பாடல் எண் :3599

அந்த மில்லா வறிவுடையா ருரைப்பக் கேட்ட வறிவில்லார்
சிந்தித் "திந்த வறங்கேளாய் செவியு மிழந்தா யோ?"வென்ன
"மந்த வுணர்வும் விழிக்குருடுங் கேளாச் செவியு மற்றுமக்கே
இந்த உலகத் துள்ளன"வென் றன்பர் பின்னு மியம்புவார்,
8
(இ-ள்.) அந்தம்....உரைப்ப - எல்லையில்லாத அறிவினையுடைய தண்டியடிகள் முன்கூறியபடி சொல்ல; கேட்ட....என்ன - கேட்ட அறிவில்லார்களாகிய அமணர்கள் எண்ணமிட்டு நாங்கள் கூறிய இந்த அறச்சொல்லினைக் கேளா தொழிந்தாய்; (கண் இழந்ததோடு) செவியும் இழந்தனையோ? என்று கூற; மந்த....என்று - மந்தமாகிய உணர்வும் விழியின் குருட்டுத் தன்மையும்கேளாத செவிகளும் மற்று உங்களுக்கே இந்த உலகத்தில் உள்ளன என்று கூறி; அன்பர்....இயம்புவார் - அன்பராகிய தண்டியடிகள் மேலும் சொல்வாராகி,
(வி-ரை.) அந்தமில்லா அறிவுடையார் - அறிவில்லார் - அழிவில்லாத அறிவும், சிறிதும் அறிவின்மையும் என்றது உண்மையறிவின் இயல்பு குறித்தற்கு; ஈண்டு அறிவு உண்மை ஞானம்; உலகியலில் அறிவெனப்பட்டு நிலவு வனவெல்லாம் உண்மை யறிவில்லாத மடமையின்பாற் பட்டன என்று பாகுபடுத்தப்படவேண்டுமென் றறிவித்தவாறு.
சிந்தித்து - மேற்சொல்ல லாவதனை எண்ணி; அறிவில்லார் சிந்தித்து - சிந்தித்தும் மேல் வருமாறு அவச்சொல்லே கூறி அவமே செய்கின்றார்களாதலின் அதற்கு உண்மை அறிவின்மையே காரணம் என்று காட்டியவாறு.
இந்த அறம் - அவ்வமணர் கொள்கையின்படி கண்ட அறம் எனப்பட்ட ஒழுக்கம். இஃது அறமல்லாமை முன் உரைக்கப்பட்டது.
செவியும் இழந்தாயோ? - செவியும் - கண்ணிழந்த தன்றி என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; செவியு மிழத்தல் - தமது அறமொழி கேட்டு அமைந்து உடன்படாமையாற் பெறப்படுமென்பது அவர்கள் கூறும் குறிப்பு; இவ்வாறு காரணமின்றி வசைமொழி கூறி வருத்தம் விளைப்பதும், மேல் (3601) கொட்டினையும் கயிறு, தறி, யிவற்றையும் உடன் பறித்து வன்கண்மை செய்வதும் அமணர்களது அறம் கூறும் வெற்றுரைகள் போலியா யொழியும் தன்மையினைப் புலப்படுத்துவன. அரசுகள் பிள்ளையார் சரிதங்களினும் இவ்வாறே இவ்வமணர்களின் போலி அறவுரைகளும், கொல்லாமையுள் மறைந்து செய்யும் கொடுமைகளும் காணப்படும்.
"மந்த...உள்ளன" என்று - மந்த - வுணர்வு - உண்மை நிலையினை உட்கொள்ளாதபடி தடுக்கும் வகையில் தடித்த உணர்வு; விழிக்குருடும் கேளாச்செவியும் - அமணர்கள் தண்டியடிகள்பால் ஏற்றிய குறைகள்; மற்று உமக்கே - நீவிர் கூறியபடி என தன்று; என்னின் மாறுபட்ட உமக்கே அவை உண்டு என்பது. மற்று - வேறாகிய; ஏகாரம் பிரிநிலை; இறைவன் புகழ் உட்புகாமையால் மந்தவுணர்வும், திருப்பணியின் உண்மைத் தன்மையினைக் காணாமையால் குருடும், ஞானநூல் முடிபுகளைச் சொல்லியும் கேளாமையால் செவிடும் உமக்கே என்றார்.
இந்த உலகத்து உள்ளன - நேர் காணும்படி இங்கும் உள்ளன எனின் மறுமையில் உங்கள் கீழ் நிலைக்கு இதனினும் வேறு கண்கண்ட சான்று வேண்டுமோ என்றது குறிப்பு.
இயம்புவார் - முற்றெச்சம்; இயம்புவார் - என்பார் - எடுத்துரைத்தார் எனவரும் பாட்டுடன் முடியும்.
அன்பர் - அன்பு காரணமாகக் கூறியதன்றிச் சினம் முதலிய மாறுகோள் நிலையாற் கூறியதன்று என்பது குறிப்பு.