பூவார் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயிற் றேவா சிரியன் முன்னிறைஞ்சி வலஞ்செய் வாராய்ச் செம்மைபுரி நாவா லின்ப முறுங்காத னமச்சி வாய நற்பதமே ஓவா வன்பி லெடுத்தோதி யொருநாள் போல வருநாளில், | 3 | (இ-ள்.) பூவார்....பூங்கோயில் - பூக்கள் பொருந்திய சடைத் திருமுடியினையுடைய இறைவர் மகிழ்ந்தெழுந் தருளிய செல்வநிறைந்த பூங்கோயிலின் கண்; தேவாசிரியன்....வலஞ்செய்வாராய் - திருத்தேவாசிரிய மண்டபத்தினை முன்னே வணங்கி வலம் வருவாராய்; செம்மைபுரி...ஓதி - செம்மைபெறப் புரிகின்ற நாவினாலே இன்பம் பொருந்தும் காதலோடு நமச்சிவாய என்னும் நற்பதத்தினையே ஒழியாத அன்பினாலே எடுத்து ஓதிக்கொண்டு; ஒருநாள் போல வருநாளில் - ஒருநாள் போலப் பலகாலமும் வலஞ் செய்து வருகின்ற நாட்களிலே; (வி-ரை.) பூ - கொன்றை; பொதுப்படக் கூறியதனால் தும்பை, வெள்ளெருக்கு முதலியனவுங் கொள்ளலாம்; ஆயின் உரிமையாகிய சிறப்புப் பற்றி கொன்றை எனப்பட்டது. தேவாசிரியன் முன்னிறைஞ்சி தேவாசிரியனை முன்னால் வணங்கி; முன் - திருக்கோபுர வாயிலினைக் கடந்து உட்புக்கவுடன் முதலில் காண உள்ளது தேவாசிரியன்; "மூதெ யிற்றிரு வாயின்முன் னாயது" (136); அன்றியும் அடியார்கள் நிறைந்துள்ளது. இத்தன்மைகளால் அது முன்னர் வணங்குதற்குரியதாம். முன் என்றதனால் இறைவர் எழுந்தருளிய பூங்கோயிலினை அதன்பின் இறைஞ்சி என்பது போதரும்; அடியார் வணக்கம் முன்னும், அதன் துணைகொண்டு ஆண்டவர் வணக்கம் பின்னும் நிகழவரும் மரபும் குறிக்கப்பட்டது காண்க. செம்மைபுரி - செம்மை - சிவத்தன்மை; புரிதல் இடைவிடாது சொல்லுதல்; செம்மைபுரி நா - என்றது இடைவிடாது சிவன் றிறமே சொல்லும் தன்மையிற் பழகிய நா; "நான் மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" (தேவா) என்ற கருத்து இங்குப் பொருந்தக் காணத்தக்கது; "அண்ணலா ரடிகண் மறக்கினு நாம வஞ்செழுத் தறியவெப் பொழுது, மெண்ணிய நாவே யின்சுவை பெருக விடையாற தியம்பும்" (3241) என்று ஆசிரியர் விரித்தருளியமையும் காண்க. இன்பமுறும் காதல் - பஞ்சாக்கரத்தினை எண்ணும்போது இன்பம் வருகின்ற காதலுடன் பயிலல் வேண்டும் என்பதாம். "காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, யோதுவார்." (தேவா.) நமச்சிவாய நற்பதமே - அஞ்செழுத்து இறைவரது திருநாமமாதலின் பதம் என்றார்; "திருநாம மஞ்செழுத்தும் செப்பா ராகில்", "அஞ்சுபதம்" (தேவா); நன்மையாவது வீடுபேறு தரும் தன்மை. ஏகாரம் பிரிநிலை. எடுத்து ஓதி - உரிய ஒலிபெற ஓதி; மான்தம் மந்தம் உரை என்ற மூன்றனுள் உரை - எனப்படும் நிலையில் ஓதி. வாசகம் = பாஷியம்; மந்தம் - உபாஞ்சு என்பர். ஒருநாள் போல் வருநாளில் - ஒருநாள் போலவே எல்லா நாள்களினும்; வலம் வரும் நாட்களில் எல்லா நாட்களினும் என்பது குறிப்பெச்சம்; வருதல் - வலம் வருதல். ஒழுகிவரும் என்றலுமாம். நாளில் - காலத்தில் என்ற பொருளில் வந்தது. நாளில் எழுந்தார் - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க |
|
|