வரியதிருத் தொண்டிற் செறியச் சிறந்துள்ளார். | 2 | (இ-ள்.) காணும்....உடையார் - காணுதற்குரிய கண்ணினாலே காணப்பெறுவது இறைவரது மெய்த் திருத்தொண்டேயாம். என்னும் கருத்துடையவர்;பேணும்....திருவடிக்கே - பேணுதற்குரிய செல்வத் திருவாரூரில் வீற்றிருந்தருளும் தியாதேசப் பெருமானாரது திருவடிகளையே; பூணும்....புரிந்து - மேற்கொண்ட அன்பினாலே துதித்து வழிபடும் நிலைமையினை விரும்பி; அமரர்....சிறந்துள்ளார் - தேவர்கள் தூரத்திலேனும் அறிதற்கரிய திருத்தொண்டிலே உறைப்புடையாராகிச் சிறந்துள்ளாராயினார். (வி-ரை.) காணும் கண்ணாற் காண்பது - காணுதற்குரிய கண்ணினாலே காணப்படுவது; "காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே", "காணா கண்வாய் பேசாதப் பேய்களோடே" (திருவிசைப்பா); "கண்ணிணையு மரமாம்" (திருவா); "கண்காள் காண்மின்களோ" (தேவா); "அரன்பணிக் காக வன்றோ" (சித்தி) என்பனவாதியாக வரும் எண்ணிறந்த திருவாக்குக்களால் உணரப்படுகின்றபடி கண்ணாற் காணுதற்குரியது சிவன் திருத்தொண்டேயாம் என்பது துணிபு. காணும் கண்ணால் - அகக்கண் - புறக்கண் என்றவற்றுள் எதுவாயினும் அதனால்; ஈண்டுச் சிறப்புடைய அகக்கண்ணினாலே என்பது; காணும் கண் - அகக் கண் - ஞானக்கண். காண்பது மெய்த்தொண்டே - தொண்டினைக் காண்பதாவது தொண்டுசெய்யும் நிலைகளை மனத்துட் கொள்ளுதல்; நிலைமை புரிந்து என்பது காண்க; முன்னர் விருப்பம் நிகழ்தலும், அதனை இன்னபடி செய்வேம் என்று அகத்துட் கருதி நிச்சயித்தலும் முன்னர் உளவானாலன்றிப் புறத்தே காணலும் மெய்தலும் நிகழாவாகலின் தொண்டினைக் காண்பது என்றார். மெய்த் தொண்டேயான கருத்து - மெய்யினது தொண்டு; மெய் - சத் எனப்படும் இறைவர். மெய்யினாற் செய்யப்படும் தொண்டு என்றலுமாம். இப்பொருளில் அகக்கண்ணாற் காண்பதும் தொண்டேயாகும் என்க. தொண்டே ஆன - ஏகாரம் பிரிநிலை; "அல்லால் வேறு காணேன் யான்" (3600) என்பதும் காண்க. மெய்த் தொண்டு - உண்மையாக; பொய்யல்லாத என்றலுமாம். "பொய்த்தொண்டு பேசி"; "பொக்கமிக்கவர் பூவு நீரும்" (தேவா.) பேணும் திருவடிக்கே - என்று கூட்டுக; பேணுதல் - மனமொழி மெய்களால் வழிபடுதல். பெருமானடிகள் - பெருமானாகிய இறைவர் "கடவூர் மயானத்துப் பெரிய பெருமானடிகளே" (தேவா). திருவடிக்கே - ஏகாரம் பிரிநிலை; திருவடிகளை; உருபுமயக்கம். பூணும் - இடையறாது - நியதியாக மேற்கொண்ட; பூணாகக்கொண்ட என்ற குறிப்புமாம். போற்றும் - தவறாது செய்யும். புரிந்து - விரும்பி. அமரர் சேணும் அறிய அரிய திருத்தொண்டு - சிவன் திருத்தொண்டு - அடியார்பணி; இவற்றின் பெருமைகளைத் தேவர்கள் சிறிதும் அறியார் என்பது; சேணும் - நெடுந்தூரத்தினும்; சிறிதேனும்; பசு புண்ணியம் முதலிய கருமங்களைச் செய்து சொர்க்காதி போகங்களைப் பெற்றும், அவற்றுட் பல துன்பங்களுக்கும் எண்ணிறந்த பிறவிகளுக்கும் ஆளாகியும் அலைவதற்கே உரியவர்கள் தேவர்கள்; சிவபுண்ணியங்களைச் செய்து பிறவியறப் பெற்று மீளா இன்பநிலை எய்தும் தன்மைக்கும் அவர்களுக்கும் நெடுந்தூரம் என்பதாம்; "புவனியிற் போய்ப்பிறவாமையில் நாள்நாம் போக்குகின் றோமவமே" (திருவா) என்ற திருவாக்கு இந்நிலையை நன்கு விளக்குகின்றது. "சென்றாற் சைவத் திறத்தடைவர்" (சித்தி);(செல்லுதற்கருமை நோக்கிச் சென்றால் என்றார்) "அண்ட ரறிதற் கரியதிருவலகு" (1585) என்றதும் காண்க; "தேவாசிரியன் முறையிருக்கும் தேவர்." செறிதல் - அழுந்திய உறைப்புடையராகுதல். இவ்வுறைப்புப் பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் காணப்பெறும்; (3600). புரிந்தமர்வார் - என்பதும் பாடம். |
|
|