பாடல் எண் :3600

"வில்லா லெயின்மூன் றெரிந்தபிரான் விரையார் கமலச் சேவடிகள்
அல்லால் வேறு காணேன்யா:னதுநீ ரறிதற் கா?"ரென்பார்,
"நில்லா நிலையீ ருணர்வின்றி நுங்கண் குருடாயென்கணுல
கெல்லாங்காண்பான் யான்கண்டாலென்செய்வீ"ரென்றெடுத்துரைத்தார்.
9
(இ-ள்.) வில்லால்....என்பார் - (மேரு) வில்லினாலே மும்மதில்களையும் எரித்த இறைவரது மணம் பொருந்திய தாமரை போன்ற செம்மையுடைய திருவடிகளை யல்லாது வேறு ஒன்றையும் நான் காணமாட்டேன்; அத்தன்மையினை அறிதற்கு நீர் யாவர்?" என்பாராய்; நில்லா நிலையீர்....எடுத்துரைத்தார் - நிலையில்லாத நிலையினையுடையீர்களே! உணர்விழந்து உமது கண்கள் குருடாக ஆகி "உலகமெலாம் காணும் பொருட்டு என் கண்கள் யான் காண நேர்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று எடுத்துச் சொன்னார்.
(வி-ரை.) வில்லார்....ஆர் என்பார் - எரித்தபிரான் என்று இத்தன்மையாற் கூறியது மாறுபட்டாரது மும்மதிலும் ஒரு நொடியில் அழித்தமை போல நுங்களையும் இன்னே அழிவுபடுத்த உள்ளவர் என்பது குறிக்கத்தது.
அல்லால் வேறு - காணேன் - எதிர்மறை உறுதி குறித்தது.
அது அறிதற்கு நீர் ஆர் - அதனை அறிதற்கு உமக்கு என்ன தகுதி; "அடியார்களில்யா னாரா வணைவாய்" (569); "என்மனங் குடிகொண் டிருப்பதற் கியானா ரென்னுடை யடிமைதான் யாதே" (திருவி); அது - அதனை; அடிமைத் திறத்தினை அறிதல் சிவன் அருளுடையார்க் கன்றி யியலா தென்பதாம். வேறு காணேன் - காண்பதாவது - “கழல் மனத்துக்கொண்ட கருத்தினை நோக்கும் குறிப்புÓ (3592) என்ன மனக்கண் காட்சி.
“நில்லா நிலையீர்...என்செய்வீர்? - இது தண்டியடிகள் அமணர்பாற் கூறிய சூளுரை. இந்தச் சூள் உரைத்தல் சிவன்றிருவடிகளே பதிந்த திண்ணிய பேரன்பின் உறைப்பினாலன்றி இயைவதன்று. நில்லா நிலை - தெளியாதொரு பொருளே பொய்யு மெய்யுமாம் என்னும் புரை நெறியாகிய அமண் சமயக் கொள்கை. "அத்தி நாத்தி" என்னும் அமணர்களது மந்திரப்பொருள். இவையெல்லாம் முன்னர் விரித்துரைக்கப்பட்டன. உணர்வின்றி - உங்களுக்கு உணர்வு இல்லாமற் போகவும்; கண் குருடாய் - உங்களது இப்போது ஒளியுள்ள கண்கள் ஒளியிழந்து குருடாகவும்; உலகெல்லாம் காண்பான் - உலகத்தார் முன்பு எல்லாரும் காணும்படி; "நாட்டாரறிய" (1898); இனி, நான் இதுவரை இறைவன் திருவடியினையே மனக்கண்ணாற் கண்டிருந்தேன்; அதனோடு அத்திருவடியினை உலகெல்லாப் பொருள்களிலும் புறக்கண்ணாலும் யான் காணும்படி என்றுரைத்தலுமாம். காண்பான் - காணும்பொருட்டு.
என் செய்வீர் என்று எடுத்துரைத்தார் - அவர்கள் ஏற்ற மறுமொழி சொல்லும்படி வினவி எடுத்துச் சொன்னார்.
நிலையீர்க் குணர்வின்றி - என்பதும் பாடம்.