நண்ணி நாளு நற்றொண்டர் நயந்த விருப்பான் மிகப்பெருகி அண்ண றீர்த்தக் குளங்கல்லக் கண்ட வமணர் பொறாராகி எண்ணித் தண்டி யடிகள்பா லெய்தி முன்னின் றியம்புவார் "மண்ணைக்கல்லிற் பிராணிபடும் வருந்தவேண்டா"வென்றுரைத்தார். | 6 | (இ-ள்.) நண்ணி....கல்ல - பொருந்தி நாள்தோறும் மிகுந்த நல்ல தொண்டராகிய தண்டியடிகள் உட்கொண்ட விருப்பத்தினாலே செய்யும் இத்திருத்தொண்டில் மிக மேம்பட்டு இறைவரது தீர்த்தக் குளத்தினை அகழ; கண்ட....இயம்புவார் - அதனைக் கண்ட அமணர்கள் பொறுக்க லாற்றாதவர்களாகித் தமக்குள்ளே ஆலோசித்துத் தண்டியடிகளிடம் வந்து அவர் முன்பு நின்று சொல்வார்களாய்; மண்ணை....என்றுரைத்தார் - மண்ணை அகழ்ந்து எடுத்தால் அதனுள் வாழும் பிராணிகள் மடியும்; நீரும் வீணே வருத்தவேண்டாம் என்று கூறினார்கள். (வி-ரை.) நயந்த விருப்பு - மேற்கொண்ட அழுந்திய பெரு விருப்பம். நற்றொண்டர் - நன்மையாவது உண்மையினின்றும் மாறுபட்ட கருத்தொன்றுமில்லாது சிவன் திருவடியிலே செலுத்திய மனநிலை; "ஆதரவால்" (3595) என்ற கருத்து. மிகப் பெருகி - தொடக்கத்தில் ஒரு ஆளின் சிறுவேலையாய்க் காட்டியது பின்னர் முயற்சியினாற் பெரிய பணியாக உலகுக்கு வெளிப்பட்டு. கண்ட - கண்ணில்பட்டு மாறுபாடு கொண்டு உறுத்த. பொறாராகி - பொறாமையுடையாராகி; "அழுக்கா றெனவொரு பரவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்து விடும்" என்றபடி இஃது இவ்வமணர்களின் கேட்டுக்குக் காரணமாயினமை காண்க. இங்குப் பொறாமை, சைவம் விளங்குதலின் மேற்பூண்ட சீற்றம்; இனி அஃதேயுமன்றித் தமது ஆக்கிரமிப்பாகிய அனுபவ இடங்களை இழக்க வேண்டி வரும் சுயநலம் பற்றிய சீற்றமுமாம். எண்ணி - தம்மில் கூடிச் சதியாலோசனை செய்து; இஃது அவர் இயல்பு; அரசுகள் சரிதத்தில் தம் வயப்பட்ட பல்லவ அரசன்பால் வஞ்சனையாக அறிவித்த நிலையும், பிள்ளையார் சரிதத்திலும் அவ்வாறே தம் வயப்பட்ட பாண்டியன்பால் அறிவித்த நிலையும், பிறவும் இங்குக் கருதத்தக்கன. மண்ணை...வேண்டா என்று - இஃது இதோபதேசம் போலக்காட்டி உலகை ஏமாற்றும் வஞ்சகச் சொல்லாதல் காண்க. இவ்வாறே தத்தம் சுயநலத்தை உள்ளே பொதிந்து மறைத்து உலகை ஏமாற்றி, வஞ்சிக்கும் நீதி மொழிகளைக் கூறிச், சீவனோபாயம் காணும் மக்கள் பலரை உலகியலிற் காணலாம்; ஆனால் இவர்கள் வஞ்சனை, ஏமாந்த மக்களிடையேயும் சிவகாலம் செல்லுமேயன்றி முற்றும் செல்லாமை பலதிறத்தானும் அறியப்படும். மறைந்து எங்குமுள்ளவராகிய இறைவரை வஞ்சிக்க எவ்வாற்றானும் இயலாமை ஈண்டுச் சரித விளைவில் உடன் காணப்படும்; உண்மை யனுபவமும் அவ்வாறேயாம். உண்மை என்று பிழையாது! வருந்த வேண்டா - நீரும் வீணே வருந்த வேண்டா என்று அவர்பால் கருணையாகக் காட்டிய பொய்யாகிய சீவகாருணிய வொழுக்கம்; வருத்த என்பது பாடமாயின் பிராணிகளை வருத்துதல் பாவம் என்று பொய் உபதேசநிலை மேற்கொண்டவாறாம். |
|
|