"தண்டி நமக்குக் குளங்கல்லக் கண்ட வமணர் தரியாராய் மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டா னவன்பா னீமேவிக் கொண்ட குறிப்பா லவன்கருத்தை முடிப்பா"யென்று கொளவருளித் தொண்ட ரிடுக்க ணீங்கவெழுந் தருளினாரத் தொழிலுவப்பார், | 14 | (இ-ள்.) "தண்டி....முடிப்பாய்" என்று கொள அருளி - தண்டி நமக்காகக் குளம் கல்லுதலைக் கண்ட அமணர்கள் பொறாதவர்களாகி வலிமை செய்து அந்தத் திருப்பணியைத் தடுத்துவிட அவன் வெகுண்டிருந்தான்; அவனிடம் நீ சென்று அவன் உட்கொண்ட குறிப்பினாலே அவனது கருத்தினை நீ முடிப்பாயாக! என்று அரசன் மனத்துட் கொள்ளும்படி அருளிச் செய்து; தொண்டர்....உவப்பார் - தொண்டரது இடுக்கண் நீங்கும்படி பண்ணி எழுந்தருளினார் அத்தொழிலினை மகிழ்வாராகிய இறைவர். (வி-ரை.) தண்டி....என்று - இஃது அரசனுக்கு இறைவர் உணர்த்தியருளியது. தண்டி என்றதனால் அவர் பெயரும், நமக்குக் குளம் கல்ல என்றதனால் அது சிவன்பணியாதலும், கண்ட அமணர் விலக்க - என்றதனால் புறச்சமயிகள் தீக்குணம்தலைநின்று செய்த கொடுமையும் சிவன்பணிக்கு இடையூறும், அவன்பால் நீ மேவி<\b> என்றதனால் அரசனாணை நடைபெறும் முறையும், கொண்ட குறிப்பால் - என்றதனால் சூளுறவு தெரிந்து முடிக்கவேண்டிய அமைவும், அவன் கருத்தை முடிப்பாய் - என்றதனால் அவர்மேற் கொண்ட பணிவிடையினை நீயே முற்றுவித்தலுடன் புறச்சமயிகளால் இனி இடையூறு நேராதவகை பண்ணவேண்டிய முடிபும் கூறிய நயம் கண்டுகொள்க; கொள - மனங்கொள்ள; கனவிற் கண்ட பொருள் நனவில் மறத்தலு முளதாதலின் அவ்வாறு மாறாது மனத்தினுள் நிலைபெற்றுணரும்படியும், ஐயங் கொள்ளாதபடியும். அத்தொழில் உவப்பார் - அடியார் இடுக்கண் நீங்கச் செய்யும் அத்தொழிலின் கண்மகிழ்ந்து அருளுவாராகிய இறைவர். தொழில் - திருப்பணி என்றலுமாம். நீங்க - நீங்கும்படி நியமித்த படியினால் அது நீங்கியதாக. |
|
|