பாடல் எண் :3596

குழிவா யதனிற் குறிநட்டுங் கட்டுங் கயிறு குளக்கரையில்
இழிவாய்ப் புறத்து நடுதறியோ டிசையக் கட்டி யிடைதடவி
வழியால் வந்து மண்கல்லி யெடுத்து மறித்துந் தடவிப்போய்
ஒழியா முயற்சியாலுய்த்தா ரோது மெழுத்தஞ் சுடனுய்ப்பார்,
5
(இ-ள்.) குழிவாய்....கட்டி - குளத்தினுள் அகழுங் குழியின் ஓரத்தில் குறியாகிய கோல்நட்டு அதிற் கட்டிய கயிற்றினைக் குளத்தின் கரையின் மேல் தணிவான உயரத்தில் புறத்திலே நட்ட தறியினுடனே பொருந்தும்படி கட்டி; இடைதடவி....போய் - இடையிலே அக்கயிற்றைத் தொட்டுத்தடவிக் கொண்டு அவ்வழியினாலே வழிபிழையாது இறங்கி வந்து மண்ணைத் தோண்டி எடுத்துப் பின்னும் முன்தடவிய அவ்வழியே மேலே போய் இவ்வாறு; ஒழியா....உய்ப்பார் - இடையறாத முயற்சியுடன் மண்ணைக் கொட்டினார்; ஓதும் எழுத்து அஞ்சுடன் உய்ப்பார் - இச்செயலில் இடையறாது ஓதும் திருவஞ் செழுத்தினோடு தம்மைச் செலுத்துவாராய்,
(வி-ரை.) கண்காணாத தண்டியடிகள் குளத்தினுள் ஒழுங்குபட இறங்கிக் கரையினை அகழ்ந்து எங்ஙனம் மண்ணை யெடுத்து மேல் இட்டனர் என்ற தொழில் செய் விவரம் கூறப்பட்டது. அவர் மனக்கண்கொண்டு உள்ளே நிச்சயித்துத் திட்டம் செய்து பின்னர்ப் புறத்திற் செயல் செய்தனர். பூசலார் நாயனாரும், வாயிலார் நாயனாரும் மனவாலயங்களை அமைத்து வழிபட்ட வரலாறுகள் காண்க. சிவாகமங்களுள் சிவபூசை முறையில் அந்தரியாகம் என்ற பகுதி இத்தன்மை கொண்டது; "அந்தரியாகந் தன்னை முத்தி சாதனமாக வறைகுவர்" என்பது சிவஞான சித்தியார்: புறச்செயலுக்கு முற்பட அகச்செயல் யாவர்க்கும் வேண்டுமாயினும், இங்குத் தண்டியடிகள் புறக்கண் காணாராயினும் அகக்கண் கொண்டு செய்த திருத்தொண்டினது இச்சிறப்பின் அருமையினைத் தனித் தனிப் பகுதிகளாகப் பிரித்து இவ்வாறு விரிவாய் ஒரு பாட்டினாற் கூறியருளி இதன் பெருமையினை உபதேசித்தருளியது ஆசிரியரது தெய்வக் கவிநலம். இது குறிக்கவே முன்னர்க் "காணுங் கண்ணாற் காண்பதுமெய்த் தொண்டே யான கருத்துடையார்" (3593) என்று எடுத்துக்காட்டிய திறமும் காண்க.
குழிவாய் - குளத்தினுள்ளே மண்ணை அகழ்ந்து குழியாக்கும் இடம்.
குறி நட்டு - குறியாக - குறி காட்டுதற்கு ஒரு தறியினை நட்டு; கரையின்மேல் முதலில் தறிநட்டுப் பின்னர்க் குழிவாயின் நடுவராயின் வழி பிழைத்து நேர் காணலாகாமையின் முதலில் அகழவேண்டிய குழிவாயிற் குறிநட்டார், அகழ்ந்தெடுத்தலே செயற்குறிப்பாதலின்; இது தொழிற் குறிப்பின் நுட்பம்.
குளக்கரையின் இழிவாய் - இழிவு - கையாற் பற்றித் தடவுதற்குரிய தணிந்த இறக்கமான இடம் என்பதுமாம்.
குளக் குலையின் - என்பது பாடமாயின் குலை - கரை என்க. புறத்து - கரையின் மேலே புறத்தே; கரையின் புறத்தே குறி நடுதலே கயிற்றைத் தளரவிடாது தாங்கும் வலிமை தருவதாம்.
இடை தடவுதல் - கண் காணாராதலின் வழி பிழையாது உதவும் இந்தச் சாதனம் வேண்டற் பாலதாயிற்று.
ஓதும் எழுத்தஞ்சு உடன் உய்ப்பார் - மண் அகழ்ந்து கொட்டும் இத்தொண்டினை உடல் செய்ய அதனுடனே வாயினால் திருவஞ் செழுத்தினை ஓதும் தொண்டும் செய்தனர் என்பது; இங்கு உய்த்தல் தம்மைச் செலுத்துதல் என்ற பொருளில் வந்தது; இறைபணி நிற்பாரெல்லாம் எப்போதும் திருநாமமாகிய திருவைந்தெழுத்தினை உரு எண்ணியே செய்தல் வேண்டும் என்பது விதி. முன்னர்த் திருக்கோயில் வலம் வரும்போதும் இவ்வாறு செய்தமை கூறப்பட்டது (3594) காண்க; வாயினாலும் மனத்தினாலும் வேறு வேறு பேசியும் எண்ணியும் தொண்டு செய்தல் பயன்தராததுடன் அபசாரமுமாம்; திருத்தொண்டு செய்வோர் இதனைக் குறிக்கொள்வாராக என்று ஆசிரியர் இங்கு இருமுறை வற்புறுத்திக் காட்டி உபதேசித்தருளினர். மேலும் (3610) இவ்வாறே காண்க.
உய்ப்பார் - முற்றெச்சம்; உய்ப்பார் - கல்ல என வரும் பாட்டுடன் முடிக்க.