பாடல் எண் :3604

நெஞ்சின் மருவுங் கவலையினை யொழிநீ; நின்கண் விழித்தந்த
வஞ்ச வமணர் தங்கண்கண் மறையு மாறு காண்கின்றாய்;
அஞ்ச வேண்டா"வென்றருளி, யவர்பா னீங்கி யவ்விரவே
துஞ்சு மிருளி லரசன்பாற் றோன்றிக் கனவி லருள்புரிவார்.
13
(இ-ள்.) "நெஞ்சில்....அஞ்சவேண்டாம்" என்றருளி - மனத்துட் பொருந்தும் கவலையினை நீ தீர்வாயாக; உனது கண்கள் விழித்து அந்த அமணர்கள் தமது கண்கள் மறையுமாறு நீ காண்பாய்; அஞ்ச வேண்டாம் என்று அருளிச் செய்து; அவர்பால் நீங்கி - அவரிடம் நின்று மறைந்தருளி; அவ்விரவே....அருள்புரிவார் - அந்த இரவிலே உறங்கியிருக்கும் இராப்போதிலே அரசனிடத்தில் கனாவில் தோன்றி அருள் செய்வாராய்,
(வி-ரை.) நெஞ்சின்....நீ - "தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது" (குறள்) என்ற கருத்து ஈண்டுச் சிந்திக்கற்பாலது; மனக்கவலையினை மாற்றும் ஆற்றல் இறைவனுக்கும் அவனருள் வழி அவனேயாய் நிற்கும் எந்தம் பெருமக்களாகிய பரமாசாரியார்களுக்குமே இயல்வதாகும். ஏனையோர் செய்வனவெல்லாம் உபசார மாத்திரையா யொழியுமென்க; நீ ஒழி - என்பது ஒழிநீ என வந்தது விரைவுபற்றி; அன்றியும் கண்விழித்துக் காண்கின்றாய் எனப் பின்வரும் வினைகட்கும் எழுவாயாகிய நீ என்பது அவற்றின் அணிமையில் நிற்கவேண்டிய நிலைபற்றியுமாம். "கவலை ஒழி" என்ற துன்ப நீக்கத்தினும் "காண்கின்றாய்" என்ற இன்ப ஆக்கத்தின் அணிமையில் அடிகளாரை ஆக்கும் கவிநயக் குறிப்பும் காண்க.
காண்கின்றாய் - காண்பாய் என்னும் எதிர்காலத்தை நிகழ்காலத்தாற் கூறியது விரைவும் உறுதியும் குறித்தற்கு.
நின்....மறையுமாறு - இதுவே அடிகள் அமணர்கள்பால் உரைத்த சூளுறைவு; இறைவரருளை முன்னிட்டு உரைத்தாராதலின் அதனை உண்ணின்று கேட்ட இறைவர் அவர்தாம் வேண்டுமதனையே யருளுகின்றார். வஞ்ச அமணர் - வஞ்சனையாற் கூறிய அறவுரையினைக் குறித்தது. மறையும் ஆறு - மறையும் நிலை; மறையும் மாறு எனப்பிரித்து அடிகளது விழியாநிலை அமணர்களது விழித்த கண்ணிற் கண்டது மாறி, அவர்களது விழியாதநிலை அடிகளது விழித்த கண்ணிற் காண என்று, இடமும் நிலையும் மாறப் பெறும் என்ற குறிப்புப்பட உரைக்கவும் நின்றது.
அஞ்ச வேண்டா - இவ்வாறு அபயங்கொடுக்கும் வன்மை சிவபெருமானுக்கேயியைவதாம், முழுமுதற்றன்மையும் எல்லாம் வல்லவ ராதற்றன்மையும் உடைமையால் என்க. "வெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தால் நமரங்காள், அஞ்சலெனுஞ்சொ லார்சொல வல்லார் நமரங்காள், மஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள், நஞ்ச மயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்" (குமரகுருபரர் - சிதம்பரச் செய்யுட் கோவை - 40). அரனருள் பெற்றாரும் அஞ்சலளிக்க வல்லார்: "பயப்படேல்" (2377).
அவ்விரவே அரசன்பால்....அருள் புரிவார் - அடிகளையும் அரசனையும் இருவரையும் பொருத்தல் செய்யும் நிலையாதலின் இருவர்பாலும் சாரும் வகையை இவ்வொரு பாட்டிற் கூறிய நயம் காண்க. அவ்விரவே - என்ற கருத்துமிது. இறைவரது திருவருளின் விரைவும் குறிப்பு. துஞ்சும் இருளில் - துயிலும் வேளை.
தங்கள் கண் - என்பது பாடம்.