பாடல் எண் :3598

மாசு சேர்ந்த முடையுடலார் மாற்றங் கேட்டு மறுமாற்றந்
தேசு பெருகுந் திருத்தொண்டர் செப்பு கின்றார் "திருவிலிகாள்!
பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவ தறிய வருமோ வுமக்?" கென்றார்.
7
(இ-ள்.) மாசு....கேட்டு - அழுக்குப் படிந்த முடைநாற்றம் பொருந்திய உடலினையுடைய அமணர்கள் கூறிய மாற்றத்தினைக் கேட்டு; மறுமாற்றம்....செப்புகின்றார் - அதற்கு எதிர்மொழியாக ஒளிபெருகும் திருத்தொண்டர் சொல்கின்றாராகி; "திருவிலிகாள்!....உமக்கு" என்றார் - மெய்த்திரு வில்லாதவர்களே! பூசும் நீற்றினையே சாந்தம் என்று அணிந்த சிவபெருமானுக்கு ஆகிய திருப்பணிகள் எவையாயினும் அவையெல்லாம் குற்றமில்லையாகிய நல்ல அறமேயாவனவாம் என்ற உண்மை உமக்கு அறியவருமோ?" என்று சொன்னார்.
(வி-ரை.) மாசு சேர்ந்த முடை உடலார் - கழுவாமையினால் அழுக்குப் பொதிந்த உடல் உடையவர்கள் அமணர்; உடல் கழுவும்போது அங்கங்கும் உள்ள புழுக்கள் முதலியவை சாகும் என்பது அவர்களது கொல்லாமை எனும் கொள்கையின் ஒழுக்க அளவு. முடை - முடைநாற்றம்.
மாற்றம் - சொல்; உண்மையின் மாறுபாடு என்ற குறிப்புமாம்.
மறுமாற்றம் - அமணர் சொல் மாற்றம் (மாறுபாடு) என்னில், அதற்கு மறுதலை - (உண்மை) என்ற குறிப்பும் காண்க.
தேசுபெருகும் - தேசு - ஞான ஒளி. பெருகும் - இனி, இச்சரித நிகழ்ச்சியிலே கண் ஒளியும் பெற்று மிகும் நிலைக்குறிப்பு. "நட்டமிகு தண்டி" (தொகை)
திருவிலிகாள் - திரு - சிவனடிமைத்திறம்; சிவச்சார்பு. "உருவிலான் பெருமையை யுளங்கொ ளாதவத், திருவிலார் - தங்களைத் தெருட்டலாகுமே" (தேவா) என்ற திருவாக்கு ஈண்டுக் கருதத் தக்கது.
பூசுநீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக்கு - நீறு - சங்காரத்தையும், சாந்தமெனப் புனைதல் - மகிழ்ச்சிக் குறிப்பாகிய சிருட்டியினையும் குறிப்பாலுணர்த்தின; எனவே இவை இறைவர் தொழில்களாக, அவரது பணியிலே பிராணிகள் இறந்துபட நேரிட்டால் அது அவற்றுக்கு உய்தி தரும் தொழிலே யாதலின் அறமெனப்படும் என்றதாம். ஆதலின் சிவன் றிருப்பணியிற் கொலைபற்றி உயிர்க்கு இம்சை முதலிய குற்றங்கள் கூறுதற்கு இயைபில்லை என்றபடி. ஆன பணி - என்றது மிக்கருத்து. திருநந்தவனம் திருக்கோயில் முதலிய இறைவர் தலங்களுக்கு இடையூறாக உள்ள அரசமரம் முதலிய புண்ணிய மரங்களையும் வெட்டி அப்புறப் படுத்தலாம் என்ற விதி இக்கருத்துடையது. எறிபத்த நாயனார் - கோட்புலி நாயனார் முதலிய பெரியார் சரிதங்களின் நிகழ்ச்சிகளின் உள்ளுறையும் கருதுக; சீவகாருண்ணியம் என்றதன்பாற் பட்ட பசு தர்மங்களுக்கும் சிவன் பணிகளாகிய பதி தர்மங்களுக்கும் உள்ள வேறுபாடு ஈண்டு உணர்ந்து மனங்கொள்ளுதற்பாலது; இவை முன்னர் அரசுகள் புராணத்துள் "அறங்கள் செய்வாராய்" (1300), "காவளர்த்தும்" (1301) என்ற இடத்தும், பிறாண்டும் விளக்கப்பட்டன. இந்நுட்ப மறியாதார் உலகியலுள் வைத்துப் பலவாறு பிதற்றியொழிகுவர்; சிவனுக்காக உள்ள பதி புண்ணியப் பொருள்களைச் சீவர்களுக்கு ஆக்கிப், பசு புண்ணியங்களாகச் செய்தல் சிறந்ததென்று முழக்கம் செய்து உலகை மயக்கி யுழல்கின்றார்கள்; இது காலக் கொடுமை!; இங்குத் தீர்த்தக் குளத்தின் இடத்தின் குறைபாட்டினை நீக்க மக்கள் குடியிருந்த மனையிடங்களை அகழ்ந் தெறிந்தார் தண்டியடிகள்! இஃது இறைவர் றிருவுள்ளக் குறிப்பினை அணுகி அங்கீகாரமும் பெற்றது. ஆனால் இந்நாள் மாக்கள் கோயில் குளங்களைத் தூர்த்துக் குடியிருக்கும் இடமாக்க முற்படுகின்றனர். அந்தோ! கொடிது! கொடிது!!
ஆசிலா நல் அறமாவது - ஆசு இல்லாமையாவது - குற்றங்களைப் போக்குதல்; இல்லையாகச் செய்தல்; நன்மையாவது வீடுபேறாகிய நிலைத்த இன்பத்தைத் தருதல். அஃதாவது சிவனுக்கான பணிகளாகிய இவை பாச நீக்கமும் சிவப்பேறும் தந்து பரம்பரையில் வீடு பெறுவிப்பன; இதனால் ஏனை அறமெனப் பட்டன எல்லாம் அவ்வாறன்றித் துன்பம் தந்து பிறவிக் கேதுவாவன என்பதும் போதரும்.
அறியவருமோ உமக்கு - நீரும், உம்மைப்போன்ற பிறரும் இந்நுட்பமாகிய உண்மைகளை உணரும் ஆற்றல் இல்லீர் என்பது. இதுவே இந்நாள் மாக்கள் தன்மையுமாயிற்று.
மாசுபடர்ந்த - என்பதும் பாடம்.