அருக ரதுகேட் "டுன்றெய்வத் தருளாற் கண்ணீ பெற்றாயேற் பெருகு மிவ்வூ ரினினாங்கள் பின்னை யிருக்கி லோ"மென்று கருகு முருட்டுக் கைகளாற் கொட்டை வாங்கிக் கருத்தின்வழித் தருகைக் கயிறுந் தறியுமுடன் பறித்தார் தங்க டலைபறித்தார். | 10 | (இ-ள்.) அருகர் அதுகேட்டு - அமணர்கள் அதனைக் கேட்டு; "உன் தெய்வத்து....இருக்கிலோம்" என்று - "உனது தெய்வத்தின் அருளினாலே நீ கண் பெற்றாயானால் பெருகுகின்ற இந்தவூரில் நாங்கள் அதன் பின்னர் இருக்கமாட்டோம்" என்று சொல்லி; கருகு....உடன் பறித்தார் - கரிய முருடுகளையுடைய கைகளினாலே அடிகளது கொட்டினை வலிந்து பற்றிக் கருத்தின் வழியே நிலை தருகின்ற கயிற்றினையும் நடுதறியினையும் உடனே பறித்தார்கள்; தங்கள் தலை பறித்தார் - தங்கள் தலைமயிரைப் பறிக்கும் நோன்புடையார்கள். (வி-ரை.) உன் தெய்வத்து....இருக்கிலோம் என்று - இஃது அடிகளுக்கு அமணர் கூறிய மறுமொழி; கோபமிகுதியாற் கூறியவாறு காண்க; திருவாலவாயிலும் இவ்வாறே "தனிவாதி லழிந்தோ மாகில் வெங்கழு வேற்று வானிவ் வேந்தனே" (2696) யென்று அமணர் கூறியதும், அதற்கு அரசன் "செற்றத்தாலுரைத்தீ ருங்கள் செய்கையு மறந்தீர்" (2697) என்றதும் இங்கு நினைவு கூர்தற் பாலன. உன் தெய்வத்து - "உன்றெய்வ மென்றெய்வமென் றெங்குந்தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றது" (தாயுமா); தெய்வத்தன்மையினையும் இவ்வாறு வேறுபடுத்துக் கூறும் அமணர்களது வன்கண்மை காண்க. பெருகும்....இருக்கிலோம் - பெருகும் இவ்வூர் - திருவாரூர்; பெருகுதல் - ஈண்டு அமணர் உட்கொண்டு கூறிய கொள்கையாவது தங்களுக்கு இதுவரை உலகியலாக்கமும் ஊக்கமும் தந்து பெருகுதல்; பின்னை இருக்கிலோம் - அருள் வெளிப்படக் கண்ட பின்னர் அவ்வழியே சார்ந்து அறிவுடை மக்கள் உய்ய நினைப்பார்; இவ்வமணர் கடுந்தீவினை வயத்தராதலானும், அவரது தீவினைகளுக் கேற்றதுன்பம் அனுபவிக்க வுள்ளாராதலானும், அருள் கண்டபின்னர் அங்கிருந்து அகல்வோம் என்றனர். இவ்வாறு வருவது இறைவரது திரோதான சத்தியின் செயல். அமணர்களது கொடுமையும் புலனாம். அவர்களது செயல்களின் பொறமையையும் காண்க. கருகு....உடன் பறித்தார்- அந்தகராய், ஒருவராய், வலிமையின்றி நின்றாரென்ற எண்ணத்தால் அடிகளாரை இவ்வாறு கொடியவன்கண்மை செய்தது அமணர்களது வன்கண்மையாகிய கீழ்மையினைப் புலப்படுக்கும். கொட்டு - கூடை; தறி - கரையினும் குழிவாயினும் கயிறு பிணிக்கும் நடுதறி (3596); கயிறும் தறியும் உடன் - இவை இறுகப் பிணிக்கப்பட் டிருந்தமையால் இரண்டையும் உடன்சேர்த்துப் பறிக்க வேண்டியதாயிற்று; உடன் என்றது இக்கருத்து. தங்கள் தலைபறித்தார் - வினைப்பெயர்; தலைபறிக்கும் நிலையுடைய அமணர் இதனையும் உடன் பறித்தார் - என்பதுபோல வினைமுற்றாகவே கொண்டு கொட்டும் கயிறும் தறியும் பறித்தனாலே தமது தலையினையே பறித்தவராயினர்; அஃதாவது தமது கண் - செவி - உணர்வு - நிலை முதலிய தன்மைகளை எல்லாம் இழக்க நேர்ந்தவராயினர் என்ற குறிப்புப்பட உரைக்கவும் நின்றது; இப்பொருளில் இறந்த காலம் விரைவுப் பொருட்டு. கருத்தின் வழித் தரு - கருதிய வழிச் செல்லும் நிலையினைப்பெற உதவும். தலை பறித்தார் - தீர்த்தக் குளத்தில் இடம் ஆக்கிரமித்தல், அதனைச் செம்மை செய்வோரைத் தடுத்து அறம்போல வஞ்சமொழி கூறுதல், அவரை வைதுரைத்து இகழ்தல், வன்கண்மை செய்தல் இத்துணைக் கேடுகளையும் தம் நலங்கருதிச் செய்தாராதலின் அதன் பொருட்டுத் தெய்வத்தால் தண்டிக்கப்படுதலைத் தாமே தேடிக்கொண்டனர் என்பதாம்; இத்துணையும் உட்கொண்டு "வெய்ய தொழிலார் செய்கை" (3602) என்பது காண்க. இத்துணையும் கொடுமைகளுக்குள்ளாகிப் பின் திருவருள் துணை செய்யச் சமணர் நிலையிழந்தனர் என்பது கண்டும், சைவத்திறத்தினர்மேல் சமயச் சகிப்பில்லாத கொடுமையாளர் என்று அடாது தூற்றி யலைவாரும் பலர்; கருணையின் உருவேயாகிய ஆளுடைய பிள்ளையார்பால் சீவகாருண்யமின்றி அமணரைக் கழுவேற்றினர் என்று கூசாது அடாப்பழி கூறும் பாதகர் வேறெதுதான் சொல்லமாட்டார்? |
|
|