பாடல் எண் :3606

வேந்தனதுகண் டப்பொழுதே விழித்து மெய்யின் மயிர்முகிழ்ப்பப்
பூந்தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப்புலரத்தொண்டர்பாற்
சார்ந்து புகுந்த படிவிளம்பத் தம்பி ரானா ரருணினைந்தே
ஏய்ந்த மன்னன் கேட்பவிது புகுந்த வண்ண மியம்புவார்,
15
(இ-ள்.) வேந்தன்....போற்றி - அரசன் அக்கனவினைக் கண்டு அப்போதே துயில் நீங்கி உடம்பில் மயிர்க் கூச்செறிய அழகிய கொன்றைப் பூவினைச் சூடிய இறைவரைத் துதித்து; புலர - பொழுது விடிய; தொண்டர்....விளம்பத் - திருத்தொண்டரிடத்துச் சார்ந்து தன்பாற் கனவில் நிகழ்ந்ததனைச் சொல்ல; (அதுகேட்டுத்) தம்பிரானார்....இயம்புவார் - தமது பெருமானாரது திருவருளை நினைந்து பொருந்திய அரசன் கேட்க இவ்வாறு புகுந்த நிலையினைச் சொல்வாராகி,
(வி-ரை.) அது கண்டு - கண்டு - கனவில் கண்டதும் கேட்டதுமாகிய நிகழ்ச்சிகளையும் குறித்தது.
அப்பொழுதே விழித்து - நல்ல கனாக்கள் கண்ட உடனே விழித்துப் பின் தூங்காது விழித்திருந்து திருநீறு அணிந்து இறைவரை நினைந்திருத்தல் வேண்டும் என்பது விதி.
புலர - பொழுது விடிய; விடிந்தவுடன் முதற் செயலாக அரசன் அக்கனவின்படி செயல் செய்யத் தொடங்கினான்; புலர என்றதனால் இக்கனவு வைகறைப் போதில் நிகழ்ந்த தென்பதும் கருதப்படும்.
தொண்டர்பாற் சார்ந்து - "அவன்பால் நீ மேவி" (3605) என்று ஏவல் பெற்றானாதலினால் அவரைத் தன்னிடத்துக்கு அழைக்காது அவரிடம் சென்று சேர்ந்து. "அவரழைக்க வொட்டான்" (பூசல் - பூரா - 13) பார்க்க. புகுந்தபடி - இறைவர் தனது கனாவில் அருளிய வரலாற்றின் படியினை.
புகுந்த வண்ணம் - நிகழ்ந்த செய்திகளை; இது - இயம்புவார் என்று கூட்டுக. இது - இவ்வாறு.